சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் சென்னையை அடுத்துள்ள தாம்பரத்திலிருந்து, சேலம் புறநகர் பகுதியான அரியானூர் வரையில் மொத்தம் 277.3 கிலோமீற்றர் தூரத்துக்குப் புதிய எட்டு வழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்காக 2,200 ஹெக்டேர் பரப்பளவு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது
இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டும், திட்டத்தினை கைவிட வலியுறுத்தியும் பல கட்டப் போராட்டங்களை விவசாயிகள் நடத்தியிருந்த நிலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மீது தடியடி தாக்குதல், கைது நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக நாம் தமிழர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேற்றையதினம் வழங்கிய தீர்ப்பில் விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.