வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெருந்தொகைப் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், வேலூர் தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்குத் தேர்தல் ஆணையகம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுகவின் துரைமுருகன் வீடு, அவரது குடும்பத்துக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் கடந்த மார்ச் 30ஆம் திகதி வருமான வரித் துறை சோதனை நடத்தியதில் இவ்வாறு பெருந்தொகைப் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்யவே துரைமுருகன் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அதிமுக, தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் முறைப்பாடு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையகத்தின் உத்தரவின் பேரில், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையகம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையக வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது