குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று செய்வாய்க்கிழமை (23) காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தேசிய துக்க தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதோடு, அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் காலை 8.30 மணி முதல் 8.33 மணி வரையிலான மூன்று நிமிடங்கள் துக்க தினம் அனுஸ்ரிக்கப்பட்டதோடு,மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு தேசிய துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டது. மேலும் மன்னார் பஸார் பகுதியில் உள்ள பல்வேறு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, வர்த்தக நிலையங்களில் கறுப்புக்கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளது.
அதேவேளை அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.