Home இலங்கை பங்களாதேஸ் இராணுவ அதிகாரி குண்டுத் தாக்குதல்களுக்கு முன் இலங்கைக்குப் பணம் அனுப்பினார்…

பங்களாதேஸ் இராணுவ அதிகாரி குண்டுத் தாக்குதல்களுக்கு முன் இலங்கைக்குப் பணம் அனுப்பினார்…

by admin

பணிநீக்கம் செய்யப்பட்ட பங்களாதேசிய இராணுவ அதிகாரி குண்டுத் தாக்குதல்களுக்கு ஒரு சில வாரங்களின் முன்னர் இலங்கைக்குப் பணம் அனுப்பினார் – அனிற்ர மதுர்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ஜிகாதிவாதியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள நிலைமை நிலையற்று இருப்பது ஏலவே தெரிகிறது. இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இத்தாக்குதலுக்கு ஓரளவு அறியப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான “தேசிய தௌவீத் ஜமாத்” இனைக் குற்றஞ்சாட்டியதோடு “இதற்குப் பின்னால் ஒரு சர்வதேச வலையமைப்பு இருக்கிறது. இல்லாவிட்டால், இந்தத் தாக்குதல் சாத்தியமாகியிருக்காது” எனத் தெரிவித்தார். இந்தக் கொடுமையான தாக்குதல்களை மையப்படுத்திப் பல்வேறு ஊகங்கள் உள்ளன.

இப்படியான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தை எச்சரிக்கை செய்யத் தவறிய இலங்கையின் புலனாய்வு அமைப்புகளும் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  உதித்த ஞாயிறு வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படும் உயர்தர விடுதிகள் என்பவற்றை இலக்கு வைத்து நடந்த இந்தத் தாக்குதல்களுக்கு யாரும் முன்னர் பொறுப்பேற்கவில்லை என்பது முக்கியமாக நோக்கத்தக்கது.  இறந்தோரின் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 290 ஆக அதிகரித்து விட்டது என்றும் 500 பேர் வரை காயமுற்று இருப்பதாகவும் கடந்த திங்கட்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை இரண்டு டசின் சந்தேக நபர்களைக் கைதுசெய்த அதிகாரிகள் அவர்களை அடையாளங்காட்ட மறுத்துவிட்டனர்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து இலங்கை ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது:

“தேசிய தௌவீத் ஜமாத்” என்ற அமைப்பினால் தேவாலயங்களுக்கு சாத்தியமான அச்சுறுத்தல் இருப்பதாக விபரமான ஒரு எச்சரிக்கையை, மத்திய கிழக்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு உளவமைப்பு தாக்குதலிற்கு ஆகக் குறைந்தது 10 நாட்களுக்கு முன்னர், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தது. இதேமாதிரியான ஒரு எச்சரிக்கையை மேற்கத்தேய உளவமைப்பு ஒன்றும்  அனுப்பி வைத்தது. ஆனால் இந்த விடயம் பிரதமர் ரணில் விக்கிரமசிக்கவிற்குக் கூடத் தெரியப்படுத்தப்படவில்லை. இலங்கையின் புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய சந்தேகத்திற்கிடமான நடத்தையின் பின்னாலுள்ள காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற தீவிரவாத எதிர்ப்புப் பத்திரிகையாளரும் தீவிரவாத எதிர்ப்பு நிபுணருமான சலாவுதீன் சொயிப் சௌத்திரி என்பவர் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற ஜிகாதிவாதித் தாக்குதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “உள்ளூர் ஜிகாதிவாதி அமைப்பான ‘தேசிய தௌவீத் ஜமாத்’ தான் இந்தத் தாக்குதல்களை நடத்தியது என்கின்ற இலங்கை அதிகாரிகளின் கூற்று தர்க்கரீதியானதல்ல. தேவாலயங்களையும் சுற்றுலாப்பயணிகளையும் இலக்குவைக்க வேண்டிய காரணம் உள்ளூர் தீவிரவாத அமைப்புகளுக்கு இல்லை. பதிலாக, இதற்கு நிச்சயமாக சர்வதேசத் தொடர்புகள் உண்டு” எனக் கூறினார்.  “இத்தாக்குதல்களானவை அல்-கெய்தா மற்றும் இஸ்லாமிய அரசு (ISIS) போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஒத்திருக்கிறன. ஒரு முக்கியமான மதம் சார்ந்த விடுமுறை தினத்தன்று பல தேவாலயங்களும் உயர்தர விடுதிகளும் தாக்கப்படுவது என்ற பாரிய திட்டம் தாக்குதலாளிகளிடம் இருந்துள்ளமை முக்கியமானது. ‘தேசிய தௌவீத் ஜமாத்’ உண்மையில் பௌத்தத்திற்கு எதிரான மனநிலையுள்ள ஒரு குழுவாகும். எனவே இது ‘தேசிய தௌவீத் ஜமாத்’ என்ற அமைப்பினால் நடத்தப்பட்டது என்பதைத் தனிப்பட்ட ரீதியில் நான் ஏற்கமாட்டேன்” என அவர் மேலும் கூறினார். இந்தச் செய்தித்தாளிற்குக் கிடைத்த ஒரு ஆவணத்திலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு ஒரு எச்சரிக்கையை சிறிலாங்கா அதிகாரிகள் ஏப்ரல் 11 ஆம் திகதி ஒரு ஆலோசனையாக வழங்கியிருந்தார்கள் என அறிய முடிகிறது. ஆனால், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளும் இலங்கையின் சட்ட அமலாக்கப் பிரிவுகளாலோ அல்லது பாதுகாப்புத் தரப்பாலோ எடுக்கப்படவில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து இலங்கைக்கு மாற்றப்பட்ட தொகை:

ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து மிகப்பெருந்தொகைப் பணம் இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சாகித் உடின் கான் என்கிற பங்காளதேசினைப் பிறப்பிடமாகக் கொண்ட ஐ.எஸ் அமைப்பிற்கு நிதிவழங்கும் நபரால் இந்தப் பெருந்தொகைப் பணம் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.  பிரித்தானியாவில் இருந்துகொண்டு இவரும் இவரது குடும்பத்தினரும் பல்வேறு விதமான ஜிகாதிவாதிய செயற்பாடுகளைத் தொடருகிறார்கள். அண்மையில் “அஸ்தா” என்ற அமைப்பினை இவர் நிறுவியுள்ளார். உலகிலுள்ள சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை இல்லாமலாக்கி அதற்குப் பதிலாக “கலிபட்” என்கிற இஸ்லாமிய அரச முறையைக் கொண்டு வருவதை தனது நோக்காக இந்த அமைப்புக் கொண்டுள்ளது. அவரது இரண்டு பணியாளர்கள் மூலமாக சுவீடன் மற்றும் அமெரிக்காவிலும் தனது இந்த நடவடிக்கைகளை சாகித் உடின் கான் அண்மையில் விஸ்தரித்துள்ளார்.

பங்காளதேசிலுள்ள பல்வேறு புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கிடைக்கும் ஆவணங்களின் படி, சாகித் உடின் கான் ஒரு தீவிரமான முஸ்லிம் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் என்பதோடு அவரது மனைவி ஃபர்ஜன அஞ்ஜும் என்பவரும் அதே போன்ற ஒரு குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதியினரின் மகள்கள் பிரித்தானியாவின் கல்வி பயின்று பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தாலும் மிகத் தீவிரமயப்படுத்தப்பட்டுள்ள இவர்களும் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றனர். பல்வேறு தனிநபர்களை இவர்கள் இலக்குவைப்பதோடு அவர்களை இஸ்லாமிற்கு மதமாற்றும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

92000 டொலர்கள் பெறுமதியான பணத்தை டுபாயிலிருந்து கொழும்பிற்கு சட்டத்திற்குப் புறம்பான வகையில் பரிமாற்றும் முறையைப் பயன்படுத்தி சாகித் உடின் கான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அனுப்பியுள்ளார். தெற்காசியப் பிராந்தியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள்களை ஜிகாத்திய அமைப்புகளின் கூட்டாக நடத்தவிருக்கும் இரகசியமான சூழ்ச்சி பற்றி இந்தச் செய்தித்தாள் பல செய்தி அறிக்கைகளினூடாக கடந்த ஆண்டு வெளிப்படுத்தியிருந்தது என்பதனை இங்கு சுட்டிக் காட்டலாம்.

ஊடக அறிக்கைகளின் படி, இஸ்லாமிய அரசிற்கு (ISIS) நிதியளிக்கும் சாகித் உடின் கான், அவரது மனைவி ஃபர்ஜன அஞ்ஜும் அவரது மகள்கள் ஆகியோர் அவர்களது நேரடியான ஜிகாதிய நடவடிக்கைகளால் சர்வதேச ஊடகங்களினால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்களாவர். அமெரிக்கா வரை பரந்துள்ள ஒரு வலையமைப்பை அவர்கள் இதுவரை உருவாக்கியுள்ளார்கள். தகவல்களின் படி, சாகித் உடின் கானின் நீண்டகால சகாவான சஜட் குசெயின் என்பவரும் அவரது மனைவியும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

சாகித் உடின் கானின் செல்லப்பிராணி போல இருக்கும் சஜட் குசெயின் என்பவர் தீவிரவாத இஸ்லாத்தினையும் ஜிகாதியத்தையும் அமெரிக்காவில் சில ஆண்டுகளாகப் பரப்பி வருகின்றார். உயர் பிரபல பாலியல் தொழிலாளியாக அறியப்பட்டவரும் சாகித் உடின் கானின் முன்னாள் பெண்தோழியுமான சஜட் குசெயினின் மனைவி ஐ.எஸ் தீவிரவாதிகளின் செய்திகளை அமெரிக்காவில் பரப்புவதோடு நின்றுவிடாமல் சாகித் உடின் கானுடன் இணைந்து பங்காளதேசில் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைச் சதிப்புரட்சியின் மூலமாக வெளியேற்றுவதிலும் செயற்படுகிறார். இந்த மோசடி குழுவானது படைகளின் புலனாய்வு இயக்குனரகத்தை (DGFI) இலக்கு வைத்து அதைப் பற்றி தவறானவற்றைப் புனைந்துரைத்து அதன் மீது கறைபூசும் வேலைகளில் ஈடுபடுகிறது.

சாஜித் உடின் கான் (Army No: BA002428, Course: 8-BMA, Commission Date: 10-06-1983), தனது மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து பங்காளதேசிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களைக் கடத்தல் செய்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரித்தானியாவிலுள்ள பல்வேறு வணிகத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளார்.

Visa Tier 1, vide VAF No. 511702 இன் கீழ் குடியுரிமை நிலையைப் பெறுவதற்காக இரண்டு மில்லியன் பவுண்ட்சினை இவர் 2009 இல் பிரித்தானியாவில் முதலிட்டார். பின்னர் எண்ணிக்கை அறியப்படாத தொகைப் பணத்தை இவரது குடும்பம் பிரித்தானியாவிற்குள் கொண்டு வந்தது.

இரகசியத் தகவலின் அடிப்படையில், பங்களாதேஸ் பொலீசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடு கடந்த குற்றப்பிரிவு (CTTC) டாக்காவிலுள்ள பறிதரா இன்ற இடத்திலுள்ள இரண்டாவது தெருவில் உள்ள 184 ஆவது இலக்க வீட்டை முற்றுகையிட்டுச் சோதனை செய்தது. சாகித் உடின் கானிற்குச் சொந்தமான இந்த வீடானது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினுடைய ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் பரப்புரைக் கையேடுகள் என்பன களஞ்சியப்படுத்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதென்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த முற்றுகையின் போது, பெருமளவிலான ஆயுதங்கள், வெடிப்பிகள், போலி பங்காளதேசிய நாணயத்தாள்கள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஜிகாதிவாதக் கையேடுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக சாகித் உடின் கான், அவரது மனைவி, அவர்களது மகள்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையோர் மீது மூன்று தனி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. கண்டோன்மன்ட் பி.எஸ். வழக்கு எண்- 10, பிரிவு 6(2)/7/11/12, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், 2009 (திருத்தச் சட்டம் 2013),  கண்டோன்மன்ட் பி.எஸ். வழக்கு எண்- 11, பிரிவு 25-A, சிறப்பு அதிகாரச் சட்டம். 1974, கண்டோன்மன்ட் பி.எஸ். வழக்கு எண்- 11, பிரிவு 19-A, ஆயுதச் சட்டம் 1878 ஆகிய மூன்று வழக்குகள் இவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டன.

பயங்கரவாதத்தின் மீதான போரில் பிரித்தானியா உண்மையில் ஒரு நட்பு நாடாக உள்ளதா?

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு நிதியளிக்கும் இந்த சாகித் உடின் கான் மீதான வழக்கானது, பிரித்தானியா தவறான பணத்தை தனது நாட்டுக்குள் உள்ளீர்ப்பதை ஊக்குவிக்கின்றது என்பது மட்டுமல்லாது ஜிகாத்திய மற்றும் குற்ற நடவடிக்கைகளிற்கு ஒரு தளமாக பிரித்தானிய மண்ணைப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகளவு ஆர்வம் காட்டவில்லை என்பதையும் வெளிக்காட்டும் உதாரணமாக இருக்கிறது. உலகிலுள்ள ஒரு அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியைப் பிரித்தானிய மண்ணிலிருந்து செய்வதானது இப்படியான குற்றங்களுக்குப் பிரித்தானியாவும் உடந்தை என்ற முத்திரையை உறுதியாக ஏற்படுத்தும். சாகித் உடின் கான், அவரது மனைவி மற்றும் அவரது மகள்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை பங்களாதேசிற்கு நாடு கடத்துவதை மேற்கொள்வது இப்போது பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் சட்டமியற்றுபவர்களிடம் குறிப்பாக பிரதமர் தெரேசா மே யின் கையில் இருக்கிறது.#Banglades #military officer #United Arab Emirates #ShahidUddin Khan #Dubai #Colombo

 

பணிநீக்கம் செய்யப்பட்ட பங்களாதேசிய இராணுவ அதிகாரி குண்டுத் தாக்குதல்களுக்கு ஒரு சில வாரங்களின் முன்னர் இலங்கைக்குப் பணம் அனுப்பினார் – அனிற்ர மதுர்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More