Home இலங்கை புலிகள் குறிக்கோள்களுடன் போராடினர், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராடுகின்றனர்…

புலிகள் குறிக்கோள்களுடன் போராடினர், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராடுகின்றனர்…

by admin

 “புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு”

இரா.சம்பந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார்.

பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரையும் தொடர்புப்படுத்துவதை, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி :- இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

பதில் :- இதுவொரு படு மோசமான தாக்குதல். இதை நாங்கள் மிகவும் பலமாக கண்டிக்கின்றோம். 300ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

500ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்திருக்கின்றார்கள். இவ்விதமான பயங்கரமான செயல்களை பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுவதை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்விதமான சம்பவங்கள் இனிமேல் நடைபெறகூடாது.

அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உரிய நேரத்தில், உரிய காலத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இவை தவிர்க்கப்பட்டிருக்கலாம். இது தவிர்க்கப்படாமல் இடமளித்தது, ஒரு பெருந்தவறு என நாங்கள் கருதுகின்றோம்.

அதற்கு யார் பொறுப்பு என்பதனை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அது விடயம் சம்பந்தமாகவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் முழுமையான விசாரணைக்கு உள்ளடக்கப்பட்டு, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய ஸ்திரமான கருத்து.

கேள்வி :-நாங்கள் ஒரு 30 வருட காலம் யுத்தத்தை சந்தித்த ஒரு நாடு. அதுவும் தமிழ் பேசும் சமூகம் ஒரு போராட்டத்தை ஏற்படுத்திய ஒரு நாடு. இந்த போராட்டத்தையும், இந்த தாக்குதலையும் நீங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்?

பதில் : தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டம் ஒரு குறிக்கோளை, ஒரு கொள்கையை நோக்கி போராட்டம். அதில் நடைபெற்ற சம்பவங்கள் சம்பந்தமாக நாங்கள், முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, அந்த போராட்டத்தின் பின், அந்த போராட்டத்தின் அடிப்படையில் ஒரு காரணம் இருந்தது.

நீண்ட காலமாக தமிழ் மக்கள் தமது உரிமையை பெறுவதற்காக ஜனநாயக ரீதியாக, இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக ஒப்பந்தங்களின் மூலமாக, ஒத்துழைப்புக்களின் மூலமாக பல வகைகளில் சாத்திய ரீதியில், அகிம்சை வழியில் போராடி, தமது உரிமைகளை பெற முடியாத நிலையில், தமிழ் மக்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்தப்பட்ட ஒரு சூழலில், இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இது ஒரு வேற விதமான போராட்டம். அடிப்படைவாதிகளுடைய போராட்டம். தங்களுடைய சில நம்பிக்கைகளை தாங்கள் நிலை நாட்ட வேண்டும். எவ்விதத்திலாவது அதை நிலைநாட்ட வேண்டும் என்று எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நியாயத்தின் அடிப்படையில், ஒரு நீதியின் அடிப்படையில் நடைபெற்ற போராட்டம் அல்ல. இதுவொரு அடிப்படை போராட்டம். அதனால்; அது இரண்டையும் ஒத்து பார்க்க முடியாது.

கேள்வி :-முஸ்லிம் சமூகமும், இலங்கையில் தமிழ் பேசக்கூடிய ஒரு சமூகம். தற்போது அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்திருக்கின்றார்கள். ஒரு போராட்ட வடிவத்தை கையில் எடுத்திருக்கின்றார்கள். இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் :- பொதுவாக சொல்வதாக இருந்தால், தற்போது நடைபெற்றிருக்கின்ற சம்பவத்தை அவர்கள் துப்பரவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அதை கண்டிக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் பேசிய முஸ்லிம் தலைவர்கள் கூட அதை மிகவும் உறுதியாக, அதை மிகவும் நிதானமாக, அதை மிகவும் திடமாக கண்டிக்கின்றார்கள்.

இந்த போராட்டத்திற்கும், தங்களுக்கும் இடையில் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏற்றுக் கொள்ளபோவதில்லை என்று கூறுகின்றார்கள். இந்த சம்பவத்திற்கு இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் எவ்விதத்திலும் தொடர்புப்படுத்துவது ஒரு நியாயமான நிலைமையாக இல்லை.

இரா.சம்பந்தன்
படத்தின் காப்புரிமைISHARA S.KODIKARA

கேள்வி :- இந்த தாக்குதல் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்ற அடிப்படையில் கூறுகிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறினார்கள். இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பிட்டு பார்க்கின்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படி நோக்குகின்றது?

பதில் :- தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று இலங்கை நாடும், உலகத்தில் வேறு பல நாடுகளும் அடையாளம் கண்டதற்கு காரணம் என்னவென்றால், அவர்களுடைய சில செயல்கள் பயங்கரவாதத்தை வெளிகொணர்ந்ததாக அமைந்தது.

ஆனால் அவர்களுடைய போராட்டத்திற்கு பின்னால் ஒரு அடிப்படைவாதம் இருக்கவில்லை. ஜனநாயக உரிமைகளை பெறுவதற்காகவும், ஜனநாயக உரிமைகள் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட காரணத்தாலும், ஆட்சி அதிகாரங்கள் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழ் மக்களும் இந்த நாட்டில் சம பிரஜைகளாக வாழ விடப்படாத காரணத்தினாலுமே அவர்களுடைய போராட்டம் நடந்தது. ஆனபடியால், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய போராட்டத்திற்கும், தற்போது நடந்துள்ள நிகழ்வுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி நோக்குவது தப்பான நிலைப்பாடு.

கேள்வி :- முழு உலகையும் எடுத்துக் கொண்டால், ஒரு இஸ்லாமிய தீவிரவாதமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படை தன்மை என்னவாக இருக்கும்?

பதில் :- ஆனால் எல்லா முஸ்லிம் மக்களும் அவ்விதமான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என சொல்ல முடியாது. ஒரு அடிப்படைவாத இயக்கம் இருக்க தான் செய்கின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ். அவர்கள் பகிரங்கமாக சொல்லியிருக்கின்றார்கள். தாங்கள் தான் இந்த செயலை செய்தது என்று. ஆனால் முஸ்லிம் மக்களையும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பையும் நாங்கள் ஒன்றாக பார்க்க முடியாது. ஆனேகமான நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள். அவர்களுக்கு குறைகள் இருந்தாலும், அவர்கள் இந்த வழியில் அதனை கையாளவில்லை. அந்த அடிப்படைவாத இயக்கத்தின் ஊடாக அதை கையாளவில்லை. அவர்கள் அதை வேறு விதமாக கையாளுகிறார்கள். ஆனபடியால், உலகில் வாழ்கின்ற சகல முஸ்லிம் மக்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பையும் ஒரே விதத்தில், ஒரே கண்ணோட்டத்தில் பார்வையிடுவது தவறென்று நான் கருதுகின்றேன்.

கேள்வி :- உளவுத்துறை தகவலில் ஒரு குழப்ப நிலைமை தற்போது காணப்படுகிறது. உளவுத்துறை தகவல் சரியாக பரிமாறப்படவில்லை என்று கூறப்படுகிறது. தமக்கும் அந்த உளவுத்துறை தகவல் கிடைக்கவில்லை என்று நேற்றைய தினம் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதுகுறித்து நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்?

பதில் :- அவ்விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் நான் அறிந்த வகையில் எங்களுடைய நேச நாடுகள், அயல் நாடுகள் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவ்விதமான தாக்குதல் நடைபெறக்கூடிய ஒரு நிலைமை உண்டு என்பதை பல நாட்களுக்கு முன்பதாக இலங்கையில் பாதுகாப்பு ரீதியாக உளவு ரீதியாக செயல்படுகின்ற அதிகாரிகளுடன் பகிர்ந்திருக்கின்றார்கள் என்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் அதற்கு மேலதிகமாக அது ஏன் பரிமாறப்பட வேண்டிய விதத்தில், பரிமாறப்படவில்லை. அது மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விடயத்தில் தற்போது போதிய தகவல் இல்லை. இந்த விடயங்கள் எல்லாம் முறையாக விசாரிக்கப்பட்டு, நாட்டு மக்கள் உண்மையை அறிய வேண்டியது அத்தியாவசியம்.

கேள்வி :-மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.?

பதில் :- மக்களுக்கு நாங்கள் சொல்லக்கூடியது. விசேஷமாக பாதிப்படைந்த மக்களுக்கு உங்களுடைய பாதிப்பும், உங்களுடைய இழப்புகளும், ஏற்பட்ட அழிவுகளும், உங்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களும் எங்களுக்கு பெரும் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. நாங்கள் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வது மாத்திரமல்ல. உங்களுக்காக ஆற்ற வேண்டிய பணிகளை தொடர்ந்து, சிறப்பாக எங்களால் இயன்றளவு ஆற்றுவதற்கு நாங்கள் பின் நிற்க மாட்டோம். அதை நாங்கள் செய்வோம். #EasterSundayAttackLK #RSampanthan #liberation tigers of tamil eelam # islamicfundamentalist

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More