வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் CID யில் 15 பேர் TID யில்…
கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் முப்படையினரும் மேற்கொண்டு வருவதாக காவற்துறை ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பலர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினராலும் 15 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவினராலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெலிப்பன்ன கிராமமொன்றிலிருந்து விமான அழிப்புக் குண்டுகள் மீட்பு…
வெலிப்பன்ன ராம்யா வீதி பிரதேசத்தின் முஸ்லிம் கிராமமொன்றிலிருந்து இன்று காலை விமானங்களை தாக்கி அழிக்கும் 5 குண்டுகளும் டெட்டனேட்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவருக்கு, கிடைத்த தகவலுக்கமைய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதுடன் இந்தக் குண்டுகள் 8 அங்குலம் நீளமான ( 5-0) ரக குண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை களுத்துறைப் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
தெஹிவளையில் கோடீஸ்வர வர்த்தகர்கள் 6 வாள்களுடன் கைது…
தெஹிவளை பிரதேசத்தின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் மேலுமொரு வர்த்தகரும் 6 வாள்களுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை காவற்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 5 மாடிகளைக் கொண்ட கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிலிருந்தும், மற்றொரு வர்த்தகரின் வீட்டிலிருந்தும் இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுள் ஒருவர் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் ஏனைய வர்த்தகர் மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நண்பரான ஆசிரியர் கைது
தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான, சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நண்பரான ஆசிரியர் ஒருவர் ஹொரவப்பொத்தான- முக்கருவெவ பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டு உள்ளாரென ஹொரவப்பொத்தான காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹொரவப்பொத்தான காவற்துறைப் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் வரகாபொல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருடனும் குறித்த ஆசிரியர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் நெருக்கமான உறவைப் பேணி வருபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தீவிரவாத அமைப்பு ஊடாக பணத்தைப் பெற்று வறிய குடும்பங்களுக்கு உதவும் நடவடிக்கையை குறித்த ஆசிரியர் முன்னெடுத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.