நிர்வாக மற்றும் அரசியல் ரீதியான சட்ட அறிவு இருந்ததினாலேதான் மிக நீண்டகாலம் மாநகர ஆணையாளராகவும் முதலாவது வடக்கு மாகாண சபையின் எல்லாஅமர்வுகளையும் கொண்டு நடாத்தியுள்ளேன். என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் நியமனம் தொடர்பாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் மூலம் அவர்களுக்கு சட்ட அறிவு இருக்கா என தான் சந்தேகம் கொள்வதாக சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்கு பதிலளிக்கும் முகமாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு செய்தி குறிப்பை அனுப்பி வைத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதில் நியமனம் தொடர்பாக சமூதாய மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை தொடர்பான சில தெளிவு படுத்தல் அவசியம் என கருதப்படுகின்றது.
எம்மைப் பொறுத்தவரையில் எமது சட்டஅறிவு மற்றும் தமிழர்களின் எதிர்காலம் பற்றி கேள்வியெழுப்பியுள்ள போதும் அவர் ஒரு சமூதாய மருத்துவ நிபுணர் என்பதற்கும் அப்பால்அவர் ஒரு சமூக நலன் சார்ந்த சிந்தனையாளர் என்பதற்கு மேலான மதிப்பளிக்கின்றோம் என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
நிர்வாக மற்றும் அரசியல் ரீதியான சட்ட அறிவு இருந்ததினாலேதான் மிக நீண்டகாலம் மாநகர ஆணையாளராகவும் முதலாவது வடக்கு மாகாண சபையின் எல்லாஅமர்வுகளையும் கொண்டு நடாத்தியுள்ளேன்.
இந்த நாட்டின் நியமன முறைமையில் நாடாளாவிய ரீதியான நியமனங்கள் யாவும் மத்திய அரசின் பொது சேவைகள் ஆணைக்குழுவின் அதிகார வரம்பிற்குள் இருப்பவை என்பதுஎமக்கு நன்றாக தெரியும்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியும் அவ்வாறானது என்பதும் எமக்கு தெரியும்.
இந்த அடிப்படையில்தான் சுகாதார அமைச்சருக்கு எம்மால் கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில் அதிகார பகிர்வு கோட்பாட்டை இந்த நியமனம் மீறுகின்றது என்பதையும்ஏற்கனவே பலவீனமான மாகாண சபை அதிகாரத்தை இது மேலும் பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தோம்.
எமது ஆட்சேபனை வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி சம்பந்தப்பட்டது அல்ல என்பதையும் தெளிவுபடுத்தும் முகமாகவே இந்த பதில் நியமனத்தை மீளாய்வு செய்து நிரந்தரநியமனம் ஒன்றை அது வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தியாகவும் இருக்கலாம் என்றும் அல்லது மாகாண ஆளணியில் உள்ள மருத்துவ சேவை அலுவலர் ஒருவரை பதில்கடமையாற்ற நியமிக்கும் படியே கோரியிருந்தோம்.
இந்த சட்ட நிலைப்படடை வலியுறுத்தியே ஆளுநரின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியதையும் வலியுறுத்திக் கூறவேண்டும். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியென்பது நியமனம் மத்திய அரசினது என்றாலும் நிர்வாக ரீதியாக மாகாணசபையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.
மத்திய அரசாங்க ஆளணியை சேர்ந்த ஒருவர் தமது கடமைகளுக்கு மேலதிகமாக மாகாண ஆளணி பதவியொன்றில் பதில்கடமையாற்ற நியமிப்பது நிர்வாக முகாமைத்துவகோட்பாடுகளுக்கு முரணானது. அது இரட்டை கட்டிப்பாட்டுக்கும்,பொறுப்புக்கூறலுக்கும் வழிவகுத்து இரண்டையுமே பாதிப்படைய செய்யும்.
Any being which has two heads is a Monster என்ற முகாமைத்துவ வாக்கியம் இதற்கு பொருந்தும் இதற்கு மேல் அவரது அரசியல் சார்ந்த விமர்சனங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் பதிலளிக்க விரும்பவில்லை. என குறிப்பிடப்பட்டு உள்ளது. #Jaffna #srilanka #Doubts