முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுவதாகத் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இதனால், முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைளை முன்னெடுக்க, பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இதன் மூலம், முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள மக்களின் சந்தேகம் நீங்கும் எனவும், அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று (21.05.19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பள்ளிவாயல்களில் பாதுகாப்புப் படையினர் சோதனையிடக் கூடாதெனத் தெரிவிக்கும் கருத்தை, தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார்.
இதேவேளை ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டு வருவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய நேரத்தில் தீர்மானம் ஒன்றை எடுப்பார் எனவும் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.