எவரெஸ்ட் சிகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணி நிறைவடைந்துள்ள நிலையில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு, கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் திகதி ஆரம்பித்திருந்தது.
இப்பணியில் நேபாள ராணுவத்துடன், நேபாள மலையேற்ற சங்கம், சுற்றுலாத்துறை, எவரெஸ்ட் மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் சில தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 மாத காலமாக நடந்த இந்த தூய்மைப் பணி தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் மற்றும் 4 மனித உடல்கள் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாளான நேற்று மட்டும் 5 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன எனவும் இந்த குப்பைகள் அனைத்தும் ராணுவ ஹெலிகொப்டர்கள் மூலம் காத்மாண்டு நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்தக் குப்பைகளில் ஒரு பகுதி, மறு சுழற்சிக்காக தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#எவரெஸ்ட் சிகரம் #குப்பை #அகற்றம் #தூய்மைப்பணி