தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசாணைக்கு முன்னர், கடைகள் பெரும்பாலும் இரவு 11 மணிவரை மட்டுமே இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்ததால், சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டன. இந்தநிலையில் மத்திய அரசின் தொழில்துறை அமைச்சு நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும் வணிக நிறுவனங்கள் 365 நாட்களும் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற விதியை பரிந்துரை செய்து, சட்ட முன்வடிவு வரைவு திட்டத்தை 2016ஆம் ஆண்டு அனுப்பியிருந்தது.
மத்திய அரசின் வரைவு திட்டத்தை பரிசீலித்த தமிழக அரசு இந்த விதிமுறையை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பின்பற்ற அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, 10 ஊழியர்களுக்கும் அதிகமானவர்கள் பணிபுரியும் வணிக நிறுவனங்கள் 365 நாட்கள், 24 மணி நேரம் செயல்படலாம்.
பெண் ஊழியர்கள் 8 மணிக்கு மேல் பணியில் இருக்கக்கூடாது என்பதுடன் பெண்கள் இரவு பணியில் இருக்க அவர்களின் ஒப்புதலை பெறவேண்டும் எனவும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக விடுப்பு கொடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#தமிழகத்தில் #வணிக நிறுவனங்கள் #அரசாணை #தொழிலாளர்களின் #பாதுகாப்பு