யாழ்., வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்காவின் செனட் குழு, மீள்குடியேற்ற நிலைமைகள், மீள்குடியேற்றப்பட வேண்டிய பகுதிகள் தொடர்பாகவும் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் குறித்தும் ஆராய்ந்துள்ளது.
வலி. வடக்கு மயிலிட்டி துறைமுகம், மயிலிட்டி வடக்கு கிராமம் ஆகியவற்றுக்கு இந்த குழு பயணம் மேற்கொண்டது. இதன்போது பிரதேச செயலக அதிகாரிகள், கிராமசேவகர், வலி.வடக்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வுக்குழு தலைவர் குணபாலசிங்கம் ஆகியோர் சந்தித்து நிலைமைகளை எடுத்து கூறியிருந்தனர்.
இதன்போது, விசேடமாக காங்கேசன்துறை பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு தொகைக் காணிகளை மீள்குடியேற்றத்துக்காக விடுவிப்பதென கூறப்பட்டு மக்களிடம் காணி உறுதிகள் பெற்று பதிவு செய்யப்பட்டு பின்னர், இராணுவம் வெளியேறியும் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படவில்லை என, மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த காணியை ஜனாதிபதி விடுவிப்பார் என கூறப்பட்டபோதும், பின்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து காணி விடுவிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும், அதனை விடுவிக்கவேண்டும் எனவும், மக்கள் கேட்டுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து மயிலிட்டி வடக்கு கிராமத்திற்கு சென்ற செனட் குழு, இன்னும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய நிலங்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்ததுடன், மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகளை நேரில் பார்வையிட்டது.