இனப் பிரச்சினைக்கு 2 வருடத்திற்குள் தீர்வு என்றும், பெரும்பான்மை பலம் தமக்கு இல்லை என்றும் பிரதமர் கூறுவது வேடிக்கையானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமா டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமரின் இந்தக் கருத்துக்களில் ஒருவித உண்மையும் இல்லை என்பதுடன் வெறுமனே தேர்தலுக்கான வாக்குகளை தாம் பெற்றுக் கொள்வதே நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணப் பயணத்தின் போது இனப் பிரச்சினைக்கான தீர்வை 2 அல்லது 3 வருடங்களில் பெற்றுக் கொடுக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இதனைத் தாம் செய்வதற்குப் பெரும்பான்மை இல்லை என்றும் கூறியிருக்கின்றார்.
உண்மையில் இனப் பிரச்சினைக்கான தீர்வைக் கொடுக்க வேண்டுமாக இருந்திருந்தால் இந்த ஆட்சி வந்து 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் கொடுத்திருக்க வேண்டும். இதனையே தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்ததாகவும், ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பது போல் எல்லாம் மாறி விடும் என்பதை சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அதுவே இன்றைக்கு நடந்தும் இருக்கின்றது என கூறியுள்ளார்.
இதே வேளை தேர்தல்கள் வரவிருப்பதால் தமக்கு ஆதரவை வழங்கும் கூட்டமைப்பினரின் வாக்கு வங்கி அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருத்தை முன் வைத்திருக்கின்றார். அத்துடன் இதனைச் செய்வதற்கு தமக்குப் பெரும்பான்மை இல்லை என்றும் பிரதமர் கூறியிருக்கின்றார் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். #டக்ளஸ்தேவானந்தா #ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி #ரணில்விக்கிரமசிங்க