Home இலங்கை ஹற்றன் – கினிகத்தேனை பகுதிகளில் கடும் மழை, வெள்ளம், மண்சரிவு – ஒருவர் பலி…

ஹற்றன் – கினிகத்தேனை பகுதிகளில் கடும் மழை, வெள்ளம், மண்சரிவு – ஒருவர் பலி…

by admin

(க.கிஷாந்தன்)

வெள்ள நீரினால் அட்டன் பன்மூர் தோட்டத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு

ஹற்றன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியையில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மலையகத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் பல குளங்களினதும், நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் கனிசமான அளவில் உயர்ந்துள்ளதுடன், பன்மூர் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் நீர் பெருக்கெடுத்ததன் காரணமாகவே வீடுகளில் வெள்ள நீர் பாய்ந்துள்ளது.

இதேவேளை பன்மூர் குளத்தின் அணைக்கட்டு உறுதியற்ற நிலையில் காணப்படுவதாகவும், இது இந்த வேளையிலும் உடைந்து ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மலையகத்தில் ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலை நீடிக்குமானால் இந்த குளத்தின் நீர் அதிகரித்து அணைக்கட்டு உடைவதுடன், பன்மூர், அலுத்கம, டிக்கோயா ஆகிய பகுதிகளில் பல வீடுகள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்படலாம் என இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கினிகத்தேனை ஏற்பட்ட சரிவில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

இயற்கையின் சீற்றத்தால் மலையகத்தில் 18.07.2019 அன்றைய தினம் முதல் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினால் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை நகரில் இடம்பெற்ற சரிவு காரணமாக 10 கடை தொகுதிகள் முற்றாக சரிந்து அனர்த்தத்திற்குள்ளாகியது.

இந்த நிலையில் அக்கடைகளில் ஏற்பட்ட சரிவில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 19.07.2019 அன்று காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், பொது மக்கள் தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சரிவில் சிக்குண்டு இருந்த கினிகத்தேனை பகுதியை சேர்ந்த கே.எம். ஜமால்டீன் வயது 60 என்ற நபர் சடலமாக காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

கினிகத்தேனையில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு சரிந்து விழுந்தன

கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவரை மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் சில்லறை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவை இருந்துள்ளன. இப்பிரதேசத்தில் 19.07.2019 அன்று பெய்த கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கின்றது. அதேநேரத்தில் இப்பிரதேசத்தில் போக்குவரத்து தடைகளும் ஏற்பட்டுள்ள நிலையில், கினிகத்தேனை நாவலப்பிட்டி பிரதான வீதி பாதுகாப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. பிரதேசத்தில் பொது மக்கள் இயற்கை சீர்கேட்டின் காரணமாக பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் வாழ்ந்து வருகின்றனர். கினிகத்தேனை காவற்துறையினர்  மற்றும் இராணுவத்தினர் இணைந்து இப்பிரதேசத்தில் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

பிரதான வீதியில் மரம்..

ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் ஒன்றுமுறிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் 19.07.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதேவேளை பிரதான வீதியில் ஒரு பகுதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் இவ்வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது. இம்மரத்தினை வெட்டி அகற்ற பிரதேசவாசிகள் மற்றும் கொட்டகலை பிரதேச சபை ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என காவற்துறையினர்   எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 19.07.2019 அன்று காலை முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More