157
நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்களை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைத் தள்ளுபடி செய்யக் கோரும் சட்ட மா அதிபரின் மேன்முறையீட்டு சிறப்பு அனுமதி மனுவை இடைக்காலக் கட்டளையின்றி ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.
நாளை மறுதினம் ஓகஸ்ட் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான உள்ளிட்டவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் வகையில் சட்ட மா அதிபர் இன்று உயர் நீதிமன்றில் இந்த மனு விசாரணைக்கு எடுக்கக் கோரியிருந்தார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூர்ய, நீதியரசர்கள் எச்.ரி.பி. டெகிதெனியா, முரூடு எம்.பி. பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு சிறப்பு அனுமதி மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூர்ய சட்ட மா அதிபராக இருந்த போது இந்த ஆள்கொணர்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்றதால், இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து அவர் விலகினார். அதனால் ஏனைய நீதியரசர்கள் இருவரும் மனுவை விசாரித்தனர்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை இடைநிறுத்தி வைக்கும் வகையில் கட்டளையிடுமாறு சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான மூத்த மேலதிக மன்றாடியார் அதிபதி சண்ஜெய் ராஜரட்ணம் உயர் நீதிமன்றில் இன்று சமர்ப்பணம் செய்தார்.
எனினும் மேல் நீதிமன்றின் கட்டளையை இடைநிறுத்தும் கட்டளையை வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்களான பாதிக்கப்பட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.மனு மீதான விசாரணை செப்ரெம்பர் முதலாம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னணி
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ்.சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மனுக்களை நெறிப்படுத்தினார். 2017ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த ஆள்கொணர்வு மனுக்களை பூர்வாங்க விசாரணையுடன் தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் பல ஆட்சேபனைகளை முன்வைத்தது.எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு உரிய பரிந்துரையை வழங்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டார்.
மனுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகள் அனைவரும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் கடந்த மே 24ஆம் திகதி முன்னிலையாக உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், , அன்றைய தினம் வழக்கின் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை நீதிவான் வழங்குவார் என்று குறிப்பிட்டது.
“காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டு பிடித்துத்தருமாறு மனுக்கள் செய்தவிடத்து எதிர்மனுதாரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, உள்ளவற்றை உள்ளபடியாங்கு உரைத்து இந்த மனுக்களை எதிர்கொள்ளவேண்டுமே தவிர, தேவையற்ற சட்ட ஓட்டைகளை முன்வைத்து, விடயங்களைப் பெரிப்பித்து, காலத்தை இழுத்தடித்து, மேலும் சோதனைகளை ஏற்படுத்துவதனை யதார்த்தமான வழி ஒன்றாகக் கருத முடியாது என்று சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் விண்ணப்பங்கள் 2 வருடங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டமையைக் கண்டித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. #காணாமல் ஆக்கப்பட்ட #இளைஞர்கள் #ஆள்கொணர்வு #ஒத்திவைப்பு #நாவற்குழி #இராணுவ முகாம்
Spread the love