Home இலங்கை வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:

வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:

by admin


வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது தாக்குதல்களை வழமை போல தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு தாக்குதல் மேற்கொண்டனர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. தாக்குதல் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர். 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.

வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன. 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்.

வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச்செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை.

அதேவேளை 8 பேரை கைது செய்து சென்ற இந்திய இராணுவம் அவர்களை விடுவிக்கப்படாத நிலையில் , இன்று வரை காணாமல் ஆக்கப்படோர் பட்டியலிலே உள்ளனர்.  #வல்வெட்டித்துறை  #படுகொலை #நினைவேந்தல் #இந்திய படைகள் #ஊரடங்கு

-மயூரப்பிரியன்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More