மடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ; விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,
மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது . அதனை தொடர்ந்து நவ நாள் திருப்பலிகள் இடம் பெற்று எதிர் வரும் 15 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெணாண்டோ ஆண்டகை தலைமையில் மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்க உள்ளனர்.
இந்த நிலையில் மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது.
மடு திருத்தலத்திற்கு குடும்பங்களாக வாகனங்களில் வரும் பக்தர்கள் தமது பெயர் விபரங்களை பட்டியலிட்டு மடு திருத்தல நுழைவாயிலில் சோதனையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பட்டியல் வழங்குவதன் மூலம் சோதனைகளை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறை மற்றும் இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். #மன்னார் #மடு #ஆவணித்திருவிழா #பக்தர்களுக்கு #வேண்டுகோள் #அருட்தந்தை
– லம்பேர்ட்