ஓகஸ்ட் 4ஆம் திகதி முதல் கடந்த 10 நாட்களாக இழுத்து மூடப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படக் கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் தேர்தல் ஆணையகம் இது தொடர்பாக திடீர் ஆலோசனை நடத்தியதாகவும், உள் துறை அமைச்சகத்தின் முறையான அறிவுறுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த 370ஆவது சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு அரசியல் சாசனத்திலிருந்து நீக்கப்பட்டதுடன் ஜம்மு காஷ்மீர் ஆகியவை ஒரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன.
மறுசீரமைப்புச் சட்டத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையகம் ஜம்மு காஷ்மீர் பூமியின் பிரதேசத்தில் சட்டமன்றத் தொகுதிகளை வரையறுக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டது. இதனடிப்படையில் புதிய சட்டமன்றத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 24 தொகுதிகள் உட்பட 114 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதிகள் பற்றிய ஆலோசனையும் தேர்தல் ஆணையகம் நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அநேகமாக வரும் மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்குத் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ஜம்மு காஷ்மீர் #தேர்தல் #சிறப்புஅந்தஸ்து
Add Comment