(க.கிஷாந்தன்)
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்திற்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், கவனயீர்ப்பு போராட்டமும் மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது 01.09.2019 அன்று நோர்வூட் சின்ன எலிபடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக மதியம் 1 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கவில்லை. எனவே இதற்கு உரிய தீர்வினை வெகுவிரைவில் அரசாங்கம் வழங்க வேண்டும் என இதன்போது போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை போராட்டகாரர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஆசி வேண்டி சின்ன எலிபடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தியதோடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடாத்திவரும் போராட்டங்களிற்கு வலுச்சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.