Home இலங்கை பிரார்த்தனை- “எம்மில் இதுவரை எழாத கேள்வியும் பதிலும்’ சுசிமன் நிர்மலவாசனின் படைப்புக்கள்” – விதுர்சா கமலேஸ்வரன்..

பிரார்த்தனை- “எம்மில் இதுவரை எழாத கேள்வியும் பதிலும்’ சுசிமன் நிர்மலவாசனின் படைப்புக்கள்” – விதுர்சா கமலேஸ்வரன்..

by admin

பிரார்த்தனை

யுத்தம் என்பது ஓர் திடீர் நிகழ்வல்ல மாறாக அதுஓர் தொடர்ச்சியான அழிவுச் செயன்முறை. அது மனித வாழ்வியலின் அனைத்துப் பகுதிகளையும் சிதைவுக்குள்ளாக்குவதோடு, வாழ்வியலின் ஒரு கூறாகவே அமைந்துவிடும்.அதன் வடிவங்கள் பல்வேறு பரிமானங்களில் பிரபாகிக்கின்றன. யுத்தத்தின் கரங்களில் ஒரு பகுதி கதறி அழும் அதேவேளை இன்னொரு பகுதி எக்காளமிட்டுச் சிரிக்கவும் செய்யும். யுத்தம் எப்போதும் புதிரானது.

இலங்கை, இன முரண்பாடுகளின் பிடியில் 32 வருட உள்நாட்டு யுத்தத்திற்கு உட்பட்டிருந்தது. அதனடியாக பாரியளவிலான அழிவுகளையும், வடுக்களையும் மக்களின் வாழ்வியலோடு நிலைப்படுத்திச் சென்றுள்ளது. யுத்தத்தின் வடுக்களைத் தணிப்பதற்கும், பொது வெளியில் பேசிப்பறைவதற்கும் கலைகள் ஓர் உன்னதமான ஊடகமாகச் செயற்படுகின்றன.

பொதுவாகவேயுத்தத்தின் வடுக்களை,பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசுவதற்கு கலைகள், வன்மமான வடிவங்களையே பயன்படுத்துகின்றன. குறிப்பாக,உறைந்து கொண்டிருக்கும் இரத்தமும், வடிந்து முடியாக் கண்ணீரும், மனித எலும்புக் கூடுகளும், சிதலமடைந்த உடல்களும், மண்டையோடுகளுமே குறியீடுகளாக்கப்பட்டு படிமங்களாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை படைப்பில் அழகியலினைக் கொண்டாடி அதன் கனதியைக் கூட்டுகின்றன. இந்நிலையில் இவை விமர்சனத்திற்குள்ளாகின்றன.

இதிலிருந்து வேறுபட்ட வகையில், சுசிமன் நிர்மலவாசனின் படைப்புக்கள் அமைந்துள்ளன. தன் கலையின் ஊடாகயுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வியலை மென்மையான வடிவங்கள் ஊடாக கூறுகின்றார். அவரது படைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரங்கலாகவும், பிரார்த்தனைகளாகவும்சமூக மாற்றத்தினை வேண்டி பயணிக்கின்றது.

2019.08.22 – 2019.08.29 வரையில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் சுசிமன் நிர்மலவாசனின் காண்பியக்கலைக்காட்சி இடம்பெற்றது. அதில் முன்வைக்கப்பட்ட படைப்புக்கள் பத்து வருடங்களைக் கடந்த நிலையிலான யுத்தத்தின் வாழ்வியலைப் பேசின. அவை யுத்தத்தின் வடுக்களில் உறைந்துபோயுள்ளோருக்கானவோர் அமைதியான பிரார்த்தனையாக அமைந்தது. 2006 ம் ஆண்டு யாழ்பாணத்தில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த சுசிமன் நிர்மலவாசனின் ‘கருவாடு’ எனும் காண்பியக்காட்சி, யுத்த சூழலின் தாக்கத்தினால் தடைப்பட்டது. எனவே அதன் நினைவு கூறலாகவும், தொடர்ச்சியுமாகவும் இக் காண்பியக்கலைக்காட்சியினை சுசிமன் நிர்மலவாசன் குறிப்பிட்டிருந்தார்.

யுத்ததின் வடுக்களை, வடுக்களின் வழியே ததும்பும் வலிகளை படைப்பாளி மிகக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார். ஆச்சரியமும், யதார்த்தமும், உணர்விழைகளும் கூடவே தொழில்நுட்பமும் இணைந்த சுசிமன் நிர்மலவாசசின் படைப்புக்கள் முக்கியமானவை. அவை பார்வையாளர்களையும் பங்குபற்றாளர்களாக்குவது தனிச் சிறப்பு என்றே கூறலாம்.

சுசிமன் நிர்மலவாசனின் படைப்புக்களில் மீன்கள் மற்றும் கருவாடுகள் பிரதான இடம்வகிக்கின்றது. அதற்கு மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பினை வாழ்விடமாகக் கொண்ட படைப்பாளியின் மீதான, சூழலின் தாக்கம் ஒரு பிரதான காரணமாக இருந்திருக்கலாம். மேலும் மீன்களின் இறப்புக் குறித்து நாம் நம்மையே ஒரு போதும் கேள்விகேட்பதில்லை. அதே போல’கேள்வி கேட்க முடியாத மனித உயிர்களின் இழப்பைத் தன்கத்தே கொண்ட இலங்கையின் யுத்த சூழலைக் குறிப்பிட பொருத்தமான குறியீடு மீன்கள் தான்’ என படைப்பாளி உணர்ந்திருக்கலாம்.

மட்டக்களப்பு பிரதேசம் மரபுகள் சார்ந்தும், இறையியல் சார்ந்தும் ஒரு ஆழமான நம்பிக்கையுடன் இன்றும் வாழ்ந்து வருவதன் தாக்கம் இப் படைப்புக்களிலும் வெளிப்பட்டது. குறிப்பாக மரபு முறையியலையும்,இறையியலையும் குறியீடுகளாகக் கொண்டே பெரும்பாலான காட்சிகள் அமைந்திருந்தன.


1. உடுக்கொலி

காட்சியறை தொடர்ச்சியாக ஒரு விதமான உடுக்கொலியால் நிரப்பப்பட்டிருந்தது. அவ்வொலி இது வரை நான் கேட்டுப்பழகியிருந்த யாழ்ப்பாண உடுக்கொலியில் இருந்தும் வேறுபட்டிருந்தது. பின்னர் அம்மாணை தாளக்கட்டு வடிவிலான அவ்வொலி மட்டக்களப்பு கும்மிப்பாடலின் போது இசைக்கப்படும் உடுக்கொலி என அறியப்பட்டது. இவ்வேளை யுத்த வடுக்களைப் பேசும் இக் காண்பியக்கலைக்காட்சிக்கும் இறையியலை அடிப்படையாகக் கொண்ட குறித்த உடுக்கொலிக்கும் இடையிலான தொடர்பு குறித்த நியாயப்படுத்தல்கள் ஆச்சரியம் தந்தது.

குற்றமற்ற கோவலன் கொலையுண்ணப்பட்டபோது மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கோபத்தோடு மட்டக்களப்பு வந்தாறுமூலையை வந்தடைந்தாள். அங்கு குறித்த உடுக்கொலி இசைக்கப்பட்டு கண்ணகியின் கோபம் ஆற்றப்பட்டதாகவும், கண்ணகி வந்து அவளது கோபம் ஆற்றப்பட்டமையாலே அவ்வூர் வந்தாறுமூலை என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதே போல யுத்தத்தில் குற்றமற்ற கணவன்மார்கள் மற்றும் குடும்பத்தினரை இழந்த பெண்களின் கோபம், வலி என்பவற்றினை ஆற்றுவதற்காக குறித்த உடுக்கொலி ஒலிபரப்பப்பட்டதாகவும், அவ்வொலி குறித்த காண்பியல்கலைக்காட்சி முடிவுறும்வரை தொடர்ந்து ஒலிபரப்பப்படுவதை தான் விரும்புவதாகவும் சுசிமன் நிர்மலவாசன் குறிப்பிட்டடிருந்தார்.

பொதுவாகவே அழகியலை மையப்படுத்தியோ அல்லது தம் படைப்பின் கனதியினை அதிகரிக்கவோ பயன்படுத்தப்படும் குறியீடு மற்றும் படிமங்கள் இங்கு பாதிக்கப்பட்ட சமூகமொன்றின் வலிகளை கோப உணர்வுகளைத் தணிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தமை படைப்பாளியின் சமூகம் பற்றிய ஆழ்ந்த சிந்தனைப்பாங்கினை வெளிப்படுத்துகின்றது.

ஆயினும் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டடிருந்த அவ்வொலி யுத்தத்தின் வாசனை அறியாதவர்களுக்கு, ஆச்சரியம் அளித்தாலும் , ஒரு கட்டத்தில் சலிப்பூட்டுவதாக அமைந்ததனைக் அவதானிகக்கூடியதாக இருந்தது.

2. வெள்ளைத் திரைச்சீலைகள்

வாசலில் இருந்து காட்சியறை நோக்கிச் செல்லும் போது மறைப்பாகத் திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தன. அவை வாசலில் இருந்தே பார்வையாளர்களுடன் யுத்தத்தின் மொழிகளைப் பேசத் தொடங்கியிருந்தன. திரைச்சீலைகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த பெண்களின் உருவங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவ் ஒவ்வொரு உருவினதும் முகபாவம்,’யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும், யுத்தத்தின் வலிகளை இன்னமும் சுமந்து தான் வாழ்கின்றோம்.’ என்பதை அமைதியாக மொழிந்தன. ‘யுத்தம் முடிந்து பத்து வருடமாகிய பின்னரும் மறந்து போன யுத்ததினை மீண்டும் மீண்டும் ஏன் ஞாபகப்படுத்துகின்றீர்கள்?’ என பலரும் கேட்கும் கேள்விகளுக்கான பதிலாக இப் படைப்புக்கள் அமைந்தன.

3. காணமலாக்கப்பட்டவரின் தாய்

திரைச்சீலைகளைக் கடந்து செல்லும் போது காட்சியறையின் முகப்புத் தோற்றத்தில்,மாதா 12 வயதில் தொலைந்து போன யேசுபாலனின் உருவப்படத்தினைக் கையில் ஏந்தியவாறு காணப்பட்டாள்.அவளின் கண்கள் மகனைத் தேடும் ஏக்கத்தின் உச்சத்தில் உறைந்து கிடந்தன. அவளைச் சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தும் குறியீடான நேர்த்திக் கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. இன்று யுத்தத்தால் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடி தேடி ஒளியிழந்த கண்களுடன் வீதியோரங்களிலே தொய்வுற்று பின் கோயில் கோயிலாக நேர்த்திக் கயிறுகளைக் கட்டி அலையும் தாய்மார்களின் அவல நிலையின் குறியீடாகவே இப் படைப்பு அமைந்தது.

இதுவரை காலமும் இலங்கையில் யுத்தத்தால் காணாமலாக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான ஒரு பொதுவான இடம் ஒன்று இல்லை. வேளாங்கன்னி மாதா, சதாசகாய மாதா போன்ற மாதாக்கள் போலல்லாது ‘புதுமாதா’என தன் படைப்பினைக் குறிப்பிடும் படைப்பாளர், இம் மாதா ஓவியத்தினைக்காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நினைவுகூறலுக்கான சின்னமாக வழங்குகின்றார்.

4. என்னுடையது எது?

என்னுடையது எனப் பெயரிடப்பட்டு, தறித் துணியில் பல்வேறுபட்ட மீனின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஒவ்வொரு மீனும் வேறுபட்ட தோற்றத்துடன் காணப்பட்டது. அவை ஒவ்வொன்றும் மனிதர்களின் வேறுபட்ட தனமைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. எவ்வாறு மீனெனும் பொதுப் பெயரினுள் ஒவ்வொரு தனியன்களும் வேறுபட்ட வடிவங்கொண்டு வாழ்கின்றனவோ அதே போன்று ஒவ்வொரு தனி மனிதனும் ஏனையோரில் இருந்து வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருப்பான். மீனினை குறியீடாக வைத்து நாம் நாம் எம்மைத் தேடுவதற்கான ஒரு களமாகக் குறித்த படைப்பு அமைந்திருந்தது.

இப்படைப்பினைக்’கருவாடு’ காட்சிகளின் ஆரம்பமாக உணர்ந்தேன். எவ்வாறு ஒவ்வொரு மீனும் கருவாடாக்கப்படும் செயற்பாட்டிற்காக காத்திருக்கின்றனவோ அதே போல மனிதர்களாகிய நாமும் காத்திருக்கின்றோம் என்பதை கருவாடு காட்சிகளைப் பார்த்த பின் உணரமுடிந்தது. எலும்பும், தோலும், தசையுமாய் இரத்த ஓட்டத்தோடு சேர்ந்து ஓடித்திரியும் மனிதர்கள் உயிர்ப்படங்கும் போது வெறும் எலும்புகள் அடங்கிய கருவாட்டுத்துண்டுகளாக முடக்கப்படுவதே இயற்கை என்பதனை சுசிமன் நிர்மலவாசன் தன் படைப்புகள் ஊடாக கூற விளைகின்றார்.பொதுவில் என்னால் இப்படைப்பு ‘என்னை நானே இனம் கண்டு கொள்ளும் தேடலுக்கான தொடக்க புள்ளியாகவே’ நோக்க முடிகின்றது.

5. கருவாடு

யுத்தத்தின் கோரப்பிடியில் பெறுமதியற்றுப்போன உயிர்களின் பேரவலத்தின் உச்சத்தனை, யாரையும் பாதிக்காத மென்மையான உத்தியினூடு ‘கருவாடு’ எனும் காட்சி வெளிப்படுத்துகின்றது. ஏனெனின் மீனின் இறப்பென்பது மனிதர்களைப் பாதிப்பதல்ல, மேலும் ‘கருவாடு’ என்பது மனிதர்களின் பசிக்கான வாழ்வியலின் வடிவம்.

மீன் ஒன்றிற்குள்ள, மகிழ்ச்சி, துன்பம், குடும்பம், எதிர்காலம் பற்றிய கனவுகள் உள்ளடங்கிய வாழ்வியல் அம்சங்களைப் பற்றிய சிந்தனை எள்ளளவும் இன்றி எம் பசிக்கான உணவாக மட்டும் நோக்குகின்றோம். அதே போல யுத்தத்தின் பசிக்கான உணவாக மட்டுமே நோக்கப்பட்ட மனித உயிர்களின் வாழ்வியலின் துயரத்தை இப் படைப்பு குறியீடாக வெளிக்காட்டியது.’கருவாடு’ காட்சி மூன்று படைப்புக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

5.1 தலைப்பிடப்படாதது.
5.2 கல்லறைத்துணி
5.3 பிரார்த்தனைப் படங்கள்

5.1 தலைப்பிடப்படாதது

ஒரு ஒழுங்கற்ற விதத்தில் கருவாடுகள் தனித்தனியாக பரப்பப்பட்டுக் காணப்பட்டது. அவை தலைப்பிடப்படாதது எனக் குறிப்பிட்டுக் காணப்பட்டது. இக் காட்சி, இன்னமும் உறவுகள் தேடிவராதகாரணத்தால், அடையாளம் காணப்படாத மனித உடல்களுக்கு குறியீடாக்கப்பட்டிருந்தது. இங்கு போர்க் காலத்தில் அலட்சியம் செய்யப்படும் உயிர்களின் அவல நிலை பேசுபொருளாகின்றது.

5.2 கல்லறைத்துணி

யேசுவை சிலுவையில் அறைந்த போது அவரைச் சுற்றிய போர்வையில் யேசுவின் இரத்தக்கறைகள் படியப்பட்டிருந்ததாகவும், அது யேசுவின் உருவாகக் கருதப்பட்டதாகவும் கூறுவர். அப் போர்வைத் துணி கல்லறைத்துணி எனப்பட்டது. அதே போல எம் மண்ணில் யுத்தத்தின் போது இறந்து போனவர்களின் உடல்களை போர்த்த பயன்படுத்தப்பட்ட துணிகளை கல்லறைத்துணியாக படைப்பாளி உருவாக்கியிருந்தார்.

5.3 பிரார்த்தனைப்படங்கள்

பிரார்தனைப் படங்கள் எனும் படைப்பு நெகிழ்ச்சியானதும், யுத்த வெறுப்பின் பரிமானமும் ஆகும். எம்மவர்கள் இறந்த பின் அவர்களின் புகைப்படங்களைப் பெரிதாக்கி பிறேம் (கசயஅந) போட்டு இறையியலோடு இணைந்த சடங்குகளை மேற்கொள்ளும் முறை எமது வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது.

ஆனாலும் யுத்தத்தருவாயில் புகைப்படங்கள் தொலைந்தும், தேடப்படாமலும் போயின…உறவுகளற்ற காணாமலாக்கப்பட்டோர் போல. இந் நிலையில் இறந்தவர்களின் உடல்களும் கவனிக்கப்படாது, தெருவோரங்களில் அல்லல்பட்டன. உயிர்காக்கும் போராட்டத்தில் இறந்த உடல்களை மிதித்தோடியவர்களே அதிகம்.

யுத்தம் முடிந்த பின் படைப்பாளி சுசிமன் நிர்மலவாசன் அவற்றிற்கான பிரார்த்தனைச் சடங்கு செய்ய முற்பட்ட போது புகைப்படங்கள் கிடைக்கவில்லை. எஞ்சிய உடல்களை சேர்த்தெடுத்து அவற்றினை பிறேம் போடுக்கிறார். உடல்கள் சப்பாத்து அடையாளங்களைத் தாங்கியும் தெருவில் இருந்த பொருட்களுடனும் வழிபாடிற்காக காட்சிப்படுத்தப்பட்டன.

அப் பிரார்த்தனைப் படங்களிற்குப் பார்வையாளர்கள் விளக்கேற்றி பிராத்தனையில் ஈடுபடக் கூடியதான வழிபாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இச் செயற்பாடு இறந்த உயிர்களையும், இறந்தவர் இரத்தவழி உறவாகினும் இருந்த இடத்திலேயே விட்டுவிட்டு வேறுவழியின்றி வலியுடன் கடந்து வந்து இன்னமும் உள்ளம் குமுறிக்கொண்டிருக்கும் உயிர்களையும் சாந்திப்படுத்துவதற்கான பிரார்த்தனையாகத் தோன்றியது.

கருவாடுகளுக்கான மீன்களைத் தெரிவு செய்யும் போது, பல மைல்கள் பயணித்து பல்வேறுபட்ட மீன்வகைகளை இனங்கண்டு கொண்டதும், அதன் சூழலில் வாழ்ந்ததும் தன் வாழ்வியலின் ஒரு பகுதியாகவே அமைந்துவிட்டதாக சுசிமன் நிர்மலவாசன் குறிப்பிட்டிருந்தார்.

6) சூர்ப்பனகை
என்னை வெகுவாக கவர்ந்ததொரு படைப்பு. காட்சியறையில் சூர்ப்பனகை எனப் பெயரிடப்பட்டு வௌ;வேறு தோற்றம் கொண்ட மூன்று பெண்களின் உருவம் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. குற்றமற்ற சூர்ப்பனகை,’ராமன் மீது காதலுற்றாள்’ எனும் காரணத்திற்காக ஆணாதிக்க சமூகத்தால் தண்டனையாக தன் மூக்கினை இழந்தாள். அதே போல யுத்தத்தில் எந்தக் குற்றமுமறியாத அப்பாவி மக்கள் தம் அவயங்களை இழந்தனர். என்பதன் குறியீடாக இப் படைப்பு அமைந்தது.

மூன்று பெண் உருவும் மூக்கில்லாது வரையப்பட்டடிருந்தது. அதில் இரண்டு உருக்களுக்கு செயற்கை மூக்குப் போன்ற உரு வரையப்பட்டிருந்தது. அது வண்ணத்துப்பூச்சியொன்றின் உணர்கொம்பினை ஒத்துக் காணப்பட்டது. இப் படைப்பு எம்மில் படைப்பு மீதான கேள்விகளை எழுப்பி, பின் அவற்றிற்கு விடையினைக் கண்டடைய வைத்து, இறுதியில் படைப்பின் ஆத்மாத்தமான கருத்தினை வெளிப்படுத்த முயற்சிக்கின்றது.

‘வண்ணத்தியின் உணர்திறன்கொம்பு போன்ற மூக்கு ஒருவருக்கு எவ்வாறு பொருந்தும்?’ எனப் படைப்பினைப் பார்வையிடுபவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் படைப்பு கேள்வியினைத் தூண்டுகின்றது. இன்று செய்து கொள்ளப்படும் உறுப்பு மாற்றுச் சத்திர சிகிச்சைகள் ஊடாக மக்கள் செயற்கை உறுப்புக்களைப் பெறுகின்றனர்.அவ்வாறான பலர் நம் சமூகத்தில் நம்முடனே தான் வாழ்கின்றனர். நாமும் தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டே அவர்களை கடந்து போகின்றோம்.

ஆனால் இவ் உணர்கொம்பு அமைப்பிலான மூக்குப் போல, சிகிச்சை மூலம் செயற்கை அவயங்கள் பொருத்தப்பட்டாலும், அது அவர்களது இயற்கை அவயங்களைப் போன்று அமைவதில்லை. இழப்பென்பது இழப்பே. அது குறித்த நபரின் அன்றாட வாழ்வியலில் எவ்வாறான இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றன என்பதைப் படைப்பு உணர்த்துகின்றது.

வண்ணமாக்குதல்

இப் படைப்பு 2018 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற ‘வன்முறையற்ற வாழ்விற்கான’ காண்பியல் கலைப்படைப்புக்களின் காட்சியில் பார்வையாளரின் பங்குபற்றலூடாக உருப்பெற்ற ஒரு படைப்பு.

மூன்று பக்கம் கண்ணாடியாலான எட்டுப் பெட்டிகளின் முகப்புக் கண்ணாடியில் உட்புறமாக யுத்தத்தால் கணவனை இழந்த விதவைப் பெண்களின் வரையப்பட்ட முகம் ஒட்டிவிடப்பட்டிருந்தது. அப் பெட்டியினுள் போடப்பட்டிருந்த வண்ணமயமான நூல்களால் குறித்த விதவைப்பெண்களின் ஓவியம் வண்மூட்டப்பட்டிருந்தன.

விதவைகளுக்கான வண்ணங்களை மறுப்பதன் ஊடாக, கணவனின் இறப்புக்குப் பிந்திய அவர்களின் வண்ணமயமான வாழ்வியலை மறுக்கும் சமூக நிலையிலை சுசிமன் நிர்மலவாசன் இப் படைப்பின் ஊடாக பகிரங்கமாக எதிர்க்கின்றார். அத்துடன் அவர்களுக்கான வண்ணமயமான வாழ்வியலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டி மக்களின் மனங்களில் மாற்றத்தைக் கொணர முயற்சிக்கின்றார்.

இதற்காக கிளிநொச்சி காட்சியின் போது பார்வையாளர்களினைக்(மக்கள்) கொண்டே அவ் வண்ணநூல்கள் பெட்டியினுள் நிரப்பப்பட்டுள்ளது. அதனடியாக விதவைகளினை வண்ணங்களில் இருந்து தவிர்த்து அவர்களை சமூகத்திலிருந்து புறமொதுக்கும் தவறான கருத்தியல்கள் மக்கள் மனதினை விட்டு நீங்குவதற்கான விதைகளை இடுகின்றார்.

இப் படைப்பு விதவைகளினை அவர்களது இருண்ட வாழ்வியலில் இருந்து மீட்க நினைக்கும் ஒவ்வொருவர்களினதும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக அமைந்தது சிறப்பானதே.

8) வன்முறைகளைக் களைதல்

2017 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற காண்பியல் கலைப்படைப்புக்களின் காட்சியில் பார்வையாளரின் பங்குபற்றலூடாக உருப்பெற்ற ஒரு படைப்பு.  ஒரு துணியில் வன்முறையினைக் களைவதற்கான வாசகங்கள் பார்வையாளர்களினால் எழுதப்பட்டது. அதிகளவானவை பாடசாலை பிள்ளைகளின் கைவண்ணமே அதில் இருப்பதாகவும், அதன் மூலம் வன்முறையற்ற வாழ்வினை மேற்கொள்ள மாணவர்கள் உறுதி எடுத்து கொண்டதாவும் குறிப்பிட்டார்.

‘சிறுவர் துஸ்பிரயோகத்தை ஒழித்தல் நாட்டின் எழுச்சி,வன்முறையை ஒழிப்போம், வல்லமை உண்டு வாழ்வும் உண்டு’ போன்ற வாசகங்களைக் குறிப்பிடலாம். இவைதமிழ், சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தன. அவை வன்முறையினைக் களைவதற்கான பிரார்த்தனைக்காக நாடளாவிய ரீதியில் மக்கள் தயாராக இருப்பதன் ஆரம்ப நம்பிக்கையாகத் தோன்றியது.

9) பளபளப்பான புதிய ஆடை 2015

ஒரு ஆடை மாட்டியில் (ர்யபெநச) வெளித்தோற்றத்திற்கு பளபளப்பான ஒரு ஆடை போடப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்வையிட்ட போது சிறிய சிறிய கண்ணாடித் துண்டுகளால் நெய்யப்பட்டு, ஆங்காங்கே துளைகளையும் கொண்டு காணப்பட்டது. கண்ணாடித்துண்டங்கள் கை வைத்தால் வெட்டிவிடும் நிலையில் காணப்பட்டன. அதன் உட்பகுதியில் மக்களது அன்றாட வாழ்வியலை காட்சிப்படுத்தும் முகமாக புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

யுத்த சூழலின் தாக்கம் மக்களின் வாழ்வியலின் அனைத்து உட்கட்டுமானப் பகுதிகளையும் சிதைவடையச் செய்து விட்டிருந்தது. இதன் அடிப்படையில் பலரும் உள்ளார்ந்த ரீதியில் உடைந்திருந்த நிலையில், நவநாகரீகப் போர்வை ஒன்று எல்லாவற்றையும் மறைத்துப் பளபளப்பாக மின்னுகின்றது. இதன் குறியீடாக இப் படைப்பு அமைந்துள்ளது.

ஒவ்வொரு துளையும் யுத்த வடுக்களோடு வாழும் மக்களின் ஆறாத காயங்களையும், ஆபத்தான கண்ணாடியின் பளபளப்பு, வெளிப்பகட்டிற்கு மக்கள் வாழும் ஆபத்தான நவநாகரீக வாழ்க்கை முறையினையும் குறிப்பிடுவதாக அமைந்தது.

10) நல்ல பதிலுக்கான பிரார்த்தனையில் நாங்களும் இணைவோம்

இப் படைப்பு மட்டக்களப்பில் இடம்பெற்ற ‘வன்முறையற்ற வாழ்விற்கான’ காண்பியல் கலைப்படைப்புக்களின் காட்சியில் பார்வையாளரின் பங்குபற்றலூடாக உருப்பெற்ற ஒரு படைப்பு.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நான்கு பெண்களின் முகங்களுடனான ஓவியத்தின் கீழ் நேர்த்திக் கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் இரு பக்கமும் தீர்வுக்கான பாதை எனும் குறியீட்டின் அடிப்படையில் பாதைவடிவிலான வடிவம் வரையப்பட்டிருந்தது. பொதுவாகவே அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டிருந்தன. தீர்வுகளுக்காகப் பிரார்த்திக்கின்றவர்கள் தம் நேர்த்திக் கயிறுகளைக் கட்டி தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கானவோர் களமாக இப் படைப்பு அமைந்தது.

11) கடந்து வந்த யத்தத்தின் ஏராளமான நினைவுகளில் ஒன்றையேனும் நீங்கள் பதிவு செய்யலாம்

இது யாழ்ப்பாணக் காண்பியல்கலைக்காட்சியின் பார்வையாளர்களையும் பங்குபற்றாளர்களாக்குவதற்கான புதிய படைக்காகக் காணப்பட்டது. தமது வாழ்நாளில் கடந்து வந்த யுத்தத்தின் நினைவுகளை பார்வையாளர்கள் குறித்த படைப்பில் பதிவு செய்ய முடியுமாக இருந்தது. எம் வலிகளை வெளியில் சொல்லத் தயாராகிய கணமே நாம் பிரச்சனைக்கான தீர்வுகளைத் தேடி நகர ஆரம்பித்து விடுவோம் என்பது இயற்கை. ஆனாலும் பலர் தம் துயரங்களைக் குரலினை ஒரு ஊடகமாகக் கொண்டு பொதுவெளியில் முன்வைக்க தயங்குகின்றனர். இதற்கான தீர்வாக இப் படைப்பு அமைகின்றது என்பேன். மக்கள் தமது வடுக்களின் ஆற்றாமைகளை பொது வெளியில் பதிவிடுவதற்கான ஒரு தளமாக இப் படைப்பு அமைகின்றது.

பலரும் தம் யுத்தத்தின் வலி மிகு நினைவுகளை பதிவிட்டிருந்ததுடன், சிலர் அவர்களது துன்பத்தில் பங்கெடுத்து அதற்கு ஆறுதலான, நம்பிக்கையூட்டும் வாசகங்களையும் பதிவிட்டிருந்தனர். ஒருவர் தன் வலிகளை கூறும் போது இன்னொருவர் நம்பிக்கையூட்டுமளவு ஆறுதலளித்தல் என்பது, பொதுவெளியில் மக்கள் கூட்டிணைவதற்கான புதியதொரு பண்பாட்டு வடிவம் ஒன்றினைத் தோற்றுவிப்பதற்கான களமாக அமைந்தது.

இவ்வாறு அனைத்துப் படைப்புக்களும் யுத்தம் தொடர்பாக எம்மில் இதுவரை எழாத பல்வேறுபட்ட கேள்விகளை வலிந்து தோற்றுவிக்கின்றது. மறுகணமே அக் குறிப்பிட்ட படைப்பே அதற்கான விடையாகவும் பரிணமிப்பது என்பது சுவாரஸ்யமும், ஆழமும் நிறைந்த ஒன்றாகத் தோன்றியது. பொதுவான சமூகத்தில் இருந்து வேறுபட்ட பார்வை, வேறுபட்ட கோணம், வேறுபட்ட உத்திமுறைகள் உணர்வுகள் மட்டும் இரண்டறக் கலந்தவோர் தன்மை.

யுத்தம் முடிந்த பத்து வருடத்தின் பின்னும் காட்சிகளில் பிரதிபலிக்கும் முகங்களின், முகபாவங்களே அவர்களின் உண்மையான கசப்பான வாழ்வியல். அவை தம் இழப்புக்களின் இயலாமையின் உச்சத்தில் ‘எதைத்தான் நாம் மறப்பது’ என நொந்துகொள்கின்றன. சுசிமன் நிர்மலவாசனின் படைப்புக்கள் யதார்த்த வாழ்வியலை படம்பிடிப்பதில் மட்டுமல்லாது பார்வையாளரோடு உரையாடவும் செய்கின்றது. ‘யுத்தம் முடிந்து பத்து வருடமாகிவிட்டதே திரும்ப திரும்ப ஏன் வலிகளை ஞாபகப்படுத்துகின்றீர்கள்?’ என யுத்தத்தின் வாசனை அறியா நம்மில் பலரும் கேட்கும் பிரதான கேள்விக்கு பொருத்தமான பதிலைச் சுசிமன் நிர்மலவாசன் தன் படைப்புகள் ஊடாக வழங்கியிருந்தார்.

குறித்த படைப்புக்கள் சார்ந்து விளக்கம் அளிக்கும் போது படைப்பாளி ஒரு கதை சொல்லியின் பாங்கில் பிரமிப்பூட்டுவது இக் காண்பியல்கலைக்காட்சியின் பெறுமதியினை உணர்த்தியது.சுசிமன் நிர்மலவாசன், படைப்புக்களுக்காகப் பயணிப்பதோடு இன்றுவரை தன் படைப்புக்களோடும், படைப்புக்களின் வடிவங்களோடும் இணைந்தே பயணிக்கின்றார். இதுவே அவரது படைப்புக்களின் கனதிக்கான காரணம் என நம்புகின்றேன்.

மொத்தத்தில் ‘எம்மில் இதுவரை எழாத கேள்வியும் பதிலும்’ சுசிமன் நிர்மலவாசனின் படைப்புக்கள்.

விதுர்சா கமலேஸ்வரன்..

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More