இலங்கை பிரதான செய்திகள்

போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை

இந்தியாவிலிருந்து இலங்கையின் வடக்கு கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதைப்பொருளைக் கடத்திய இந்தியர்கள் மூவருக்கு தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2014ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் திகதி இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் படகில் பயணித்த இந்தியர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து 70.1 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இந்தியர்கள் மூவரும் திருகோணமலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தியர்கள் மூவருக்கும் எதிராக நஞ்சு அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனும் எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.கௌதம் ஆகியோர் முன்னிலையாகினர்.
எதிரிகளுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது. எதிரிகள் மூவரும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். “எதிரிகள் தாமாக முன்வந்து குற்றத்தை ஒத்துக்கொண்டதற்கு அமைவாக அவர்களை குற்றவாளிகளாக மன்று அறிவிக்கின்றது.
குற்றவாளிகள் மூவருக்கும் 40 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அந்தத் தண்டனை 10 ஆண்டுகளுக்கு (120 மாதங்கள்) ஒத்திவைக்கப்படுகிறது.
குற்றவாளிகள் மூவரும் தலா 50 ஆயிரம் ரூபா பணத்தை சாட்சிகள் பாதுகாப்பு நிதியத்துக்கு செலுத்த வேண்டும்.அதனைச் செலுத்தத்தவறின் 2 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தண்டனைத் தீர்ப்பளித்தார்.
இந்தியாவின் இராமேஸ்வரத்தைச சேர்ந்த காலி மாரி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிஜாம் குமரேஸ், இராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் தேசிங்கராஜன் ஆகிய மூவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது.
அவர்களில் காளி, மாரி மற்றும் அலெக்சாண்டர் தேசிங்கராஜன் ஆகியோர் சார்பில் சாட்சிகள் பாதுகாப்பு நிதியத்துக்கு பணம் செலுத்த எவரும் இல்லாததால் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.  #போதைப்பொருள்  #இந்தியர்கள்  #சிறைத்தண்டனை
-மயூரப்பிரியன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.