இலக்கியம் இலங்கை கட்டுரைகள்

படைப்பாளியின் பணி என்பது, தான் நம்பும் உண்மைக்கு விசுவாசமாகவும் சாட்சியமாகவும் இருத்தல்…

பா.அகிலன் நேர்காணல்

நேர்கண்டவர் : சக்தி தமிழ்ச்செல்வன்
யுத்த காலத்தின் ஓலங்களையும் சிதிலமடைந்த மனித மனங்களின் கொதிப்பையும் தன் கவிதைகளின் சாரமாய்க்கொண்டவர் கவிஞர் பா.அகிலன். போரின் மீளாப் பெருந்துயரங்கள், அவரது மொழியில் விம்மியெழுபவை. கவிதை, கலை விமர்சனம், மரபுரிமை காத்தல் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர். சென்னை தக்சன்சித்ராவில் ஒரு பிற்பகல் வேளையில் அவரைச் சந்தித்தேன். கலைப்பொருள்களைப் பார்த்துக்கொண்டே வந்தவரின் முகத்தில் பல உணர்ச்சிபாவங்கள். அந்த இடமும் பொழுதும் உரையாடுவதற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது….

“கலை விமர்சனம் படித்தவர் நீங்கள். கவிதை குறித்த உங்களது மதிப்பீடு என்ன?”

“கவிதை, மொழியின் செறிந்த (Intence) வடிவம். அதேசமயம் மொழியழியும் தருணத்திற்கு மிக அருகில் இருப்பது. சொற்களால் அது உருவாக்கப்பட்டிருந்தாலும், சொற்களுக்கு அப்பாற்தான் அது திறக்கிறது. ஒருவகையான சொற்களால் சொற்களைக் களையும் விசித்திர விளையாட்டைக் கவிதைகள் நிகழ்த்துகின்றன.”

“இறந்தவர்களை நினைவில்கொள்ளும் நூலைப்போன்ற உங்களது ‘சரமகவிகள்’ கவிதைத் தொகுப்புப் பற்றிச் சொல்லுங்கள்…”

“சரமகவிகள், 2011-ல் வெளியாயிற்று. இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்ட நினைவுகளாலும் நிகழ்ச்சிகளாலும் உருவாகிய மனக்காயங்களைப் (Trauma) பின்தொடரும் இந்தக் கவிதைத் தொகுதி, உடற் காயங்கள், ஆறாத புண்கள், அழுகும் தசைகள், குருதி, சீழ் அவற்றில் நெளியும் புழுக்கள், வலி, அங்கவீனம், இறப்பு, இழப்பு, ஓலம் ஆகியவற்றாற் பின்னப்பட்டது. இந்தக் கவிதை நூலின் உள்ளடக்கமானது, இலங்கையில் இறந்தவர்களது நினைவாக அவர்களுக்காகச் செய்யப்படும் 31-வது நாட்சடங்கின்போது வெளியிடப்படும் ‘கல்வெட்டு’ நூலைப் பற்றிய சமாந்தரமான எண்ணத்தை உருவாக்கியபோது, இந்தக் கவிதை நூலுக்கு பாரம்பர்யமாக அவற்றிற்குப் பயன்படுத்தப்படும் ‘சரமகவிகள்’ (Elegy) எனும் பெயரை இட்டோம்.

“படைப்பாளியின் பணி என்பது, தான் நம்பும் உண்மைக்கு விசுவாசமாகவும் சாட்சியமாகவும் இருத்தல்!”

அதன் தொடர்ச்சியாக, அதன் தோற்றத்தை மேற்படி பாரம்பர்யமான கல்வெட்டு நூல்களிலிருந்து அதன் வடிமைப்பாளரான ஓவியர் சனாதனன் உருவாக்கினார். அதன் முகப்பட்டையின் நிறத்திலிருந்து, அதிலிடம்பெறும் வார்த்தைப் பிரயோகங்கள், எழுத்துகளின் வடிவம், அலங்கார வடிவமைப்புகள் (Designs) என்பன கவனத்திற் கொள்ளப்பட்டன. அத்துடன், நூலின் உள்ளே பாரம்பர்யமான கல்வெட்டு நூலின் முதற்பக்கத்திற் வருவது போன்ற Tissue காகிதம் மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெறும் இறந்தவரது புகைப்படம் என்பவற்றிலிருந்து அவராற் புத்துருவாக்கப்பட்ட கறுப்பு Tissue-ல் பதிக்கப்பட்ட ஒளியூடு புகத்தக்க (Transparency) வெண்ணிறத்தாலான ஒரு பொது மனிதவுடற் தோற்றம் முதலியவற்றுடன் அமைந்த அந்நூல், பல அங்கங்களாக, பலவித மனநிலைகள் என்பவற்றோடு வாழ்க்கையின் உட்புறம் வெளிப்புறமாகியவற்றை வெளிப்படுத்தும் கவிதைகளோடு காணப்பட்டன. கவிதைகள் மட்டுமன்றி, அதைக் காவும் நூலுடலும் அதன் தோற்ற அமைவில் ஒரு பிரதிநிதித்துவமாக (Representation) இருக்கவேண்டும் என்ற நாட்டம் எங்களிடம் காணப்பட்டது. சரமகவிகளில் என் மொழி இரத்தம், சடலம், மலம், சலம், மாதவிடாய், எச்சில். விந்து என இழிதகமையது எனப் பெருமளவு சிந்திக்கப்படும் வார்த்தைகளால் நிரம்புகிறது. அவற்றின் மேலாகப் பலசமயம் ஈக்கள் பறக்கின்றன.”

“மரபுரிமையைக் (Heritage) காப்பது பற்றி தொடர்ச்சியாக எழுதியும், இயங்கியும் வருகிறீர்கள். மரபுரிமையைக் காப்பதன் சமகாலத் தேவை என்ன?”

“அடிப்படையில் மரபுரிமை என்பது குறிப்பிட்ட சமூகக் குழுமமொன்றின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைக் கூறும் தடயப்பொருள்கள். வரலாறு, அகழ்வாய்வியல் என்பனவெல்லாம் அதன் அறிவியல் அறம் மீறிய மலினமான அரசியற் செயற்பாட்டுக்கான புனைவுகளாக பிரயோகிக்கப்படுகின்ற சூழலில், அவற்றுக்கு எதிரிடையாக மரபுரிமைகள் வரலாற்றின் பன்மைத் தன்மையினது தடயங்களாகவும் வாழும் சாட்சியங்களாகவும் நிற்பவை என்றவகையில் அவை முன்னெப்போதையும்விட பாதுகாக்கப்பட வேண்டிய அத்தியாவசிய நிலையில் உள்ளன. அதனாற்றான், மரபுரிமைகளை அழித்தலுடாக வரலாற்றின் தடயங்களை அழித்தலென்ற பண்பாட்டுப் படுகொலைகளை (Cultural Genocide) ஆக்கிரமிப்பாளர்கள் நடாத்த முயல்கிறார்கள்.

அதேசமயம் மரபுரிமை என்பது ஒரு அறிவுத்தொகுதியுமாகும் (Knowledge system). எனவே அவற்றைப் பாதுகாப்பதென்பது அறிவை, ஆற்றல்களை (skills) பாதுகாக்கும் செயற்பாடுமாகும். விவசாயம், மீன்பிடி – நாவாய் சாஸ்திரத்திலிருந்து, சித்தமருத்துவ மரபுகள், கட்டடப் பொறிமுறைகள், ஆடை நெய்தல் என நீண்டு விரியும் உள்ளூர் அறிவுகளின் பெருந்தொகுதியைப் பாதுகாத்தலூடாக, இன்று மேலோங்கி நிற்கும் மேற்கு மையப் போக்குகள் – அவற்றின் சிக்கலான நிலவரங்களுக்கான மாற்று அறிவை (Alternative knowledge) சுதேசிய மரபுகளிலிருந்து கட்டியெழுப்ப மரபுரிமைகள் காக்கப்படவேண்டும்.

குறிப்பிட்ட இடத்திற்கேயான தனித்துவமுடைய நீர்நிலைகள், கனிமங்கள் வனவிலங்குகள், தாவரங்கள், நிலவுருக்கள் முதலான இயற்கை மரபுரிமை (natural heritage) பற்றிய விழிப்பின்மை பலவகைப்பட்ட சிக்கல்களைப் பல தளங்களில் உருவாக்கியிருக்கிறது. எனவே பண்பாட்டு மரபுரிமைகள்போல, இயற்கை மரபுரிமைகளும்பாதுகாக்கப்படவேண்டிய அவசியத்திலுள்ளன. அது மட்டுமன்றி மரபுரிமைகள், அவற்றின் இருப்பினூடாக கூட்டுப்பிரக்ஞையையும் – கூட்டுணர்வினையும் (Solidarity) சமூகத்திற்கு வழங்குகின்றன. அது அதன் மூலம் சமூகத்தை தொடந்து ஒன்றிணைக்கிறது. ஜல்லிக்கட்டு அவ்வகைப்பட்ட ஒன்றிணைப்பின் அண்மைக்கால உதாரணமாகும். இன்னும் முக்கியமாகச் சொன்னால், மரபுரிமையைப் பாதுகாத்தலென்பது உலகளாவிய மனிதகுல மாண்பினைப் பாதுகாக்கும் அதன் தனித்துவங்களையும் வேறுபாடுகளையும் மரியாதை செய்யும், அதைக் கொண்டாடும் ஒரு செயற்பாடுமாகும். இவற்றைத் தொகுத்து நோக்கினால் மரபுரிமைகள், அடிப்படையில் சமூகமொன்றின் பொருளாதார மற்றும் பண்பாட்டு அபிவிருத்தியின் மிகமுக்கிய அடித்தளமாக அமைவதை அவதானிக்கலாம்.”

“படைப்பாளியின் பணி என்பது, தான் நம்பும் உண்மைக்கு விசுவாசமாகவும் சாட்சியமாகவும் இருத்தல்!”

“மரபுரிமை குறித்து பேசும்போது, அது குறிப்பிட்ட இனக்குழு அடையாளங்களைத் தூக்கிப்பிடிக்கும், பழம்பெருமை பேசக்கூடிய ஒன்றாக மாறவும் வாய்ப்புள்ளதல்லவா?”

“மிகவும் மேலோட்டமான மட்டத்தில் நீங்கள் கூறுவது சரிதான். எங்களிற் பலர் மரபுரிமைகளைப் பழம்பெருமை பேசுதற்கான ஒரு வாய்ப்பாகவே அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதிலும் உண்மையில்லாமல் இல்லை. அது அதன் ஒரு மட்டத்தில் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஆழமான அர்த்தத்திலும், பயன்பாட்டிலும் மரபுரிமைப் பற்றிய உரையாடல்களும், செயற்பாடுகளும் மேற்படி ஒற்றை அடையாளங்களைத் தூக்கிப்பிடித்தல், பகுத்தறிவுத் தளமற்ற பழம்பெருமை பேசுதல் என்பதற்கு எதிரிடையானது. அது பல்வகைத் தன்மைகள் – வேறுபாடுகள் என்பவற்றைக் கொண்டாடும் பரந்துபட்ட ஜனநாயகத் தளத்தினை தனது செயற்பாட்டுப் பரப்பாகக் கொண்டது.

ஆனால், இத்தகைய ஜனநாயகச் சட்டகத்தின்மேல் எமது மரபுரிமைகள் பற்றிய வாசிப்புகளும், சேகரிப்புகளும், அரும்பொருளகங்கள் முதலான அதனோடு நெருக்கமுடைய நிறுவனங்களும் எமது பண்பாட்டுச் சூழலிற் தொழிற்படவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய உண்மையாகும். எமது மரபுரிமைப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்கள், செயற்பாடுகள் என்பனமீதான ஆழமானதும் விமர்சனபூர்வமானதுமான மீளாய்வுகள் அவசரத் தேவையாகியுள்ளன. இன்று எங்கள் வசமுள்ள சட்டகம் பரந்துபட்ட சமூகத்தின் பல்வகைத் தன்மைகளது பிரதிநிதித்துவம் அல்ல; பதிலாக அது நாமறிந்தும், அறியாமலும் மேலாதிக்க அதிகார அரசியற்தன்மை பெற்றுள்ளது. மரபுரிமைச் செயற்பாட்டாளர்கள் அதை ஜனநாயகப் படுத்துவதற்கான ஏற்பாடுகளை நோக்கிச் செயற்படவேண்டும். எமது அடையாளங்கள் பற்றிய உரையாடல்கள் எவ்வளவு தூரத்திற்கு கூட்டுப் பிரதிநிதித்துவம் மற்றும் மற்றவர்களைச் சமதையாக ஏற்றல் எனும் ஜனநாயகப் பண்புடையவையாக உள்ளன என்பதை நாம் எப்போதும் கவனத்திற் கொள்ளவேண்டும்.”

“ஓவியம், சிற்பம் முதலான கட்புலக் கலைவடிவங்கள் போரை, போர்க்கால வாழ்வை எவ்விதம் சமகாலத்தில் பிரதிபலிக்கின்றன? அவற்றின் பேசுபொருள் என்னவாக இருக்கின்றன?”

“1980-களோடு எழுச்சியடைந்த கலைவெளிப்பாட்டுச் செயற்பாட்டில், ‘நவீன ஓவியம்’ முக்கியமான ஓர் அங்கமாகக் காணப்பட்டது. ஓவியர் மாற்கு, போர்கால ஓவியங்கள்’ என்ற ஓவியத்தொடரை வரைந்தார். போரின் கீழிருந்த யாழ்ப்பாணத்திற்கு அப்போது பாரம்பர்யமான ஓவிய, சிற்ப மூலப்பொருள்கள் கிடைக்காத நிலைமையில், அவர் படைப்பாக்கச் செயற்பாட்டுக்குச் சாத்தியமான எதனையும் மூலப்பொருள்களாக் கொள்ளலாம் என்ற அணுகுமுறையைக் கைக்கொண்டார். அவ்வகையில் அச்சிடப்பட்ட தாள்களிலிருந்து, வீசி எறியப்படும் கழிவுப்பொருள்கள் (Junk Materials) வரை மூலப்பொருள்களாகப் பயன்படுத்தினார். அவரது தனித்த இயக்கம், காண்பியக்கலை ஈடுபாடுடைய இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒன்றாகவும், கலையின் நவீனப்போக்குகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்றாகவும் இருந்தது. அத்துடன் பெருமளவுக்கு உருவவாத அணுகுமுறை உடையதாக இந்தக் காலகட்டம் காணப்பட்டது.

1990-களுக்குப் பின்னர், ஓவியர் சனாதனனின் வருகையோடு உருவாகும் தலைமுறை அதன் பேசுபொருளிலும், வெளிப்பாட்டு முறையிலும் பரந்துபட்ட மாற்றங்களை உண்டாக்கியது. ஆழமான உணர்ச்சித் திரட்சியுடையதும் கருத்துருவக் கலையின் (Conceptual Art) அடிப்படைகளையுடையதுமான இப்போக்கு, இலங்கைத் தீவில் சிறுபான்மையினராக வாழ்தலின் நெருக்கீடுகளை – ஒடுக்குமுறைகளை மிக நுட்பமான தளங்களிற் பேசத் தொடங்கியது. கிழிந்து பெயர்ந்து, பிணைக்க முடியாது துண்டாய்ச் சிதறிய நிலங்கள், துப்பாக்கிச் சன்னந் தைத்த சுவர்கள், காடு பற்றிய வீடுகள், பதுங்குகுழிகள், ரத்தப்பாதைகள், எல்லைகள், உடலுருக்கள் – முண்டங்கள் என விரியும் அதன் படைப்பு வெளிகள் நினைவுகளும், மனக்காயங்களும் சாட்சியமற்ற வரலாற்றின் சாட்சியங்கள் உறையும் வெளிகளாயுள்ளன.

அவ்வகையில், அழிக்கப்படும் வரலாற்றின் பெரும் பக்கங்கள் மீதாக ‘நினைவுகளை நடுதலை’ முக்கிய பண்பாய்க்கொண்டுள்ள அண்மைக்காலக் காண்பியக்கலைச் செயற்பாடுகள் முக்கியமானவை. தாபனக் கலை (Installation Art) தொடக்கம், படைப்பாளியின் புத்தகம் (Artist Book) வரையான பன்மைப்பட்ட வடிவங்களில் அவை வெளிக்கொணரப் படுகின்றன. இவற்றின் குறிப்பிடத்தக்க முன்னோடிச் செயற்பாடாக சனாதனனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் நான்கு கலைவரலாற்று மாணவர்களும் இணைந்து 500 வீடுகளிலிருந்து சேகரித்த, அவ்வீட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் யுத்தநினைவுப் பொருள்களைக்கொண்டு ஒரு விஞ்ஞான ஆய்வுக்கூடம்போல வடிவமைத்த ‘வரலாறுகளின் வரலாறு’ எனும் தாபனக் கலை வடிவத்தைக் கூறலாம்.

இவற்றுக்கு வெளியில் ஜனரஞ்சகத் தளத்தில் அட்டைப்படங்கள், சுவரொட்டிகள், விளக்கவரைபடங்கள் கார்ட்டூன்கள் முதலியவற்றிலெல்லாம் யுத்த நிலபரங்களது காட்சி ரீதியான தடங்கள் பதிந்தன. ஓவியர் ரமணியின் அட்டைப்படங்கள், சிரித்திரன் சுந்தரது கார்ட்டூன்கள் என்பன இவற்றினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான உதாரணங்களாகும்.”

“தொடர்ச்சியான யுத்தம், பண்பாட்டு ரீதியாக ஈழத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள், சிக்கல்கள் என்னென்ன?”

“ஈழச்சமூகம் தலைகீழாகப் புரட்டப்பட்டுள்ளது. அதன் நிறுவனக் கட்டமைப்புகள் சமூகவலைப் பின்னல்கள் பெரியளவில் உடைந்து, அவற்றின் தொடர்ச்சியை இழந்துள்ளன. குடும்ப அமைப்பிலிருந்து கல்வி நிறுவனங்கள் வரை இதன் தாக்கங்கள் ஆழமான பாதிப்பையும், குழப்பங்களையும் உண்டாக்கியுள்ளன. பல சமூகப் பெறுமானங்கள் – அறங்கள் ஈடாடிப்போயுள்ளன. யுத்தங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்புக் காரணமான இடப்பெயர்வுகளும், புலப்பெயர்வுகளும் அயலவர் – உற்றார் – உறவினர் என்ற கட்டுமானத்தைச் சிதறடித்துள்ளன. குடும்பமென்ற அமைப்பே பெருமளவுக்கு ஒரு Dislocated Phenomenon ஆகிவிட்டது. மேலும் பரம்பரை பரம்பரையாக அவர்கள் வாழுமிடத்திலேயே அந்நியர்கள்போல, தாமறியாத புதியவர்களுடன் வாழும் ஓர் அமைப்புமுறையை அது விருத்தி செய்துள்ளது. இது இறுக்கமான சமூகப் பிணைப்புடைய சமூகக் கட்டமைப்பை உடைத்துள்ளதுடன், பாரம்பர்யமான பரஸ்பர ஆதரவளித்தல் முறைமை (Supportive System) இல்லாமற் செய்துள்ளது. ஏறத்தாழ மேட்டுக்குடிகள் சமூகத்திலிருந்து முற்றாகவே அகன்றுள்ளனர். பெரியளவிலான புலமையாளர் வெளியேற்றம் நடைபெற்றுள்ளது.இறப்புகள், இழப்புகள் காரணமாக ஒற்றைப் பெற்றோருடைய குடும்பங்கள் – குறிப்பாகப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் – அதிகளவில் உருவாகியுள்ளன.

விரக்தி, நம்பிக்கையீனம், செயல்முனைப்பின்மை மற்றும் தங்கியிருக்கும் நிலை, குரலெழுப்ப முடியாமை, பதற்றம், பயம், கவலை, காரணமற்ற உடலுபாதைகள், சந்தேகம் முதலான பண்புகள் சமூக உளவியலில் அதிகம் மேலோங்கியிருக்கிறது. பேரிழப்புகள் காரணமான தனிநபர் மற்றும் கூட்டு மனக்காயங்கள் (Personal and Collective Traumas), மேற்சொன்ன மன நிலவரங்களுக்கும் அதனைவிட ஆழமான மனநோய்கள் நோக்கியும் பலரைத் தள்ளியிருக்கின்றன.”

“இறுதி யுத்தத்துக்குப் பிறகான சூழலை ஒரு பேராசிரியராக, கல்வியாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“மேலே சொன்ன பதிலினை அடியொற்றிச் சுருக்கமாகச் சொன்னால், ‘அரசற்ற தரப்புகளது’ அல்லது சிறுபான்மையினரது உரிமைகளுக்கான உத்தரவாதமற்ற உலகளாவிய நீதிப் பொறிமுறை பற்றிய புரிந்துகொள்ளலுக்கான சூழலை அது ஏற்படுத்தியிருக்கிறது. நீதிக்கும் அதிகாரத்துக்குமான உறவுகள் தொடர்பான தீர்க்கமான விவாதங்களுக்கான மேலும் ஒரு பாடத்தையும், ஐ.நா-வினது அமைப்பு ரீதியான தோல்வியை அறிதலுக்கான இன்னொரு வாய்ப்பையும் அது தந்துள்ளது.

உள்ளூர் நிலபரங்கள் என்பவை சர்வதேச நிலபரங்களினால் அதன் தேவைகளால் வடிவமைக்கப்படுவை என்பதற்கான தீர்க்கமான படிப்பினைகளை, அரசியற் பொருளாதாரத்தின் சமகால இயங்கு நிலை – பல்தேசியக் கம்பனிகளது உலகளாவிய அதிகார வலுபோன்ற பல விடயங்கள் பற்றிய கற்றலுக்கான சந்தர்ப்பத்தை இந்தச் சூழல் எமக்குத் தந்திருக்கிறது. அதேநேரம், மிகப் பெரியளவிலான சமூகப் பண்பாட்டுத் தலைமைத்துவ இடைவெளி, உள்ளூர்த் தமிழ்ச் சமூகத்திற் காணப்படுகிறது. இந்தப் பத்து வருட காலத்தில், ஈழத்தமிழர்கள் தமது கடந்தகாலம் தொடர்பாக எவ்வளவு தூரம் பாடங் கற்றுள்ளார்கள் என்பதும், ஆழமான ஒரு சுயவிமர்சனத்தைச் செய்துள்ளார்கள் என்பதும் முக்கியமான ஒரு கேள்வியாகும். அதுவே அனைத்துவகையிலும் அவர்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த முடியம். அவர்கள் முன்பாக இருக்கக்கூடிய விரும்பத்தகாத நிலபரங்களை மாற்றியமைக்கக் கூடிய பொறிமுறைகளை நோக்கி இந்தப் பத்து வருடத்தில் எத்தகைய வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன என்பதும், அவை எவ்வளவு தூரம் அதனோடு தொடர்புடைய ஏனைய விடயங்களோடு இணைக்கப்பட்டு ஒரு வலுமிக்க சக்தியாகத் திரட்டப்பட்டுள்ளது என்பதும் முக்கியமானது. மிகப்பெரிய யுத்தத்துக்குப் பிற்பட்ட மனக்காயச் சிக்கல்கள் கண்டடையப்பட்டபோதும், அதை எதிர்கொள்வதற்கும் அதை மாற்றியமைப்பதற்குமான பாரிய பொறிமுறை ஏதும் இன்னும் இங்கில்லை. இந்த உதாரணமானது கல்விக்கு, மரபுரிமைப் பாதுகாப்புக்கு என அனைத்துக்கும் பொருந்தும் ஒன்றாக உள்ளது. இதை ஒட்டிய மதிக்கத்தக்க தனிநபர் முயற்சிகள் ஆங்காங்கே காணப் பட்டாலும், ஒட்டுமொத்த மாற்றங்களை நிகழ்த்தத் தக்க தரப்புகள் இவற்றில் செயலூக்கம் இன்றியே உள்ளன. இவற்றின் மீது கரிசனையுடைய வேறுபட்ட தரப்புகள் தங்கள் அபிப்ராயங்களோடு மோதி, ஒரு பொது முன்னேற்றத்துக்கான வலையமைப்பை தம்மிடையே விருத்தி செய்துகொள்வதற்கான இணைச்செயற்பாடுகள் பத்து வருடத்தில் ஏற்படுத்துதற்குப் பதிலாக, அதிகபட்சம் தனித்தனி குழுக்களாதல் என்பதே அதிகம் நிகழ்ந்துள்ளது. பொதுவெளியானது மேலும் ஜனநாயகப்படவும், சிந்தனைத் திறமுடையதாகவும், மாற்றமுறுதற்கான சிறு வெளிச்சப் புள்ளிகள் ஆங்காங்கே சிற்றொளி காட்டி மறைகின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றே.”

“சர்வதேச அரங்கில் ஈழத்துப் படைப்பாளிகள் முகம் என்னவாக இருக்கிறது? படைப்பாளியின் பணி என்னவாக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?”

‘ஈழத்துப் படைப்பாளிகள் முகம்’ என்பதனூடாக அவர்களது அடையாளம் என்ன எனக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இதுவும் நீண்ட சிக்கலான விவாதங்களை உள்ளடக்கி நாம் வந்தடைய வேண்டிய பதிலாக இருக்கும். ‘Poetry London’ நடத்தியவரும் ஆங்கிலக் கவிஞருமான தம்பிமுத்துவையும், அண்மையில் சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்ட ‘Vor der Zunahme der Zeichen’ என்ற ஜேர்மானிய நாவலை எழுதிய செந்தூரன் வரதராஜாவையும் எங்கே எப்படி ஈழத்து அடையாளம் பற்றிய கருத்தாடலில் வைப்பது என்பது முக்கியமானதும், சிக்கலானதுமான ஒரு கோட்பாடு சார்ந்த கேள்வியாகும். மேலும் பாரம்பர்யமான அடையாள அளவுகோல்களைக் கடந்து யோசித்தால், இது தொடர்பிலான புதிய பார்வைகளை நோக்கி நாம் திரும்பவேண்டியிருக்கும் எனவும் நம்புகிறேன். இது மேலும் விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால், முன்னெப்போதையும் விட சிறுபான்மைத் தமிழ் நோக்குநிலை சார்ந்தவோர் உரையாடல் சர்வதேச அளவில் கலை இலக்கியப் புலத்தில் உருவாகக் காரணமாகப் பல படைப்புகள் அண்மைக்காலத்தில் உருவாகியுள்ளன என்பதிற் சந்தேகமில்லை. அதேநேரம், என்னைப் பொறுத்தவரைக்கும் ‘படைப்பாளியின் பணி என்பது, அவன் தான் நம்பும் உண்மைக்கு நெருக்கமாகவும் விசுவாசமாகவும் சாட்சியமாக இருத்தலாகும்’ என்பது உங்கள் கேள்வியின் இரண்டாவது பாதிக்கான என் பதிலாகும்.”

“கலை இலக்கியப் படைப்புகள் மீதான விமர்சனம் எவ்வளவு முக்கியமானது. தமிழ் இலக்கிய விமர்சன மரபின் தற்போதைய நிலை என்னவாக உள்ளது?”

“கலை இலக்கிய விமர்சனங்கள் படைப்பை வியாக்கியானித்தல், பகுப்பாய்வு செய்தல், மதிப்பீடு செய்தல் என்ற செயற்பாடுகளை உள்ளடக்கியது. அது படைப்பை அதன் வரலாற்றுச் சூழமைவில் வைத்து, அதனது படைப்பாக்க வலுவைப் பரீட்சிப்பது. இதில் முதலாவதாக அமையும் வியாக்கியானமானது, படைப்பை அதன் வாசகன் வாசிக்கும் முறை சம்பந்தப்பட்டது. அங்கே விமர்சகன் உட்பட்ட வாசகர்கள் அர்த்தத்தை மறுவுற்பத்தி செய்கிறார்கள். அதன் அடுத்தகட்டமாக, அது எப்படி அந்தந்தக் கலைப்படைப்புகளின் மொழி வழியாகப் பின்னப்பட்டுள்ளது என்பது மீதான பகுப்பாய்வு நிகழ்கிறது. இதற்கு அந்தந்த படைப்புகளது மொழி அமைப்பு பற்றிய அடிப்படையறிவு முக்கியமானது. உதாரணமாக, ஓவியத்தில் ரேகைகளும் வர்ணங்களும் இதர மூலங்களும் சேர்ந்து உருவாக்கும் மொழி பற்றிய அறிவே அதைப் பகுப்பாய்வு செய்தற்கான அடிப்படைகளைத் தரும். இது அனைத்து வகையான கலைப்படைப்புகளுக்கும் பொருந்தும். இந்தப் பகுப்பாய்வு இயல்பாக அக்கலைப்படைப்பின் படைப்பாக்க வலுவை – அது திறந்துவிடும் அனுபவங்களின் தொடர்பாடல் வலுவை உறுதிப்படுத்த வழி சமைக்கும்.

தமிழில் அபிப்பிராயங்களே பெருமளவுக்கு விமர்சனமாகக் கொள்ளப்பட்டுவிடுகிறது. அபிப்பிராயங்கள் அவற்றுக்கான தர்க்கபூர்வமான தளத்தில் வைத்துத் திறக்கப்படும்போதே அது அதனுடைய முழுமையை அடைகிறது. படைப்பும் – விமர்சனமும் ஒரு பண்பாட்டுத் தளத்தில் சமாந்தரமாக இயங்கும்போதே வலுவான இலக்கியப் பண்பாடு உருவாக முடியும். தமிழில் 1960-களோடு ஆரம்பமாகிற சிறுபத்திரிகை மரபு, வலுவான விமர்சன மரபொன்றை நோக்கி நகர முயன்றது. அந்த மரபு, வெங்கட் சாமிநாதன் என்ற விமர்சகரைத் தந்தது. விமர்சனமே அவரது முழு கரிசனமாக இருந்தது. அவரைத் தவிர்த்துப் பார்த்தால், விமர்சனத்தையே முழுச் செயற்பாடாக்கொண்டு தொடர்ந்து இடைவிடாதியங்கிய ஓராளுமையை நவீனத் தமிழ் கொண்டுவந்ததில்லை. படைத்தல் போலவே விமர்சனம் ஒரு மறுபடைப்பாக்கச் செயற்பாடும் உழைப்புமாகும். படைப்பாக்கம் போலவே விமர்சனமும் சமமான முக்கியத்துவம் உடையது. கர்னாடக சங்கீதப் பரப்பில் ஒரு சுப்புடு இருந்தாரே, அவரைப்போல அவ்வவ் கலை வடிவங்களுக்கான விமர்சகர்கள் உருவாக வேண்டும்.

தமிழின் பரிதாபம், எழுத்தாளர்களே விமர்சனமும் செய்யும் நிலபரமாகும். அவர்களே எழுதவும் வேண்டும், பின்னர் மற்றவர்களின் படைப்பு பற்றியும் விமர்சிக்க வேண்டும் என்பது அடிப்படையில் தமிழ் இலக்கியப் பண்பாட்டின் வறுமையைக் காட்டுகிறது. அவர்கள் இரண்டுக்குமான தொழில்முறையாளர்களாக இருக்க விரும்பினால் அது வேறுவிடயம். அவ்வகையில், படைப்பாளிகள் சிலரது எழுத்துகள் ஆழமான விமர்சனப் பார்வையைக்கொண்டிருப்பது அருந்தலான விலகலாகும்.

ஆனால், பெருமளவு விமர்சனங்கள் துரதிஷ்டவசமாகக் கருப்பொருள் பற்றியே அதிகம் பேசுகின்றன. அதன் மொழி – அது மொழியப்பட்ட முறைமைகள் என்பன தொடர்பில் விரிவாகப் பேசுவனவாக இருப்பதில்லை. அதனால், தர்க்கபூர்வமான வாதங்களுடன் நகர்ந்து படைப்பு மதிப்பீட்டை செய்யும் விமர்சன எழுத்துகள் பரந்தளவில் இன்றைய தமிழில் இல்லை எனக் கூறுமளவு ஒரு வறியநிலை காணப்படுகிறது. கோட்பாட்டுத் தளத்தில் விமர்சனத்தை இணைக்கத் தெரிந்தவர்கள்கூட இதைத் தவறவிட்டு விடுகின்றனர். படைப்புகளை வரலாற்றுப் பகைப்புலத்திலோ அல்லது பெண்ணிய நோக்கிலோ வாசிக்கையில் அவற்றுக்கான கோட்பாட்டை வெறுமனே பொருத்துவதோடு நின்றுவிடாது, அதனழகியல் அனுபவம் எய்தப்படும் முறை வரை சென்றடைய வேண்டும். இல்லாவிட்டால் பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் கூறுவதுபோல ‘அது ஒரு கலை இலக்கிய விமர்சனமாகப் பரிணாமம் பெறாது’. ஒரு சமூகவியல், மானுடவியல் வாசிப்புபோலாகிவிடும்.”

தடம்: விகடன்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.