இலங்கை பிரதான செய்திகள்

கொள்கையளவில் இணக்கம்….

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாடு ஒன்றை எடுக்க கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளமையும் ஆரோக்கியமான ஒன்றே ஆகும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வரவேற்றுள்ளது.

இதுதொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழ் மக்கள் நீண்ட காலமாக போராடிக் கொண்டிருப்பது தமக்கான நிரந்தரமான தீர்வொன்றினை பெற்றுக்கொளவ்தற்காகவே, இதுவரையில் பலவழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இன்று பல தரப்புக்களாக எம்முள் பிளவுபட்டு நின்கின்றோம். இதனால் நாம் எமது பேரம்பேசும் பலத்தை இழந்துவிடும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எமது பேரம்பேசும் பலத்தைப் உறுதிப்படுத்த நாம் ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டியது என்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.

இத்தகைய சூழலினை தமிழ்தரப்புக்கள் அனைத்தும் உணர்ந்து கொண்டு பிளவுபட்டு நின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடி கலந்துரையாடியமையும் ஆரோக்கியமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாடு ஒன்றை எடுக்க கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளமையும் ஆரோக்கியமான ஒன்றே ஆகும்.

அதுமாத்திரமின்றி தமிழ் கட்சிகள் சார்பில் தலா இரண்டு பேர் கொண்டதாக குழு ஒன்றினை இன்றைய கலந்துரையாடலில் நியமித்துள்ளோம். அதனடிப்படையில் தொடர்ந்து நாளைமறுதினம் திங்கட்கிழமை அன்று மீண்டும் கூடிகலந்துரையாடுவதாக தீர்மானிக்கபப்ட்டது.

தொடர்ந்து, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நாம் நிபந்தனைகளை முன்வைத்து பேரம் பேசுதல் என்றும் அத்தகைய நிபந்தனைகளினை அடுத்த கலந்துரையாடலில் முடிவு செய்வது என்றும் அதனடிப்படையில் பேரம்பேசலில் ஈடுபடுவது என்றும் அத்தகைய பேரம்பேசல் வெற்றியளிக்காத பட்சத்தில் அடுத்த கட்டத்தில் நாம் எத்தகைய முடிவொன்றை எடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்தும் கலந்துரையாடுவது என்றும் இன்றைய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கபப்ட்டது- என்றுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.