Home இலங்கை ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்

ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்

by admin

தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று நிலைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாகத் முட்டி மோதி முடிவுகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றன.

அந்த முடிவுகளும் அதன் பின்னரான விளைவுகளும் இலங்கையின் அடுத்த கட்ட அரசியல் நிலைமைகளில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப் போகின்றன. அதற்கான அறிகுறிகளை தேர்தலுக்கு முன்னரான நிலைமைகள் வெளிப்படுத்தி உள்ளன. இந்தத் தாக்கங்கள் நாட்டின் எதிர்கால நிலைமைகளைப் பிரகாசமாக்கும் என்று கூற முடியாதுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள மூன்று முக்கிய வேட்பாளர்களின் போக்கும் அவர்கள் சார்ந்த கட்சிகள் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடும் ஓர் அம்சமாகும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்களிடையே ஏற்பட்டுள்ள அரசியல் போட்டி சார்ந்த அணுகுமுறைகள் கொள்கை நிலைப்பாடுகள் என்பன இந்த முதலாவது அம்சத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

தேர்தலில் வெற்றிபெற்றால் தாங்கள் என்னென்னவற்றைச் செய்வோம் என்பது குறித்து பிரதான வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் நாட்டின் எதிர்கால நிலைமைகள் குறித்து கோடி காட்டுவனவாக அமைந்திருக்கின்றன.

நல்லிணக்கத்துடன் கூடிய நாட்டு மக்களின் ஐக்கியம், முன்னேற்றம் தொடர்பிலான உத்தேசத் திட்டங்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது சந்தேகத்திற்கும் கேள்விக்கும் உரியவையாகவே இருக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் என்பது நாட்டின் அதியுயர் அரசியல் தலைவரை நாட்டு மக்கள் அனைவரும் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதாகும். நாடு முழுவதும் ஒரேயொரு தேர்தல் தொகுதி என்ற அடிப்படையில் இந்த வாக்களிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வகையில் நாட்டு மக்கள் அனைவராலும் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் தலைவராகவே ஜனாதிபதி திகழ வேண்டும். செயற்படவும் வேண்டும்.

ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெரிவு செய்கின்ற ஒருவராகிய போதிலும், இதுகால வரையிலும் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள் பெரும்பான்மை இன மக்களின் நலன்களையும் சிங்கள பௌத்த தேசியத்துக்கு உரமூட்டுபவர்களாகவுமே செயற்பட்டுள்ளார்கள்.

தாங்கள் பெரும்பான்மை இன மக்களைப் போலவே, சிறுபான்மை இனமக்களினதும் ஜனாதிபதி என்பதை அவர்கள் உணர்ந்து செயற்பட்டதாகத் தெரியவில்லை. பெரும்பான்மை இன மக்களுக்கு விசுவாசமாகவும், அவர்களின் நலன்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டிருந்தது போல சிறுபான்மை இன மக்களின் நலன்கள் அவர்களது முன்னேற்றத்திலும் சமமான அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் செயற்படவில்லை.

நாட்டு ஜனாதிபதிகளின் இந்தப் போக்கு ஓர் அரசியல் மரபுவழிப் போக்காகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பது முயற்கொம்பாகி உள்ளது. இனங்களுக்கிடையில் அரசியல் ரீதியான நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் உருவாக்குகின்ற கைங்கரியம் தோல்வி கண்டுள்ளது.

அனைத்து மக்களினதும் தலைவராகக் கருதப்படுகின்ற ஜனாதிபதி தேசிய அரசியல் வெளியில் ஓர் உன்னத நிலையில் தேசியத் தலைமகனாக உருவாக முடியாமல் போயுள்ளமைக்கும் இந்த மரபுவழியிலான அரசியல் போக்கே காரணமாகியுள்ளது.

எனவே, இத்தகைய முன்னுதாரணத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறப்போகின்றவரும் புதிய வழியில் தனது அரசியல் பயணத்தை மேற்கொள்வாரா என்பதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் வெட்டிக்குறைக்கப்பட்டுள்ள முதலாவது ஜனாதிபதிக்கான இந்தத் தேர்தலில் வெற்றி பெறுகின்றவர் தான் விரும்பியவற்றைச் செயற்படுத்த முடியாத ஒருவராகவே இருக்கப் போகின்றார். அத்தகைய அரசியல் தலைவர் ஒருவர் நாட்டின் ஐக்கியத்தையும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், நல்லுறவையும் கட்டியெழுப்ப முடியுமா என்பதும் சந்தேகத்திற்கு உரியதே.

ஆனால் இந்தப் பதவிக்கே வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் 35 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடத் துணிந்துள்ளார்கள். இந்த அரசியல் அணுகுமுறை எத்தகையது என்பது புரியாத புதிராக உள்ளது.

பிரதான வேட்பாளர்கள் எவரும் இந்த நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்குக் குந்தகமாக உள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இல்லை.

அந்நியரிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்றது முதல் சம அரசியல் உரிமைக்கான தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் போராடி வருகின்ற சிறுபான்மை தேசிய இன மக்களின் அரசியல் மன நிலையைச் சரிவர புரிந்து கொள்பவர்களாகவும் இல்லை.
வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் தமது கொள்கை நிலைப்பாட்டில் இத்தகைய போக்கையே கொண்டிருக்கின்றார்கள். இது சோகமானது. கவலைக்குரியது.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கழிந்துவிட்டது. இருப்பினும் அந்த யுத்தம் மூள்வதற்கு மூலகாரணமாக உள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டிய அதிமுக்கிய அரசியல் தேவையை அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை என்பதிலும் பார்க்க, தேசிய மட்டத்திலான அந்த அரசியல் தேவையை உணர்ந்தம் உணராதவர்களாகக் காட்டிக்கொண்டு சுய கட்சி அரசியல் இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவதிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றார்கள்.

சிறுபான்மை இன மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதிலும் பார்க்க, அவர்களை பெரும்பான்மை இன மக்களுக்கு எதிரான அரசியல் போக்கிற்கு எதிரானவர்கள் என அடையாளப்படுத்துவதிலேயே அவர்கள் கவனமாக இருக்கின்றார்கள். இந்த இனவாதப் போக்கையே தமது தேர்தல் கால முதலீடாகச் செயற்படுத்தி பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளைக் கவர்வதிலேயே அவர்களுடைய கவனம் குவிந்துள்ளது.

அதேநேரம் தேசிய மட்டத்திலான இந்தத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெளிப்பகட்டான அரசியல் தேவையையும் அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக கபடத்தனமான அரசியல் போக்கில் பச்சோந்திர ரக வாக்குறுதிகளை அள்ளிவீசி, சிறுபான்மை இன மக்களின் மனங்களில் அரசியல் ரீதியாக இடம்பிடிப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் தயக்கமின்றி ஈடுபட்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற விவகாரத்திலும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்கின்ற விடயத்திலும் பேரின அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதில் கல்லில் நார் உரிக்கின்ற நிலைமைக்கே தமிழ் அரசியல் தரப்பு தள்ளப்பட்டிருக்கின்றது.

இந்தக் கடுமையான பேரின அரசியல் நிலைப்பாட்டை எதிர்கொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஓர் அரசியல் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைந்திருக்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாகத் தொடர்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் வேர்பாய்த்துள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் தீர்வு அரசியல் அபிலாசை என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் ஓர் அணியில் செயற்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன.

இந்த அரசியல் யதார்த்தத்தைத் தமிழ் மக்கள் உணர்ந்துள்ளபோதிலும், உளப்பூர்வமாக தமிழ் அரசியல் கட்சிகள் உணரவில்லை என்றே கூற வேண்டும். தமிழர் தரப்பின் அரசியல் ரீதியான ஒற்றுமையும் ஓரணியில் திரண்ட செயற்பாடுமே பேரினவாதப் போக்கையும் சிங்கள பௌத்த தேசிய அணுமுறை அரசியலையும் எதிர்கொள்வதற்கு அவசியம் என்ற உண்மையை தொடர்ச்சியான பல சம்பவங்கள் உணர்த்தியிருக்கின்றன.

ஆனாலும் அந்த உண்மையை உணர்ந்து அரசியல் யதார்த்த நிலைமைக்கு ஏற்றவாறு செயற்படுவதற்குத் தமிழ் அரசியல் கட்சிகள் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆக்கபூர்வமான முறையில் செயற்படவில்லை. அவ்வாறு செயற்படுவதற்கு அனைத்துத் தரப்பினரும் முழு அளவில் முயற்சிக்கவுமில்லை.

தமிழ்த்தேசியத்தை அடிப்படை கொள்கையாக வரித்துக் கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் இணைந்திருந்த கட்சிகளும் கூட தமக்கிடையிலான ஒன்றிணைந்த செயற்பாட்டு நிலையைத் தொடர்ந்து பேண முடியவில்லை. அந்தக் கூட்டில் இருந்து கட்சிகள் ஒவ்வொன்றாகப் பிரிந்து சென்று உதிரிகளாகச் செயற்படுகின்ற வழிமுறைகளே தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தற்போது மூன்று கட்சிகளாகச் சுருங்கியுள்ளது.

இந்த சுருக்கத்திற்குள்ளேயும் ஒன்றிணைந்த செயற்பாட்டை முன்னெடுப்பதில் அரசியல் ரீதியான பிடுங்குபாடுகளிலேயே காலத்தைக் கழித்து வந்துள்ளன. கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகளும்கூட தங்களுக்குள் ஒன்றுபட்டு ஓர் அணியை உருவாக்கவோ அல்லது ஒன்றிணைந்து செயற்படவோ முடியாத நிலையிலேயே திகைத்து நிற்கின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அரசியல் அணியை உருவாக்க வேண்டும் என்ற வேணவாவைக் கொண்டிருக்கின்ற கட்சிகளும்கூட தமக்குள் ஒன்றிணைந்து ஓர் அரசியல் தலைமையை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. இதற்குத் துணைபுரிவதற்காகத் தோற்றம் பெற்ற தமிழ் மக்கள் பேரவையும்கூட இந்தக் கைங்கரியத்தில் தோல்வியையே தழுவிக்கொண்டது.

ஆயினும் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த்தேசியத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட சுயாதீனக் குழுவும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க முடியாமல் தோல்வியில் சுருண்டது. தமிழ் அரசியல் கட்சிகளை ஒரு மேசையில் கூட்டி, ஓர் இணக்கப்பாட்டை எட்டுவதற்கான ஒன்றிணைக்கும் பணியை முன்னெடுப்பதற்காகவே அந்தக் குழு ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி தேர்தலை எதிர்கொள்வதைப் பற்றி அது கவனம் செலுத்தியதன் மூலம் திசைமாறிச் சென்றதாகக் குறை கேட்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிப்போனது.

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் அந்த கைங்கரியத்தின் தொடர்ச்சியாக வடக்கு கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த முயற்சி வெற்றி அளித்துள்ளது. தமிழரசுக் கட்சி, புளொட், ஈபிஆர்எல்எவ், டெலோ, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஆறு கட்சிகளை ஒன்றிணைத்து ஓர் அணியில் செயற்படச் செய்வதற்காக மாணவர் ஒன்றியம் மேற்கொண்ட முயற்சியில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பின்னடித்துவிட்டது.

இதனால் ஏனைய ஐந்து கட்சிகளும் ஓர் அணியாக ஒன்றிணைந்து சில முக்கியமான நிபந்தனைகளுக்கும் கொள்கைகள் கோரிக்கைகளுக்கும் கட்டுப்பட்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன.

தமிழ் அரசியல் கட்சிகளின் இந்த ஒன்றிணைவு தமிழ் அரசியல் வெளியில் ஒரு வெற்றிகரமான நிகழ்வாக சிலாகிக்கப்படுகின்றது. இருப்பினும் இதனை ஒரு வெற்றிகரச் செயற்பாடு என்பதிலும் பார்க்க ஒரு முன்னேற்ற நகர்வாகக் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும். உதிரிகளாகச் சிதறிக்கிடக்கின்ற தமிழ் அரசியல் தரப்பை ஒன்றிணைப்பது என்றால், அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓர் அணியில் ஒன்றிணைப்பதையே முழுமை பெற்ற செயற்பாடாகக் கருத முடியும். ஒரு வெற்றிகரமான செயற்பாடாகக் கொள்ள முடியும்.

இங்கு தமிழ்த்தேசியத்தை அடிப்படைக் கொள்கை நிலையாகக் கொண்டு ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்திருந்து பிரிந்து சென்ற கட்சிகளையே ஒன்றிணைக்கின்ற பணி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஒத்த கொள்கை உடையவர்கள் தாராளவாத நிலையில் ஏன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என்பது ஒரு முக்கியமான கேள்வி.

ஒத்துiழுத்துச் செயற்படுவதற்கு ஒத்த தன்மையிலான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளிடையே பிரிவினைக்கான காரணம் என்ன என்பதும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விடயம். அரசியல் கட்சிகளின் நன்மையையும், அவற்றின் இருப்பையும் கருத்திற் கொண்ட இறுக்கமான அரசியல் போக்கே ஒத்த கொள்கைகளைக் கொண்டிருக்கின்ற போதிலும் மக்களுக்காக ஒன்றிணைய முடியாமல் போயுள்ளது. மக்களுக்காக ஒன்றிணைந்து செயற்பட முடியாமல் போனது.

காலப்போக்கின் அரசியல் நிலைமைகளையும் பேரினவாத அரசியல் தரப்பின் கடும்போக்கையும் கரத்திற்கொண்டு விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்குத் தயார் ஆகாத வரையில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவும் தாராளவாத ஒருமித்த செயற்பாடும் வெற்றியளிக்கமாட்டாது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழ் அரசியல் தரப்பின் எதிர்த்தரப்பாகிய பேரின அரசியல் சக்திகளிடம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதென்பது கல்லில் நாருரிக்கின்ற காரியத்துக்கு ஒப்பான கைங்கரியமாகும். கல்லில் நாருரிக்கச் செல்பவர்கள் தங்களுக்குள் இறுக்கமான பிடிப்புடையவயர்களாக இருப்பது அவசியம். இறுக்கமான கொள்கைப் பிடிப்புடன் கூடிய வலிமை இல்லையேல் தமது அரசியல் இலக்கை அவர்கள் நெருங்கக்கூட முடியாமல் போய்விடும்.

அது மட்டுமல்ல. கடும்போக்குடன் தில்லுமுல்லு அரசியல் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச் செய்வதற்காகக் காலம் கடத்தி காரியங்களைத் திசை திருப்புகின்ற உத்திகளை வெற்றிகரமாகக் கையாள்பவர்களின் முன்னால் கைகட்டி வாய்பொத்தி நிற்கின்ற நிலைமைக்கே ஆளாக நேரிடும்.

அரசியல் தீர்வை எட்டவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வழிசமைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்திடம்கூட தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவித்து நிற்கின்ற தமிழ்த்தரப்பு தங்களுக்குள் ஒன்றுபடாத நிலையில் எவ்வாறு நிலைமைகளை எதிர்கொண்டு மேலெழ முடியும் என்று தெரியவில்லை.

ஒத்த கொள்கையுடைய தமிழ் அரசியல்கட்சிகளின் நிலைமை இவ்வாறிருக்க, காலத்துக்கு ஏற்ற அரசியல் தலைமை இல்லையே என்ற ஏக்கத்தில் ஆழ்ந்துள்ள தமிழ் மக்கள் எந்த வழியைக் கையாள்வது, யாருடைய தலைமையை ஏற்றுச் செயற்படுவது என்று தெரியாமல் திகைத்து நிற்பது இந்த ஜனாதிபதித் தேர்தலின் மூன்றாவது நிலைப்பாடாகும்.

ஒத்த கொள்கையுடையவர்களாக அறிக்கைகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் அரசியல் வீரம் காட்டுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய பிரச்சினைகள் குறித்தும் தங்களுடைய நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்துகின்றார்களில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலைகொண்டிருக்கின்றார்கள். பிரச்சினைகளையும் நெருக்கடியான அரசியல் நிலைமைகளையும் தமிழ் அரசியல் தலைவர்கள் சாதுரியமாகக் கையாள முடியாதவர்களாக இருக்கின்றார்களே என்று தமிழ் மக்கள் ஏக்கம் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த மக்களின் மனங்களையும் அரசியல் ரீதியான அவர்களின் தாபங்களையும் சரியாகப் புரிந்து கொண்டு தமிழ் அரசியல் கட்சிகள் காரியங்களை முன்னெடுப்பதற்கு முன்வரவேண்டியது அவசியம். இந்த வகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இந்த நகர்வு தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கே இந்த ஜனாதிபதி தேர்தலில் பெரிதும் கைகொடுக்கும்.

என்றாலும் இந்த ஒன்றிணைவு ஜனாதிபதித் தேர்தலுடன் கைவிட்டுப் போய்விடக் கூடாது. அடுத்து வரவுள்ள முக்கியமான பொதுத் தேர்தலையும் வலிமையாகவும் இராஜதந்திரத் தன்மையுடனும் எதிர்கொள்வதற்குரிய வலுவான சக்தியாகப் பரிணமிக்க வேண்டும். அது ஐந்து கட்சிகள் கொண்ட கூட்டிணைவு என்ற எல்லையை விரிவுபடுத்திய ஓர் இணைவாக அமைய வேண்டியதும் அவசியம். #ஜனாதிபதிதேர்தல் #ஒன்றிணைவு #தமிழ்த்தரப்பு

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More