இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

வழிஞ்சோடி வாக்குகள் ? நிலாந்தன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான மயூதரன் தனது முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்…. ‘ப்ரைட் இன்’னுக்கு செலவழிச்ச காசுக்கும், டீ,சோட்டிஸ், அறிக்கை பிரின்டவுட், போட்டோக்கொப்பி என செலவழிச்ச காசுக்கு எவனாவது ஒருத்தனுக்கு வாழ்வாதார உதவியை வழங்கி இருக்கலாம். அல்லது என்னை போன்ற ஏழை எளியவர்களுக்கு சாப்பாடு போட்டு இருக்கலாம். மனசார வாழ்த்தி இருப்போம் ‘நல்ல இருங்கடா தம்பிமாரே’ என. ஐந்து கட்சி முடிவு என சொல்லிட்டு இப்ப தனித்தனியாக முடிவை அவங்க அறிவிச்சுட்டு இருக்கிறாங்க……..’

ஐந்து கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டை உருவாக்கி விட்டு பின்னர் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் அறிக்கை விடும் ஒரு நிலைமை ஏன் உருவாகியது?

முதலாவது காரணம் இது போன்ற அரசியற் செய் முறைகளுக்கு அனுசரணை வழங்கத் தேவையான பலமோ முதிச்சியோ துறைசார் நுட்பமோ பல்கலைக் கழக மாணவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் வசதிகளை வழங்கி அரசியல் கட்சிகளை ஒரு மேசைக்கு அழைக்கலாம். அக்கட்சிகள் ஒரு பொது ஆவணத்தையும் உருவாக்கலாம். ஆனால் அதற்கு அடுத்ததாக அப்பொது ஆவணத்தை வினைத்திறண் மிக்க விதத்தில் முன்நகர்த்துவதுவதற்கு பொருத்தமான விதங்களில் அனுசரணை செய்ய மாணவர்களால் முடியவில்லை. அப்பொது ஆவணத்தை பிரதான வேட்பாளர்கள் ஏற்றுக் கொள்ளாதவிடத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு அனுசரணை செய்யவும் மாணவர்களால் முடியவில்லை. அதோடு அப்பொது ஆவணத்தில் கையெழுத்திட்ட கட்சிகள் அதை மீறிச் செல்லும் போது அதற்கெதிராக எதையும் செய்ய மாணவர்களால் முடியவில்லை

இரண்டாவது காரணம் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய பொது ஆவணத்தை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிப்பதற்கு கூட்டமைப்பை சேர்ந்த சுமந்திரனிடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாக மாணவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவர் அந்த ஆவணத்தை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளித்திருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று பின்னர் தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுமந்திரன் அவரிடம் சிங்களத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சிங்களத்தில் வழங்கிய பதிலில் அவ்வாறு கூறியிருக்கிறார்.

இவ்வாறு சுமந்திரன் அந்த ஆவணத்தை அதன் அடுத்த கட்டத்துக்கு முன்னகர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு விக்னேஸ்வரன் கொழும்புக்குச் சென்று குறிப்பிட்ட சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஆவணம் வேட்பாளர்களிடம் கையளிக்கப்படாத ஒரு பின்னணியில் அந்த ஆவணம் தனது கைக்கு கிடைக்கவில்லை இன்று அனுரகுமார ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் உண்டு. தமிழ்த்தரப்பு அந்த ஆவணத்தை நேரில் கொண்டு வந்து கையளிக்க வேண்டும் என்று வேட்பாளர்கள் எதிர்பார்த்தார்களா? இது விடயத்தில் தாமாக இறங்கிவந்து தமிழ் தரப்பிடம் அந்த ஆவணத்தை பெற்று அது தொடர்பில் உரையாடுவதற்கு அதற்கு தயாராக இருக்கவில்லை?

இவ்வாறான ஒரு பின்னணியில் விக்னேஸ்வரன் தாமாக முன்வந்து அந்த ஆவணத்தின் மின்னஞ்சல் பிரதிகளை எல்லா வேட்பாளர்களுக்கும் அனுப்பியதாக ஒரு தகவல் உண்டு. அதுபோன்ற பேரம் பேசுவதற்குரிய ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவது ஒரு பொருத்தமான அரசியல் நடைமுறை அல்ல. அதை நேரில் சென்று கையளிப்பதுதான் பொருத்தமான நடைமுறையாகும். அதையும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் சேர்ந்து செய்திருந்திருக்க வேண்டும். ஆனால் அது பின்பற்றப்படவில்லை. அந்த ஆவணத்தை முன் நகர்த்த தேவையான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்;கான ஏற்பாடுகளைக் குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் சிந்தித்திருக்கவில்லையா?

எனவே அந்த ஆவணம் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படாத ஒரு பின்னணியில் விக்னேஸ்வரன் தனது கட்சியின் நிலைப்பாட்டை அறிக்கையிட்டார். பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கையிட்டார். முடிவில் தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்தது. ஆனால் விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பொது ஆவணத்தை ஏற்றுக்கொண்டே தமது அறிக்கைகளை வெளியிட்டார்கள். அதாவது பொது ஆவணத்துக்குரிய கூட்டு உடன்படிக்கையை அவர்கள் முறிக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பு கூட்டு உடன்படிக்கையை முறித்து விட்டது. அது பொது ஆவணத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத ஒருவருக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறது. அதாவது தமிழரசுக் கட்சியே முதலில் ஐந்து கட்சிகளின் பொது உடன்படிக்கையை மீறியது.

கூட்டமைப்பு ஐந்து கட்சிகளின் கூட்டை ஒரு பகிடியாக்கி விட்டது. அக்கூட்டினை மட்டுமல்ல யாழ் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர்களையும் அது சிறுவர்கள் ஆக்கி விட்டது. அதுமட்டுமல்ல அந்த ஐந்து கட்சிகளின் கூட்டு உருவாக்கிய பொது ஆவணத்துக்காக உழைத்த அனைவரையும் அது பேயர்கள் ஆக்கிவிட்டது. அதுமட்டுமல்ல ஐந்து கட்சிகளின் கூட்டை நோக்கியும் பதின்மூன்று அம்சங்கள் அடங்கிய பொது ஆவணத்தை நோக்கியும் நம்பிக்கைகளை கட்டியெழுப்பிய சாதாரண தமிழ் ஜனங்களையும் விடுபேயர்கள் ஆக்கியிருக்கிறது.
அப்படி என்றால் பல்கலைக்கழகத்திலும் பிரைட்டன் விடுதியிலும் நடந்த சந்திப்புகளில் எதற்காக கூட்டமைப்பு மணித்தியாலக் கணக்கில் மினெக்கெட்டது?

அதற்கு தேவை இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த கட்சியின் வாக்கு வங்கி தேயத் தொடங்கிவிட்டது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அந்த வாக்கு வங்கி 35 வீதத்தால் வீழ்ச்சி கண்டுவிட்டது. அந்தக் கட்சியின் தலைவர் ஒவ்வொரு தீபாவளிக்கும் அடுத்த தீபாவளியில் தீர்வு கிடைக்கும் என்று கூறிவந்தார். ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து அவர் மேற்கொண்ட யாப்புருவாக்கும் முயற்சிகளில் அளவுக்கு மிஞ்சி நம்பிக்கை வைத்து அவர் அவ்வாறு கூறி வந்தார். ஆனால் கடந்த ஒக்டோபர் மாத ஆட்சி குழப்பத்தோடு மைத்திரிபால சிறிசேன சம்பந்தரின் கனவை கலைத்துவிட்டார். இந்நிலையில் யாப்பு மாற்றமுமில்லை இனப்பிரச்சினைக்கு தீர்வும் இல்லை என்ற ஒரு நிலை தோன்றியது.

கம்பெரலிய போன்ற அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் வாக்கு வங்கியை பாதுகாக்கலாம் என்று கூட்டமைப்பு முயற்சித்தது. அதற்காக ரணில் விக்கிரமசிங்கவும் நிதி உதவியை வடக்கு கிழக்கை நோக்கி பாய்ச்சினார். ஆனால் கம்பெரலிய மூலம் திருத்தப்பட்ட எல்லா வீதிகளை விடவும் நாவற்குழியில் கட்டப்பட்டு வரும் புத்த விகாரை தமிழ் மக்களுக்கு முழிப்பாகத் தெரிந்தது. கன்னியா வெந்நீரூற்றில் சிதைக்கப்பட்ட கோவிலும் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலும் தமிழ் மக்களுக்கு துருத்திக்கொண்டு தெரிந்தன. அதாவது அபிவிருத்தி மைய அரசியலை விடவும் சிங்கள-பௌத்தமயமாக்கலே தமிழ் மக்களுக்கு துருத்திக்கொண்டு தெரிந்தது. இதனால் கம்பெரலிய அபிவிருத்தி திட்டங்கள் பொலிவிழந்தன.

அதேசமயம் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கஜேந்திரகுமாரின் வாக்கு வங்கி வளர்ந்திருக்கிறது. தவிர இனிவரும் தேர்தல்களில் விக்னேஸ்வரனும் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை பங்கிடப் போகிறார் இவற்றை நினைத்தும் கூட்டமைப்பு பயப்பட்டது.

இவை தவிர மற்றொரு காரணமும் உண்டு. ஜனாதிபதி வேட்பாளராக ரனில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டிருந்தால் கூட்டமைப்பு சில சமயம் வேறுவிதமாக முடிவெடுத்து இருந்திருக்கும். ஆனால் சஜித் பிரேமதாச மேலெழுந்து விட்டார். ரணிலுக்கும் சம்பந்தர் சுமந்திரன் அணிக்கும் இடையிலான மேல்மட்ட உயர் குழாத்து உறவோடு ஒப்பிடுகையில் சஜித் பிரேமதாச அந்த அளவுக்கு நெருக்கம் இருக்கவில்லை. தவிர சஜித் பிரேமதாச கூட்டமைப்பை அதிகம் நெருங்கிவர முதலில் முயற்சிக்கவில்லை. அவர் தன்னை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் புதிய காவலனாக எப்படிப் கட்டி எழுப்பலாம் என்று சிந்தித்தார். அதனால் கூட்டமைப்பை நெருங்கிவர முயற்சிக்கவில்லை. தமிழ் வாக்குகள் எப்பொழுதும் ராஜபக்ஷக்களுக்கு எதிரானவை என்பதனால் அவை அவற்றின் தர்க்கபூர்வ விளைவாக தனக்கே கிடைக்கும் என்றும் அவர் கணக்கு போட்டார். இதனால் ரணில் அளவுக்கு அவர் சம்பந்தர் சுமந்திரன் நெருங்கி வரவில்லை. இதனாலும் கூட்டமைப்புக்கு சஜித்தை நோக்கி செல்வதில் சில மனத் தடைகள் இருந்தன. இப்படி ஒரு பின்னணியில் சஜித்துக்கு தமது பலத்தை உயர்வாக காட்டவும் அவர்களுக்கு ஐந்து கட்சிகளின் கூட்டு தேவைப்பட்டது.

அப்படி ஒரு கூட்டை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் நமது முயற்சியைத் தொடங்கினார்களா என்று கேள்வி இங்கு முக்கியமானது. ஏனெனில் சுயாதீன குழுவின் பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னிறுத்தும் முயற்சிகள் ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாத ஒரு சூழலில்தான் பல்கலைக்கழக மாணவர்கள் அரங்கில் இறங்கினார்கள். ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை கண்டுபிடிக்கும் முயற்சியில் சுயாதீன குழுவானது போதிய வெற்றியைப் பெறவில்லை. எனினும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேரத்தை முன்னிறுத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை அக்குழு பரவலாக்கியது. தமிழ் அரசியலின் மீதும் தமிழக்; கட்சிகளின் மீதும் சிவில் சமூகங்கள் தார்மீகத் தலையீட்டைச் செய்ய வேண்டும் என்ற அக்கறையை அது காட்டியது

ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் அப்படி ஒரு பொது வேட்பாளரை நோக்கி நமது முயற்சிகளை தொடங்கவில்லை. எல்லா கட்சிகளையும் வரவழைத்து ஒரு பொதுக் கருத்தை ஏற்படுத்துவதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. எப்படிப்பட்ட ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் மாணவர்களிடம் தெளிவான வழிவரைபடம் இருந்திருக்கவில்லை. ஆனால் ஆறு கட்சிகளை ஒரு ஒரு மேசைக்கு அழைத்து வந்த பொழுது அது அதன் இயல்பான வளர்ச்சிப் போக்கில் ஒரு பொதுக் கருத்தை அடைவதில் முடிந்தது. அது கூட்டமைப்பை மீள ஒருங்கிணைப்பதில் முடிந்தது. அதன் விளைவாக 13 அம்சங்கள் அடங்கிய ஒரு பொது ஆவணம் உருவாக்கப்பட்டது.

முடிவில் அந்த ஆவணத்தை தமிழரசுக் கட்சி அனாதையாக்கி விட்டது. அக்கட்சி சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கிறது. அதாவது 13 அம்சங்கள் அடங்கிய பொது ஆவணத்தை அது மதிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தமிழ்ப் பேரத்தை பலப்படுத்தவதே பொது ஆவணத்தின் பிரதான நோக்கம். ஆனால் கூட்டமைப்பு எந்தப் பேரமும் இன்றி அதாவது நிபந்தனைகள் இன்றி சஜித்தை ஆதரிப்பதன் மூலம் மீண்டும் ஓரு தடவை தமிழ் மக்களின் ஆணையை யு.என்.பிக்கு வாங்கிக் கொடுக்கப் போகிறது. கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ்ப்; பேர வாக்குகள் வழிஞ்சோடி வாக்குகளாக மாற்றப்பட்டு விட்டன. அதாவது பல்கலைக்கழக மாணவர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஐந்து கட்சிகளின் கூட்டு நீடித்திருப்பதற்கான வாய்ப்புக்கள் கருகத் தொடங்கி விட்டன.

இதற்கான முழுப்பழியையும் கூட்டமைப்புத்தான் ஏற்க வேண்டியிருக்கும். ஒரு பொய்யான கூட்டை தந்திரமாக உருவாக்கி ஒரு பொது ஆவணத்திலும் கைnழுத்திட்டுவிட்டு முடிவில் தமிழரசுக் கட்சியானது தனது பாரம்பரியக் காதலனோடு கூட்டுச் சேர்ந்து விட்டது. பேரம் பேசக் கிடைத்த மற்றொரு அருமையான வாய்ப்பும் தட்டிக்கழிக்கப்பட்டு விட்டது. பலஸ்தீனர்களைப் பற்றி ஒரு யூத ராஜதந்திரி; கூறியது போல கூட்டமைப்பும் ‘சந்தர்பங்களைத் தவற விடுவது என்ற செயலை தவற விடாமல் செய்து வருகிறதா?’ இதில் மோசமாக பேய்க்காட்டப்பட்டிருப்பது அல்லது அவமதிக்கப்பட்டிருப்பது பல்கலைக்கழக மாணவர்கள்தான்.  #வழிஞ்சோடி #வாக்குகள் #பல்கலை #சுமந்திரன் #விக்னேஸ்வரன்  #அனுரகுமார

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.