இலங்கை பிரதான செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள்  ஆரம்பம்…

யாழ்ப்பாணத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்  ஆரம்பம்…

இலங்கையின் 8 ஆவது  ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு  எண்ணும் நிலையமான யாழ்  மத்திய கல்லூரியிலிருந்து  இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 531 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 75 ஆயிரத்து 176  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில்  பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.–

கிளிநொச்சியில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிற்கு வாக்களிப்பு பெட்டிகள் உள்ளிட்டவை பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில்  தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிற்கு வாக்களிப்பு பெட்டிகள் உள்ளிட்டவை பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன. இன்று காலை 7.45 மணிமுதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து தேர்தல் வாக்கு சீட்டுக்கள், வாக்கு பெட்டிகள் அவ்வந்த வாக்களிப்பு நிலைய அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன. 100 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை வாக்களிக்க முடியும் எனவும், நேரகாலத்தோடு வாக்களிக்க மக்கள் வாக்களிப்பு நிலையங்களிற்கு செல்லுமாறும் மாவட்ட தேர்வத்தாட்சி அலுவலரும், அரசாங்க அதிபரும் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பம்

-மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் இன்று சௌ;ளிக்கிழமை (15) காலை 8 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலக பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதி போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளதோடு,மாற்றுப்பாதையூடாக போக்குவரத்து இடம் பெற்று வருகின்றது.

-நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அரச,மற்றும் தனியார் பேரூந்துகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லுகின்றனர்.

-மன்னார் மாவட்டத்தில் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக 1365 அரச அலுவலகர்கள் கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு மன்னார் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 403 பேர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப வளாகத்தில் இருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் காலை கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் சம்மாந்துறை கல்முனை திகாமடுல்ல ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும் வாக்குப் பெட்டிகள் உரிய வாக்கெடுப்பு நிலையங்களை சென்றடைந்தது முதல் பொலிஸ் நடமாடும் சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா –  பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

(க.கிஷாந்தன்)

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 488 வாக்களிப்பு நிலையங்களில் 569,028 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 48 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 33 வாக்கு எண்ணும் நிலையங்கள் நுவரெலியா காமினி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, மிகுதி 15 வாக்கு எண்ணும் நிலையங்கள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் 6800 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1590 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.