இலங்கை பிரதான செய்திகள்

பதவிகள் பொறுப்புக்களேயன்றி சிறப்புரிமைகள் அல்ல – ஜனாதிபதி

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே தனக்கு மிகப் பெரும் மக்கள் ஆணையை பெற்றுத்தந்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி  , அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் பதவிகள் பொறுப்புக்களேயன்றி சிறப்புரிமைகள் அல்ல என்பதை எப்போதும் கவனத்திற் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இன்று இடம்பெற்ற புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில் உரையாற்றும்போதே மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  இதனைத் தெரிவித்தார்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் 35 பேரும் பிரதி அமைச்சர்கள் மூவரும் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ   முன்னிலையில் பதவிப் பிரமாணம செய்துகொண்டனர்.

புதிய அமைச்சர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி  , மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அவர்களது செயற்திறனான பங்களிப்பு கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

சில அரச நிறுவனங்களில் காணப்படும் கவலைக்கிடமான நிலைமைகள் குறித்து இங்கு நினைவுகூர்ந்த ஜனாதிபதி  , அரச துறையை வினைத்திறனாக மாற்றி சிறந்த மக்கள் சேவையினூடாக பதியதோர் யுகத்திற்கு நாட்டை கொண்டு செல்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.

இன்று வழங்கப்பட்ட அனைத்து இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளுக்கும் விரிவான பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி  , தனது பல வருடகால அனுபவத்தின் வாயிலாக கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமைய கடந்த தேர்தலின் போது இனங்காணப்பட்ட மக்கள் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி அப்பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை ஒழுங்கமைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

புகையிரத சேவையை முன்னேற்றி வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளமையினால் அதற்காக புதிய இராஜாங்க அமைச்சொன்றினை அமைத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி  , சுதேச வைத்தியத் துறையை முன்னேற்றுவதுடன் அதனை சுற்றுலா துறை மேம்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய விடயமாக குறிப்பிடப்பட்டிருந்த வறுமையை ஒழிக்கும் நோக்கத்தை வெற்றிகொள்வதற்கு சமூகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயமான மகளிர் நலன் பேணல், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம், சுற்றுலா அபிவிருத்தி உள்ளிட்ட துறைகள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு புதிய அமைச்சுப் பதவிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி  குறிப்பிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  #பதவிகள்  #சிறப்புரிமைகள் #ஜனாதிபதி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.