இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கு மோடி தலைமையில் இராணுவ அணிவகுப்பு – செங்கம்பள மரியாதை


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று நேற்றைய தினம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து இந்திய மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்பு அளித்திருந்தார். ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றுக்கொண்டதன் பின் அவரது முதலாவது உத்தியோபூர்வ வெளிநாட்டு பயணமாக இந்தியா பயணம் அமைந்துள்ளது.

இந்நிலையில் அவர் இன்று காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பரஸ்பர நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதன் பின்னர் ராஸ்திரபதி பவனில் ஜனாதிபதி கோத்தபாயவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இராணுவ அணிவகுப்பு மற்றும் செங்கம்பள மரியாதை வழங்கப்பட்டது. இதன்போது இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை வரவேற்றார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கோத்தாபய ராஜபக்சவை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்  , இந்த சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையிலான உறவினை பலப்படுத்தும் முக்கியமானதொரு சந்திப்பாகும் எனத் தெரிவித்தார்.

புதிய இலக்குடன் ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களைப் பாராட்டிய இந்திய ஜனாதிபதி  , இதற்கு தமது நாடு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இந்திய பொது போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி வீ.கே. சிங் மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் பங்குபற்றினர்.

அதனைத் தொடர்ந்து ராஜ் காட் (Raj Ghat) சென்ற ஜனாதிபதி   மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். விசேட அதிதிகளுக்கான குறிப்பேட்டிலும் ஜனாதிபதி   இதன்போது கையெழுத்திட்டார். #ஜனாதிபதி  #மோடி #இராணுவஅணிவகுப்பு  #செங்கம்பள மரியாதை #கோத்தாபய

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link