Home இலங்கை முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை – தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்கிறார் கருணா..

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை – தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்கிறார் கருணா..

by admin

முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கமானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால திட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை(1) மாலை 5 மணி முதல் 7 மணிவரை மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர். முதல் தடவையாக 35 பேர் கொண்ட அமைச்சரவையில் எந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இல்லாத அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக 20 வருடங்கள் ஆட்சி செய்யும் அத்துடன் எதிர்வரும் காலம் தமிழ் மக்களுக்கு பொற்காலமாகும்.

தமிழ் மக்களது உரிமைகளுக்காக போராடிய காலங்களில் சிவராம் எனும் பத்திரிகையாளர் என்னை சந்தித்து உங்களது போராட்டம் சர்வதேச மட்டத்தில் தெரியப்பட வேண்டும் என்றும் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்றும் இதற்காக தமிழ் மக்கள் சார்பில் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கூறினார். இவரது இந்த யோசனை குறித்து நான் பல தடவைகள் தலைவர் பிரபாகரனிடம் எடுத்துக்கூறியும் அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனது வேண்டுகோளிற்கு இணங்கவே இறுதியில் தலைவர் ஒத்துழைத்தார். அவ்வாறு எங்களால் உருவாக்கப்பட்ட கட்சி தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு.அன்று எங்களால் ஒரு கொள்கைக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கொள்கைகள் அற்றுபோயுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது.குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 11 ஆசனங்களை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு 7 ஆசனங்களை மட்டும் பெற்ற முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சு பதவியை விட்டுக்கொடுத்தது. இதனால் தமிழ் மக்கள் அபிவிருத்திஇ வேலைவாய்ப்பு என அனைத்திலும் புறந்தள்ளப்பட்டனர். ஆனால் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலங்களில் எந்த இனத்தையும் இரண்டாம் பட்சமாக பார்க்கவில்லை என்றார்.

இன்று அரசாங்கத்தில் உரிமையுள்ள மக்களாக தமிழ் மக்கள் மாறியுள்ளனர். தமிழர்களது உரிமைகளை தக்க வைக்க வேண்டும் என்பதை ராஜபக்ச நன்கு அறிந்தவர். என்றும் 13 அம்ச கோரிக்கைகளுடன் சஜித் பிரேமதாசவிடம் சென்ற சம்பந்தன் ஐயாவின் அந்த கோரிக்கைகளை சஜித் பிரேமதாச அவர்கள் தூக்கி எரிந்ததன் பின்னர் 3 நாட்கள் மௌனமாயிருந்த சம்பந்தன் ஐயா அவர்கள் பிறகு தமிழ் மக்கள் சஜித் பிரமதாசவை ஆதரிக்க வேண்டும் என்றார். அதற்கான காரணம் சம்மந்தன் ஐயா அவர்கள் சஜித்திடம் பணம் பெற்றுவிட்டார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்த முஸ்லிம் கட்சிகள் பொதுத்தேர்தல் முடிந்த கையோடு பொதுஜன பெரமுனவை ஆதரித்து அவர்களுடன் இணைந்து விடுவார்கள். சாதாரண முஸ்லிம் மக்கள் தங்களை இந்த முஸ்லிம் தலைமைகள் நடுக்கடலில் தள்ளிவிட்டது என்று முஸ்லிம் தலைமைகளை ஏசுகின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் பிரபாகரன் வழியில் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூறுகின்றார்.அவர் பிரபாகரன் வழியில் இன்று தான் அஇஆ கற்கின்றார். ஆனால் நாங்கள் அவர் வழியில் பட்டம் முடித்தவர்கள் என்று கூற விரும்புகின்றேன்.தற்போதைய காலத்தில் அதிகாரம் தான் சண்டித்தனமாக உள்ளது. இதை பெற்று தரும் மக்களாக கல்முனை மக்கள் மாறவேண்டும். தமிழர்களது வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் . ஒவ்வொரு வாக்குகளும் பெறுமதியானவை . அத்துடன் எதிர்வரும் தை மாதத்தில் அம்பாறை மாவட்டத்தில் மாபெரும் கட்சி மாநாடு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அனைத்து தமிழர் சிறு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் .இந்த முயற்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமது ஆதரவை வழங்க வேண்டும்.அப்போது தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நிச்சயம் தரம் உயர்த்தப்படும் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சரீரம் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினருமான லோகேஸ்வரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளர் கே.நவேந்திரன் ,தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் விக்னேஷ்வரன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர் கு.ஏகாம்பரம் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More