தமிழகத்தின் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் பகுதியில் இன்று அதிகாலை 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதில் இதில் இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதைந்தும் இதுவரை 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில் இந்த கனமழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இந்தநிலையில் இன்று அதிகாலை மேட்டுப்பாளையம் அருகே இடம்பெற்ற இந்த அனர்த்ததில் சிக்கி தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து மீட்புப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஒரு சிறுவன் மற்றும் சிறுமி உட்பட 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த வீடுகளின் மேல் பகுதியில், தனியார் நிறுவனம் சார்பில் கருங்கல்லால் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்து கருங்கல் உருண்டு விழுந்ததால் வீடுகள் முற்றிலும் மண்ணில் புதைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #மேட்டுப்பாளையம் #சுவர்இடிந்து #கனமழை