புத்திசாலித்தனமான செயற்பாடுகளும் கடின உழைப்புடனும் யாழ்.மாவட்டத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அதிகார சபை அங்குரார்ப்பண நிகழ்வு முடிவடைந்த பின்னர், மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் பழிவாங்கல்கள் இல்லாமல், எந்த வித அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் இன்றி, வேறுபாடுகள் இன்றி அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படுவோம். எனவே எமது மாவட்டத்தை கட்டியெழுப்ப புத்திசாலித்தனமான செயற்பாட்டுடன், கடின உழைப்புடன் தொழிற்படுவோம். எங்கள் பிரதேச மக்கள் தங்கள் குறைகளை, பிரச்சனைகளை எங்கே போய் சொல்வது என்று தெரியாமல் இருந்தார்கள்.
இனிவரும் காலங்களில் திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் எமது இந்த அலுவலகத்திற்கு வந்து தங்கள் குறைகளை பிரச்சனைகளை கூறலாம். புதன் கிழமைகளில் பொதுமக்கள் தினமாக ஒதுக்கி அன்றைய தினம் நான் அலுவலகத்தில் இருந்து மக்களின் பிரச்சனைகளை கேட்டறிவதுடன், அவற்றை விரைந்து தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அதிகார சபை அலுவலகம் திறப்பு…
யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அதிகார சபை அலுவலக அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ்.மாவட்ட செயலகத்தினுள் அமைந்துள்ள கட்டட தொகுதி ஒன்றில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தினை இன்றைய தினம் காலை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன், வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், உள்ளிட்ட அரச அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகஸ்தர் கலந்துகொண்டனர்.
சாரதி அனுமதி பத்திரம்
சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களை பெறுவதற்கு யாழ்.மாவட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.மாவட்டத்தில் உள்ளோர் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியாது நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அது தொடர்பில் பலராலும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
யாழ்.மாவட்டத்தில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கான இடம் ஒன்றே உள்ளது. மாவட்டத்தில் உள்ள சனத்தொகையின் அளவிற்கு அது போதாது உள்ளது. இதனால் பலரும் அதிகாலை 2 மணிக்கு முன்னேரே வந்து “டோக்கன்” பெறுகின்றார்கள். அதிலும் சில இடைத்தரகர்கள் “டோக்கனை” விற்பனை செய்தும் வருகின்றார்கள். இவை தொடர்பிலும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி , வவுனியா மாவட்டங்களில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு நெருக்கடிகள் இல்லை. ஆனால் இங்கு உள்ளது. அதற்காக அரச அதிகாரிகளையோ , வைத்தியர்களையோ குறை கூற மாட்டேன். சிஸ்டம் சரியில்லை. அதனை மாற்ற வேண்டும்.
இது தொடர்பில் உரிய தரப்பினர்களுடன் கதைத்து நெருக்கடியில்லாது இலகுவாக மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கூடியவாறான நிலைமையை விரைந்து ஏற்படுத்துவேன் என தெரிவித்தார்.