இலங்கை பிரதான செய்திகள்

பூமித்தாயுடன் நாம் கொண்டிருக்கும் ஒட்டுண்ணி உறவுமுறையே இயற்கைப் பேரழிவுகளுக்கான அடிப்படைக் காரணம்..


பூமியை நாம் தாய் என்று அழைத்தாலும் அந்தத் தாயின் மீது பற்றுள்ள பிள்ளைகளாக நாம் நடந்து கொள்வதில்லை. இரத்தத்தைப் பாலாக்கித் தருகின்ற தாயின் முலையில் இரத்தத்தையே சுவைக்கக் கேட்கும் மகவு போன்று, நுகர்வுப் போதை தலைக்கேறி பூமியின் வளங்களை அடியொற்றி உறிஞ்சத் தலைப்பட்டுள்ளோம். பூமித்தாயுடன் நாம் கொண்டிருக்கும் இந்த ஒட்டுண்ணி உறவு முறையே இன்றைய இயற்கைப் பேரழிவுகளுக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். கடற்கோள் நினைவு நாளை வடமாகாண சபை இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.இத் தினத்தை முன்னிட்டு பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், பூமியின் வளங்கள் யாவும் மனிதன் உட்பட உலகின் அத்தனை உயிரிகளுக்கும் அவற்றின் வருங்காலத் தலைமுறைகளுக்கும் ஆனவை. ஆனால், மனிதர்கள் நாம் இயற்கை வளங்களை எமக்கானதாக மட்டுமே கருதி, எமது சந்ததிகளுக்குக்கூட மிச்சம்மீதி வைக்க விரும்பாதவர்களாகச் சூறையாடத் தலைப்பட்டுள்ளோம். பெற்றோலிய எரிபொருட்களின் மிதமிஞ்சிய நுகர்வு, காடுகளின் கபளீகரம், கட்டுப்பாடற்ற மணல் அகழ்வு, கடலையே கருவாடாக்கும் மீன்பிடி, நீரின் அடிமடியில் கைவைக்கும் ஆழ்குழாய்க் கிணறுகள், இயற்கைச் சுழற்சிக்கு உட்படாமல் மலைபோலக் குவியும் பிளாஸ்ரிக் கழிவுகள் என்று பூமியைப் புண்ணாக்கி வருகின்றோம்.

மனிதனில்; ஒட்டுண்ணிக்கிருமிகள் தொற்றிப் பெருகும்போது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு கிருமிகளைத் தாக்கத் தலைப்படும். மனிதர்களுக்கும் கிருமிகளுக்கும் இடையிலான இந்த மோதலில் மனிதனின் கையோங்கும் போது கிருமிகள் அழிவதும், கிருமிகள் மேலோங்கும்போது மனிதர்கள் நோயுற்று மடிவதும் நியதி. இதே போன்றே பூமித் தாயும் தன்னைப் புண்ணாக்கும் ஒட்டுண்ணி மனிதர்களிடம் இருந்து தன்னைத் தற்காக்கும் மோதலை ஆரம்பித்துள்ளாள். கடும் வறட்சி, காலம் தப்பிய அடைமழை, கடல்மட்ட உயர்வு, அடிக்கடி வேகம் பெறும் சூறாவளிகள் போன்ற இயற்கையின் சீறறங்கள் இந்த மோதலின் வெளிப்பாடுகளே ஆகும்.

மனிதரின் உடலில் காணப்படும் இ.கோலி பக்;றீரியங்கள் மனிதனுக்கு நன்மை செய்து மனிதர்களிடம் இருந்தும் நன்மையைப் பெறுவது போன்று, மனிதர்களும் பூமித்தாய்க்கு நன்மை செய்து, பூமித்தாயிடம் இருந்தும் நன்மையைப் பெறுகின்ற ஒன்றையொன்று விருந்தோம்பும் ஓம்புயிரிகளாக, ஒன்றியவாழிகளாக வாழ முற்பட்டாலொழிய இயற்கையின் பேரனர்த்தங்களில் இருந்து இருந்து மனுக்குலம் தப்பிக்கவே இயலாது. நாங்கள் சந்தித்த பேரனர்த்தமான கடற்கோளின் நினைவுநாளில் பூமித்தாயுடனான உறவை ஒட்டுண்ணிகளாக அல்லாமல் ஓம்புயிரிகளாகப் பேணுவோம் என்பதை ஒரு சபதமாக ஏற்றுச் செயற்படத் தொடங்குவோம். இதுவேகடற்கோளால்காவு கொள்ளப்பட்ட ஆன்மாக்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகவும் அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.