அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமல் போனோரின் உறவினர்கள் கோரிக்கை..
உறவுகள் காணாமல் போனமையினால் நிர்க்கதி நிலையில் இருக்கும் தங்களுக்கு அரசாங்கத்துடன் பேசி கௌரவமான நீதியைப் பெற்றுத் தருமாறு காணாமல் போனோரின் உறவினர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் குறித்த விடயம் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் நம்பி ஏமாந்துள்ளதாக தெரிவித்துள்ள காணாமல் போனோரின் உறவினர், தங்களின் பெயரினால் அமைக்கப்பட்ட சங்கங்கள் ஒரு சில தரப்புக்களின் தேவைகளுக்கு ஏற்ப தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று(31.12.2019) யாழ்ப்பாணத்தில் சந்தித்த யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கடந்த காலத்தில் சுமார் 27,000 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களின் பெயரினால் சில தரப்புக்கள் நன்னை அடைய முயற்சிக்கின்றனவே தவிர எந்தவிதமான நன்மைகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுத்தரவில்லை எனவும் தெரிவித்தனர். எனவே, அமைச்சர, தற்போதைய அரசாங்கத்துடன் இதுதொடர்பாக கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கு கௌரவமான தீர்வினை பெற்றுத் தரவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தனர்.
பாதிக்கப்பட்ட உறவினர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா, சொந்த சகோதரன் காணாமல் போயுள்ள நிலையில் உறவுகள் காணாமல் போகின்றமை எவ்வாறான வலியை ஏற்படுத்தும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருகின்றன்றவன் என்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக அரசாங்கத்துடன் பேசி கூடிய விரைவில் தீர்வினைப பெற்றுத்தர முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
அந்தவகையில் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டம் மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி காத்திரமான முடிவினை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் நேரடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து தங்களுடைய எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடுவதற்கும் கூடிய விரைவில் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 97 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணாமல்போனோர் தொடர்பான அமைப்பு ஒன்றை தான் உருவாக்கியதையும்; சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவன் என்ற வகையில் ஆயுதப் போராட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்கு தார்மீக பொறுப்பை ஏற்பதாக தெரிவித்த அமைச்சர், அதன் காரணமாவே தொடர்ந்தும் அரசியலில் இருப்பதுடன் காணாமல் போனோர் விவகாரத்தினை தீர்ப்பதற்கும் மீண்டும் ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, புலிகள் தன்னை கொலை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் புலிகளை தேடிச் செல்லவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி கட்சியிடம் வாழ்வாதார உதவிகளைப் பெற்றவர்கள் மற்றும் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் யாராவது சுயவிரும்பின் காரணமாக தவறான செயற்பாடுகளில் சம்மந்தப்பட்டிருந்தால், அதற்கு கட்சி எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது எனவும் அது கட்சியின் கொள்கை அல்ல எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஊடகப் பிரிவு: கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சு