சூடானில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை எட்டியதனையடுத்து அதனால் கடும் அதிருப்தியடைந்த மக்கள் அந்த நாட்டில் 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்த உமர் அல் பஷீரை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் மேற்கொண்டனர்.
மக்களின் இந்த போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது.நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் துன்புறுத்தப்பட்டனர்.
அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அகமது அல் காஹிர் என்ற பாடசாலை ஆசிரியர் கடந்த பெப்ரவரி மாதம் பாதுகாப்புபடையினரால் கொல்லப்பட்டார்.
அவரது இறப்பு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன் ஜனாதிபதி உமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது அங்கு இடைக்கால ராணுவ சபை மற்றும் பொதுமக்கள் தரப்பிலான எதிர்க்கட்சி கூட்டணி ஆகிய 2 அமைப்புகளும் இணைந்து ஆட்சியை வழிநடத்தி வருகின்றன.
இந்த நிலையில் அல் காஹிர் கொலை தொடர்பாக பாதுகாப்புபடையினர் 27 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படையினர் 27 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்கள் 27 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். #சூடான் #பாதுகாப்புபடையினர் #மரணதண்டனை #உமர்அல்பஷீர்