Home இலங்கை யாழில் சர்ச்சைக்கு முகம் கொடுத்த சாயிநாதர் – மயூரப்பிரியன்

யாழில் சர்ச்சைக்கு முகம் கொடுத்த சாயிநாதர் – மயூரப்பிரியன்

by admin

யாழில் உள்ள சீரடி சாயி நாதர்.  ஆலய உற்சவம் ஒன்றில் சாயிநாதருக்கு மதுபானம் படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பலர் மத்தியில் விமர்சனங்களை உண்டு பண்ணியது. அது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் முன் வைக்கப்பட்டது. அதன் உச்ச கட்டமாக சாயி நாதருக்கு மதுபானம் படைக்கப்பட்டமை தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை ஒரு தனிநபர் எழுதிய போது, அவர் வேலை காரணமாக வெளியூரில் தங்கி நிற்கும் நிலையில் சாயிநாதரின் பக்தர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் தாயாரை மிரட்டும் தொனியில் , சாயிநாதர் தொடர்பில் பதிவுகளை போட வேண்டாம் என கூறுமாறு அச்சுறுத்தி சென்று இருந்தார். 

வீட்டுக்கு வந்து மிரட்டி சென்றவர் தொடர்பில் முகநூளில் பதிவுகளை எழுதியவர் விபரங்களை சேகரித்து சட்ட நடவடிக்கைக்கு தயாரான போது, வீட்டுக்கு சென்று அச்சுறுத்திய நபர் மன்னிப்பு கோரியதால் அந்த விடயம் அத்தோடு முடிவுறுத்தப்பட்டது.
சாயி நாதருக்கு மதுபானம் படைக்கப்பட்டமையும் , அதனால் எழுந்த எதிர்ப்புக்கள் தொடர்பிலும் பிரதேச செயலகம் கவனத்தில் எடுத்து, ஆலய ஸ்தாபகரை அழைத்து வினாவிய போது, மதுபானம் படைக்கப்பட்டமைக்கு ஸ்தாபகர்  மன்னிப்பு கோரியதுடன் , இனிவரும் காலங்களில் அவ்வாறான செயற்பாடுகள் நடைபெற மாட்டாது என எழுத்தில் உறுதி மொழி வழங்கியுள்ளார்.
 “மது படைத்து வழிபாடு செய்யும் மோசமான முறைமை ஒன்றை யாழில் அறிமுகம் செய்ய முனையும் வினோத வழிபாட்டிடத்தை முழுமையாக சைவ மக்கள் புறக்கணிக்க வேண்டும். சைவ சமயிகள் மேற்படி நபர்கள் மீது அவதானமாக இருப்பதுடன் போலிகளுக்காக மதத்தை பரிகசிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளாது நேர்மையான உள்ளத் தூய்மையுடன் போலி வழிபாட்டு முறைமைகளை முற்று முழுதாக மறுதலித்து அவ்விடங்களிற்கு செல்வதையோ துணை போவதையோ கைவிட வேண்டும்” என அகில இலங்கை சைவ மகா சபை அறிக்கை கூட வெளியிட்டது.
இவ்வாறு கடும் விமர்சங்களை எதிர்கொண்ட சாயி நாதர் ஆலயம் ஆனது, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில், ஈழத்து சீரடி சாயிநாதர் ஆலயம் எனும் பெயரில் அமையப்பெற்றுள்ளது. குறித்த ஆலயம் கடந்த  2007 ஆம் ஆண்டு சிறிய கோயிலாக கொட்டில் ஒன்றுடன் ஸ்தாபிக்கப்பட்டு , தற்போது பக்தர்களின் பங்களிப்பால் ஓரளவு பெரிய கோயிலாக  மாறியுள்ளது.
குறித்த ஆலயமானது முன்னர் அங்கிருந்த விஸ்ணு ஆலயம் ஒன்றினை இடித்தழித்து விட்டு கட்டப்பட்டதாக பலரும் விமர்சித்த போதிலும் ,  “இந்த ஆலயமானது விஸ்ணு கோயிலையோ, வைரவர் கோயிலையோ ஆக்கிரமித்து கட்டவில்லை. இந்த ஆலயம் எமது  சொந்த காணியான  மடத்தார் வளவு எனும் காணியில் அமைந்துள்ளது. ஆலயத்திற்காக அதனை நாம் மடத்தார் பதி  என தற்போது அழைக்கின்றோம். அங்கே தான் சாயி நாதர் ஆலயத்தை அமைத்துள்ளோம். எந்த இந்து ஆலயத்தையும் ஆக்கிரமித்து நாம் சாயி நாதர் கோயிலை அமைக்க வில்லை.” என ஆலய ஸ்தாபகரான பாலசந்திரன் ராகவன் தெரிவித்தார்.
பாபா ஒரு மனிதராக வாழ்ந்தவர். இவர் சீரடி எனும் இடத்திற்கு வரும் போது பிச்சைகாரர் போன்ற தோற்றத்தில் வந்தார் எனவும் பின்னர் அங்கிருந்து நோய்வாய்ப்பட்டு இருந்தவர்களுக்கு மருத்துவம் செய்த தொடங்கினார் எனவும் அதனால் அவரை மருத்துவர் எனவும் சிலர் கூறுகின்றார்கள்.  சாயி நாதரின் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்பின் சாயிநாதரின் சச்சரிதம் எனும் நூலை வாசித்து அறிந்து கொள்ள முடியும்  எனவும் கூறுகின்றார்கள்.
சாயிநாதர் ஆலய பூஜை முறைகள் தொடர்பில் ஆலய ஸ்தாபகரான பாலசந்திரன் ராகவனிடம் கேட்ட போது ,
 சாயிநாதருக்கு பூஜை முறைகள் என எதுவும் இல்லை. இங்கே பக்தர்கள் இந்து சமய முறைப்படி பூஜை செய்து வழிபட்டு வருகின்றார்கள். அவர் இந்துவா முஸ்லீமா என தெரியாது. ஆனாலும் அவரது உடைகள் முஸ்லீம் ஒருவரின் உடையை ஒத்ததாக உள்ளது சாயி நாதர் இந்துக்களின் திருவிழாக்களையும் ஊக்கிவித்துள்ளார். அத்தோடு முஸ்லீம்களின் சந்தன கூடு , உருசு ஆகிய திருவிழாக்களையும் ஊக்கிவித்து இந்து , முஸ்லீம்கள் உறவுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவரது போதனைகள் வித்தியாசமானது. ஆகம விதிகளுக்கு கட்டுப்பட்டவர் அல்ல அவரை நாம் அன்பாக வழிபட்டு வருகின்றோம்.
இந்து மதத்தை தழுவிய வழிபாட்டு முறையில் தான் இங்கே வழிபாடு நடைபெறுகின்றன ஆனாலும் இங்கு ஒரு தனித்துவ முறையில் சாயிநாதருக்கு மராட்டிய மொழியில் ஆரார்த்தி நடைபெறுகின்றது. வியாழகிழமையில் நாலு தடவைகளும் ஏனைய நாட்களில் ஒரு தடவையும் நடைபெறும். என தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள மடையில் மதுபானம் படைக்கப்பட்டமை  தொடர்பில் அவரிடம் கேட்ட போது ,
சாயி நாதர் இந்துவா , முஸ்லீமா என தெரியாத நிலையிலும் சாயிநாதர் மாமிசத்தை விரும்பி உண்பவர் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு அதனால் நாங்கள் அன்பாக எதனை படைத்தாலும் , அதனை அவர் ஏற்றுக்கொண்டு அருள்புரிவார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சாயி நாதர் சிலையை பிரதிஸ்ட செய்து மகா கும்பாபிசேகம் செய்து 108 நாட்கள் தொடர்ந்து மண்டல அபிசேகம் செய்து இறுதி நாள் மடை எனும் கிராமிய வழிப்பாட்டு முறைமையை செய்திருந்தோம். அதில் மாமிச உணவ  தவிர்த்து சகல விதமான உணவு பதார்த்தங்கள் மற்றும் ஐஸ் கிறீம் உட்பட சகல விதமான குளிபானங்கள் உடன் மது வகைகளையும் படைத்திருந்தோம். அதில் மதுபான வகைகளை படைத்தமைக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
அதனால் நாலு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மடை உற்சவத்தின் போது இந்த முறை கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற மடை உற்சவத்தின் போது, மது வகைகளை தவிர்த்திருந்தோம். ஆனாலும் ஒரு பக்தர் மதுபான வகைகளை இங்கே மடையில் கொண்டு வந்து வைத்து விட்டார். அது அந்த பக்தரின் நேர்த்திக்காக படைக்கப்பட்டு இருக்கலாம். ஆலயத்தின் சார்பாக அந்த மதுபான வகைகளை படைக்க வில்லை.
மதுபான வகைகள் மடையில் வைக்கப்பட்டு சில நிமிடங்களில் அவற்றை அவ்விடத்தில் இருந்து அகற்றி விட்டோம். சாயி நாதர எவ்வாறு வழிபட விருப்பமோ அவ்வாறு வழிபடலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.
சாயி நாதரை நாடி வரும் பக்தர்கள் மனம் நோக கூடாது. எந்த அடியவனும் மனம் நொந்து செல்ல கூடாது. அதுவே சாயி நாதரின் விருப்பமும் கூட , மதுபானத்தை சாயிநாதர் விரும்பி இருக்கா விடின் அந்த இடத்தில் மதுபானம் வந்திருக்க முடியாது என்பதனை நாம் முழுமையாக நம்புகின்றோம். மது பானம் படைக்க பட்ட போதும் அதனை பிரசாதமாகவோ அல்லது தீர்த்தமாகவோ யாருக்கும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. என்பதனை நாம் உறுதியாக கூறுகின்றோம்.
ஆனாலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவற்றில் சிலதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதற்காக சிலர் இந்த ஆலயத்தை தகர்ப்போம். எரிப்போம் என கருத்து பரிமாற்றங்களை முன் வைத்து வருகின்றார்கள். ஆலயத்திற்கோ , ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கோ ஆபத்துக்கள் ஏதேனும் நிகழுமாக இருந்தால் முகநூலில் அவ்வாறு கருத்து பரிமாறினவர்களே பொறுப்பாளிகள் ஆவார்கள்.
நந்தி தேவருக்கு முன்னால் மதுபானம் படைக்கப்பட்டது எனும் விமர்ச்சனத்திற்கு நாம் மன்னிப்பு கோருகின்றோம். நந்தி தேவருக்கு முன்னால் மதுபானம் படைத்து இந்து மதத்தை அவமதிக்க வேண்டும் என்றோ , இந்துக்களை மனம் நோக செய்ய வேண்டும் என்ற என்னமோ எமக்கு இருந்ததில்லை. அது தவறுதலாக நடந்த விடயம். அதற்காக நாம் மன்னிப்பு கோருகின்றோம். இது அறியாமல் நடந்த ஒரு தவறு  இனிவரும் காலங்களில் மடைகளில் மதுபான வகைகளை படைக்க மாட்டோம் என உறுதியாக கூறுகின்றோம்.
பல்வேறு ஆலயங்கள் இங்கே இருந்தாலும் ஈழத்து சீரடி எனும் பெயரோடு  சாயி நாதர் தனித்துவமாக மேலோங்கி காணப்படுகின்றார்.  அதன் தனித்துவத்தை குறைப்பதற்கு பல்வேறு குழுவினர்கள் செயற்பட்டு வருகின்றார். இவை எல்லாவற்றையும் சாயி நாதர் பார்த்து அவர்களுக்கு தகுந்த பிரதி பலன்களை வழங்குவார்கள்.  என தெரிவித்தார்.
சாயிநாதருக்கு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நத்தார் பாப்பா அலங்காரம் செய்தமை தொடர்பில் அவரிடம் கேட்ட போது,
சாயிநாதருக்கு கிறிஸ்மஸ் தினத்தன்று நத்தார் பாப்பா அலங்காரம் செய்து வணங்குகின்றோம். அது இங்கு மாத்திரமல்ல இந்தியாவிலும் நடைபெறுகின்றது. இந்தியா சுதந்திர தினத்தன்று சாயி நாதருக்கு தேசிய கொடி போர்த்தி வணங்குபவர்களும் உண்டு.
இங்கு நாங்கள் கிறிஸ்மஸ் தினத்திற்கு மாத்திரமல்ல , சிவராத்திரிக்கு சிவரூப அலங்காரம் செய்கின்றோம். சொர்க்க வாயில் ஏகாதசிக்கு விஸ்ணு அலங்காரம் செய்கின்றோம் ரம்ழான் காலத்தில் மௌலவி அலங்காரம் என அவருக்கு சால்வை போர்த்தி , தொப்பி வைத்து , தாடி வைத்து வணங்குவோம்.  இது வருடாந்திரம் நடக்கும் நிகழ்வாகும்.
சாயிநாதரை எங்களுடைய கற்பனையில் வழிபடுகின்றோம். குருபூர்ணிமா எனும் நாளில் சாயி நாதரை ராஜாவாக பார்க்க விரும்பி பட்டாபிசேகம் செய்கிறோம். அது முடிய சிம்மாசனத்தில் சாயி நாதர் அமர்ந்து வலம்  வருவார். 108 சீர் வரிசைகளையும் செய்வோம்.
எங்கள் சாயி நாதரை அன்போடு நாம் விரும்பியவாறு அலங்கரித்து நாம் வணங்குகின்றோம். இதனை நாம் தவறு என ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதற்காக நாம் மன்னிப்பு கோர மாட்டோம். என தெரிவித்தார்.
சாயி நாதர் ஆலயத்தில் இந்து ஆலயங்களில் நடைபெறுவது போன்று கொடியேற்றம் , தேர்த்திருவிழா , தீர்த்த திருவிழா என மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறுவது தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. அது தொடர்பில் அவரிடம் கேட்ட போது,
வடந்திய முறைப்படி பாண்ட் வாத்திய இசையுடன் தான் சாயி நாதரின் வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதற்கும் பல்வேறு எதிர்ப்புக்கள் வந்தன
மகோற்சவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். நாம் இந்த ஆலயத்தில் கடந்த  2007 ஆம் ஆண்டு 7 நாட்கள் கொண்ட மகோற்சவ திருவிழாக்களுடன் ஆரம்பித்தோம். தற்போது 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
சாயி நாதருக்கு பக்தர்கள் விருப்ப படி திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அலங்கார கொடி ஏற்றி திருவிழாக்கள் ஆரம்பமாகும் 2012  ஆம் ஆண்டு முதல் தேர் திருவிழாவும் நடைபெறுகின்றன. தீர்த்த திருவிழா வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய கடல் தீர்த்த திருவிழா அன்று சாயி நாதர் கிணற்று தீர்தமாடியும் மறுநாள் சுப்பர் மடத்தில் வல்லிபுர ஆழ்வார் தீர்த்தமாடும் கடலில் சாயிநாதர் தீர்த்தமாடுவார். அவரின் விருப்பத்தின் பேரில் தான் அவைகள் நடைபெறுகின்றன. அவர் விரும்பா விட்டால் அவைகள் நடைபெற மாட்டாது. என தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள சீரடியில் உள்ளவர்களுடன் இந்த ஆலயத்திற்கு தொடர்புகள் உண்டா என வினாவிய போது,
இந்தியாவில் உள்ள சீரடி எனும் இடத்தில் உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ள ஆலயம் தான் இது. அங்குள்ள பண்டித் என்பவர்களுடனும் , சாயி நாதரின் வம்சாவளியினருடனும் தொடர்பில் உள்ளோம்.
அத்துடன் வட இந்திய பண்டிகைகளையும் இங்கே கொண்டாடுகின்றோம். கோலி பண்டிகை கூட நடைபெறுகின்றது அதனை தொடர்ந்து பாபாவின் சாவடி ஊர்வலம் நடைபெறும். அதற்கும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இருந்தாலும் நாம் அதனை பொருட்டில் எடுக்கவில்லை. நாம் செய்வது பாபாவுக்காக அதனை நாம் இந்தியாவின் நெறிப்படுத்தலுடன் தொடர்ந்து செய்து வருகின்றோம். என தெரிவித்தார்.
கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட நம்பிக்கை. அவர்கள் விரும்பியவாறு விரும்பிய மதத்தினை தழுவலாம். விரும்பியவரை வணங்கலாம். ஆனால் ஒருவரது வழிபட்டு முறை தனிப்பட்ட நபருக்கோ சமூகத்திலையோ எதிர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணாதவாறு இருக்க வேண்டும். என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க போவதில்லை.
வழிபாட்டு முறைகள் ஒரு ஒழுக்கத்திற்குள் இருக்க வேண்டும் என்பதே பலரின் அவா. 
#சாயிநாதர்    #ஆலய உற்சவம் #மதுபானம்   விமர்சனங்கள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More