Home இலங்கை நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…

நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…

by admin


தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும். எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று 19ம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் பொங்கல் விழா நிகழ்வு திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “எமது போராட்டத்தை தோற்கடிப்பதற்காக பலர் முயற்சி செய்த போதும் அது இன்னும் பன் மடங்கு பலத்துடன் எமது மக்களின் ஆணையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஒற்றுமை எமது மக்களுக்கான நிரந்தர தீர்வு கிட்டும் வரை நிலைத்திருக்க வேண்டும். இலங்கைத் தமிழரசு கட்சி ஆரம்பிக்கப் பட்ட காலம் முதல் மக்களின் ஜனநாயக முடிவைத்தான் நாம் முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் எவருக்கும் அடிபணியாது செயற்பட்டு வருவதனால் இன்று சர்வதேச சமுகமும் எம்மை அங்கீகரித்து எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

எமது தீர்வு நோக்கிய பயணம் சிறப்பாகவே நகர்ந்து சென்றது. பெரும்பான்மையின மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்ப நிலையே இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணம். இருப்பினும் நாம் எமக்கான தீர்வு கிட்டும்வரை உறுதியாகவும் தென்பாகவும் செயற்பட்டு வருகின்றோம். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூறிய விடயங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் சண்முகம் குகதாசன் தலைமையில் இடம்பெற்ற இப் பொங்கல் விழா நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், க.துரைரெட்ணசிங்கம் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், யாழ் மாநகரசபை தலைவர் ஆனோல்ட், திருகோணமலை நகரசபை தலைவர் நா.இராஜநாயகம் பட்டணமும் சூழலும் பிரதேசசபை தலைவர் எஸ்.ஞானகுணாளன், வெருகல் பிரதேச சபை தலைவர் க.சுந்தரலிங்கம் உட்பட கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலக்கிளை பிரதிநிதிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More