இலங்கை பிரதான செய்திகள்

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் – புலஸ்தினியின் மரபணு பொருந்தவில்லை…


சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அறிக்கை(DNA) பொருந்தவில்லை என மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணுபரிசோதனை அறிக்கை அறிய மீண்டும் குறித்த அறிக்கையை ஆராய மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று பணித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் கல்முனை நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை(21) ஆஜர்படுத்தப்பட்டு குறித்த வழக்கு விசாரணை இரண்டு கட்டமாக நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை இரண்டாம் கட்ட 6 சந்தேக நபர்களுக்கான விசாரணையின் போது மன்றில் தோன்றிய விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களளின் மரபணுபரிசோதனை தொடர்பாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் குறித்த தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணின் மரபணு பரிசோதனை மாத்திரம் எந்தவொரு மரபணுபரிசோதனையுடனும் ஒத்துப்போகவில்லை என்பதை நீதிவானிக் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனை அடுத்து நீதிவான் மேற்படி சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனையை மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்ததுடன் குறித்த மரபணு பரிசோதனை தொடர்பில் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கட்டளையிட்டார்.

இதே வேளை கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமானவர்களின் மரணவிசாரணை தொடர்பாக வழக்கு கடந்த 2019 ஆண்டு ஒக்டோபர் மாதம் புதன்கிழமை (2) அன்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவரின் நெறிப்படுத்தலுடன் பல்வேறு கேள்விகளுக்கு பொலிஸ் பரிசோதகர் ஆர்.எல் சமரவீர வாக்குமூலம் வழங்கி இருந்தார்.இதன்போது அவர் தனது வாக்குமூலத்தில் சம்பவம் நடந்த வீடு அதை அண்டிய வெளியிடங்கள் உள்ளடங்கலாக 17 பேர் மரணமடைந்துள்ளதாக தமக்கு அறியக்கிடைத்ததாகவும் அவ்விடத்தில் தடயப்பொருட்களை சேகரித்ததுடன் காயமடைந்த நிலையில் ஒரு பெண் ,குழந்தை ஆகியோரை மீட்டு அம்பாறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சையின் பின்னர் அவர்களிடம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அவரது தகவல் படி

முஹமட் ஹாசீம் முகமட் றில்வான் (முகமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

முகமட் நஸார் பாத்திமா நப்னா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மனைவி)

முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னிஃமுகமட் சின்னா மௌலவி( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

ஆதம்லெப்பை பாத்திமா அப்ரீன் ( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மனைவி)

ஹயாது முஹமட் ஹாசீம் (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தந்தை)

அப்துல் சத்தார் சித்தி உம்மா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தாய்)

முகமட் ஹாசீம் ஹிதாயா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரி)

இப்றாகிம்லெப்பை முஹமட் றிசாட் (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மைத்துனரும்
முகமட் ஹாசீம் ஹிதாயாவின் கணவர்)

அப்துல் ரஹீம் பிரோஸா (சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் மனைவி)

மகேந்திரன் புலஸ்தினி/சாரா ஜெஸ்மி (நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி)

அகமதுலெப்பை முகமட் நியாஸ்(தேசிய தௌஹீத் ஜமாத் பிரதான உறுப்பினர்)

முகமட் றில்வான் மீரா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகள்)

முகமட் றில்வான் மருவான் சஹீட் ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகன்)

முகமட் ஜெய்னி அமாயா( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகள்)

முகமட் இமாம் ஹாசிம்( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகன்)

முகமட் சஹ்ரான் வாசீட் ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகன்)

மற்றுமொரு சடலம் இணங்காணப்படவில்லை

இது தவிர இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள்

முகமட் சஹ்ரான் ருசைதா ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகள்)

அப்துல் காதர் பாத்திமா ஹாதியா/சித்தியா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மனைவி)

மேற்குறித்த 17 பேர் உள்ளடங்களாக மரணமாகியதுடன் காயங்களுக்கு உள்ளாகினர் என அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு குறித்த தாக்குதலில் இறந்தவர்களது பிரேத பரீசோதனை யாவும் கடந்த ஏப்ரல் 28,29 திகதிகளில் அம்பாறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவினால் நடாத்தப்பட்டிருந்தன.அதன் பின்னர் மரணமானவர்களது சடலங்கள் அம்பாறை மாவட்டம் புத்தங்கல பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் 2019/5/2 அன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன.

(பாறுக் ஷிஹான்)

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.