இராணுவ சிப்பாயை தாக்கினார் என குற்றம்சாட்டி முன்னாள் போராளி ஒருவரை இராணுவத்தினர் கடந்த ஒரு வார காலமாக தேடி வரும் நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை அவரின் சகோதரை கைது செய்துள்ளனர்.
கடந்த தைப்பொங்கல் தினத்தன்று, யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டார் என கூறி மறுநாள் அதிகாலை முதல் அப்பகுதியை பெருமளவான இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினார்கள்.
குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் மீட்கப்படாமல், இராணுவ சிப்பாயை தாக்கியவருக்கு உதவினார்கள் என நால்வரை கைது செய்துகாவற்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவற்துறையினர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்திய போது, ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனைய மூவரும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.
அதன் பின் இரு நாட்களின் பின்னர் நாகர் கோவில் பகுதியில் விளையாட சென்ற இளைஞன் மற்றும் தொழிலுக்கு சென்றவர் என மூவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இராணுவ முகாமினுள் வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர்களை புகைப்படம் எடுத்த பின்னர் அவர்களை இராணுவத்தினர் விடுவித்தனர்.
இந்நிலையில் வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரிக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீட்டினுள் இராணுவ சிப்பாயை தாக்கியவரின் சகோதரன் மறைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வீட்டை இராணுவத்தினர் சுற்றி வளைத்து சிப்பாயை தாக்கியவரின் சகோதரனை கைது செய்தனர்.
கைது செய்த இளைஞனை இராணுவ முகாமினுள் கொண்டு சென்று நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பருத்தித்துறை காவற்துறையினரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.
அதேவேளை இராணுவ சிப்பாயை தாக்கியதாக கூறப்படும் நபர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.