கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு பேர் ஐ,டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண் ஒருவரும் சீன நாட்டு பெண் ஒருவருமே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை மூன்று பெண்கள் உட்பட 4 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக தெரிவித்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் நேற்று (25.01.20) அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு பெண்களுக்கும் உண்மையாகவே அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த இரு பெண்களினதும் இரத்த மாதிரிகளை இலங்கை வைத்திய ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவில் கல்வி கற்ற நிலையில் இலங்கை திரும்பிய ஒரு வைத்திய பீட மாணவி கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் சுற்றுலா மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த சீன பெண்ணும் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டார்.
இவர்களுக்காக விசேட சிகிச்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவர்களுக்கு கொரன்னா வைரஸ் தாக்கி உள்ளதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.