கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர்.தேவாமிர்ததேவிக்கு ஆதரவாக கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு இலங்கை மனித உரிமை கல்முனைப் பிராந்திய ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் அமைந்துள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் அராஜகத்தினால் அண்மைகாலங்களாக விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர்.தேவாமிர்ததேவி உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை(10) முற்பகல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் மகஜர் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தை கல்முனை சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பித்த முஸ்லீம் தமிழ் உள்ளிட்ட உள்ளடக்கிய கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை எழுப்பியதுடன் பேரணியாக கிட்டங்கி கல்முனை வீதியின் ஊடாக சென்று இறுதியாக கல்முனை மனித உரிமை பிராந்திய காரியாலயத்தை வந்தடைந்தது.
பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீபை சந்தித்து குறித்த கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு பிரதிநிதி கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும் கல்முனை மாநகர உறுப்பினருமான பஸீரா றியாஸ் தலைமையிலான குழு மகஜரை கையளித்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தருக்கு உரிய பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தற்போது உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள விசேட தர தாதிய உத்தியோகத்தரை மிரட்டும் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் அநாகரிக செயற்பாடு தொடரும் பட்சத்தில் பல்வேறு வடிவில் போராட்டம் இடம்பெறும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர்.தேவாமிர்ததேவியும் இப்போராட்டத்திற்கு வருகை தந்ததுடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீபையும் சந்தித்து கலந்துரையாடி இருந்ததை காண முடிந்தது.
பாறுக் ஷிஹான்