யாழ்ப்பாணம் அரியாலையில் இரண்டு வீடுகளில் நகைகள் மற்றும் பணம் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் அரியாலை கனகரட்ணம் வீதியில் உள்ள வீடொன்றிலும் ஏவி வீதியில் உள்ள வீடொன்றிலும் அண்மையில் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை பட்டப்பகலில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன. தாலிக்கொடி உள்ளிட்ட பெறுமதியான நகைகள் திருடப்பட்டிருந்தன.
அவை தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் வீடுகளின் உரிமையாளர்களால் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர், தடயங்களின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை அரியாலையில் உள்ள வீடொன்றில் தேடுதலை முன்னெடுத்தனர்.
அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த 19 பவுண் 6 கிராம் தங்க நகைகளை (158 கிராம் தங்க நகைகள்) கைப்பற்றியிருந்தனர். அங்கு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.
சுமார் 22 தொடக்கம் 25 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை முற்படுத்தப்பட்டனர்.
அரியாலையில் உள்ள வீடொன்றில் 6 தங்கப் பவுண் தாலிக் கொடி உள்பட 11 பவுண் 2 கிராம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒரு பி அறிக்கையும் மற்றொரு வீட்டில் 8 பவுண் 4 கிராம் தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் மற்றொரு பி அறிக்கையும் 5 சந்தேக நபர்களுக்கு எதிராக காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன், இரண்டு சந்தேக நபர்களின் உடமையிலிருந்து ஆயிரத்து 900 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டதாக தனித் தனியே இரண்டு பி அறிக்கைகளும் சந்தேக நபர் ஒருவர் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டார் என தனியான ஒரு பி அறிக்கையும் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டன.
காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட 5 பி அறிக்கைகளையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபர்கள் ஐவரையும் வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார் #கொள்ளை #சந்தேகநபர்கள் #விளக்கமறியல் #யாழ்ப்பாணம் #அரியாலை