(க.கிஷாந்தன்)
“அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கடன் பெறும் எல்லையை மேலும் யோசனைக்கே எதிர்ப்பை வெளியிட்டோம். மாறாக அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு அல்ல.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கண்டிக்கு (21.02.2020) அன்று பயணம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“ஆளுங்கட்சியால் பாராளுமன்றத்தில் (20.02.2020) அன்று இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படவில்லை. யோசனையொன்றே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த யோசனைத் திட்டத்தில் இரு பிரிவுகள் இருந்தன.
ஒன்று அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமானது. மற்றையது கடன் எல்லையை அதிகரிப்பது. இவ்விரண்டு பிரிவுகளிலும் கடன் எல்லையை அதிகரிக்கும் விடயத்துக்கே நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். அபிவிருத்தி நடவடிக்கை சம்பந்தமான யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, மக்கள் நலன்சார் அரசாங்கமாக இருந்திருந்தால், அபிவிருத்தி சம்பந்தமான யோசனையை முன்வைத்துவிட்டு, மற்றையதை மீளப்பெற்றிருக்கும். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களோ இரண்டையும் வாபஸ் பெற்று விட்டனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்தார். அதன்போது கடன்களை மீள் செலுத்துவதற்கு மேலும் மூன்றாண்டுகள் அவகாசம் வேண்டும் என கோரினார். நிலைமை இப்படியிருக்கையில் மேலும் கடன்களை பெற எவ்வாறு அனுமதிக்க முடியும்? எனவேதான் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
அதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களிடம் இருந்து கிடைக்கும் சிறந்த ஆணையின் பிரகாரம் அரசியல் பழிவாங்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.” – என்றார். #அரசின் #யோசனை #சஜித்பிரேமதாச #எதிர்க்கட்சித்தலைவர்