இலங்கை பிரதான செய்திகள்

காலம் தாழ்த்தாது ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்குப் பாரப்படுத்தப்படல் வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடரின் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை மீதான பொது விவாதத்தில் ((OHCHR oral update on Sri Lanka) விடயம் 2 இன் கீழ் 28.02.2020 இன்று ஆற்றிய உரை வருமாறு.

30/1 தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் நடத்தை குறித்து இந்த வாய்மொழி மூல அறிக்கை கணிப்பீட்டை மேற்கொண்டிருக்கிறது.

இந்த பிரேரணையின் உள்ளடக்கமானது , மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில், இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளோடு ஒப்பிடுகையில் மிகப்பாரிய குறைகளோடு இருந்தமையால், தமிழர்களால் இப் பிரேரணையானது சந்தேகத்துக்குரியதாகவே பார்க்கப்பட்ட போதிலும்,

இந்த 30/1 பிரேரணையானது, சிறிலங்கா அர்சாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்டு, அது இந்த ஐநா மனித உரிமை சபையின் அங்கத்துவர்கள் பலராலும் பெரிதும் சிலாகிக்கப்பட்டும் இருந்தது.
இந்த 30/1 பிரேரணையானது, சர்வதேச கலப்பு (Hybrid) குற்றவியல் பொறிமுறையை கொண்டிருக்கும் என்று, தமிழர்களிற்கு சொல்லப்பட்ட போதும் (தமிழர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்ட போதும்) அதற்கு மாறாக, பொறுப்புக்கூறலை உள்ளக விசாரணைக்குள் மட்டுப்படுத்தப்படுத்தக்கூடிய வகையில் மிக சாமர்த்தியமான வார்த்தைகள் மூலம் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது என்பதை எமது அமைப்பு இங்கே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த பிரேரணையை அமுல்படுத்த முடியாது என அப்போதைய சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே மறுதலித்திருந்த போதிலும் , தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் கால நீடிப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த நவம்பரில் சிறிலங்காவில் புதிய அரசாங்கமொன்று பதவிக்கு வந்திருக்கிறது.

இங்கு இழைக்கப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரி எனக் குற்றம் சாட்டப்பட்டிருப்பவரே இப்போது புதிய ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.

இந்த புதிய அரசாங்கமானது , எதிர்பார்க்கப்பட்டபடியே, 30/1 பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதாக , உத்தியோகபூர்வமாக இந்த மன்றிற்கு அறிவித்திருக்கின்றதன் மூலம் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது .

அவையின் தலைவர் அவர்களே மற்றும் ஆணையாளர் அவர்களே ,

நீதியை நிலைநாட்ட மறுதலிக்கின்ற நாடொன்றில், குற்றவியல் நீதியை அமுல்படுத்துவதற்கான வல்லமைகள் இந்த மனித உரிமை பேரவைக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது என்பதை ஏற்று, இப்போதாவது, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேசதீர்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கையை விடுக்கப்படவேண்டும்.

என்ற கோரிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  வலியுறுத்தியுள்ளார்.  #கஜேந்திரகுமார்  #மனிதஉரிமைகள்பேரவை #இலங்கை  # மனித உரிமைகள்,  #பொறுப்புக்கூறல்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.