178
முற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளோம். அதற்கான வேட்பு மனுவை நாளை சமர்ப்பிக்கவுள்ளோம். என அக்கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்தார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
முற்போக்கு தமிழ் தேசிய கட்சி ஆரம்பிக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்றது. தொடர்ந்து நாம் சேவையில் ஈடுபட்டுள்ளோம். எமது கட்சி இதுவரையில் பதிவு செய்யவில்லை. இதனால் நாம் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்.
எமது கட்சியின் செயலாளரான எனது தலைமையில் போட்டியிடவுள்ளோம். தேர்தல் சட்டங்களுக்கு அமைய நாளைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளோம்.
ஆனால் உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனோ வைரஸ் காரணமாக தேர்தலை பிற்போடுமாறு கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். வைரஸ் தாக்கம் குறித்து மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் , தேர்தலை பிற்போடுவதே சிறந்தது.
எமது கட்சியின் வேட்பாளர்கள் இந்த மண்ணிலே பிறந்து இந்த மண்ணின் வலியை சுமர்ந்தவர்கள். கொழும்பில் இருந்தோ கோடீஸ்வர குடும்பத்தில் இருந்தோ வேட்பாளர்களை இறக்குமதி செய்யவில்லை பட்டாளி மக்கள் மத்தியில் இருந்து உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக முன்னுறுத்தி உள்ளோம். கடந்த 72 வருடத்தில் எந்த கட்சியும் பாட்டாளி மக்களுக்கு வாய்ப்பளிக்க வில்லை.
சட்டத்தரணிகளுக்கும் , கோடீஸ்வரர்களுக்குமே கட்சிகள் ஆசனம் ஒதுக்குகின்றது. இதனாலையே நாம் பாட்டாளி மக்களில் இருந்து தேர்தலுக்கு வந்திருக்கிறோம். எமது களப்பணி அதிகமாக இருக்கின்றது. அதனாலையே எம்மால் பெண்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடியவில்லை. இனி வரும் தேர்தல்களில் நிச்சயமாக பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குவோம்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்து போட்டியிட முனைந்த போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் அதற்கு தடையாக இருந்து , எமது கட்சியை ஐக்கிய தேசிய கட்சி சேர்த்தால் தான் கட்சியை விட்டு விலகுவேன் என கட்சி தலைமைக்கு கடிதம் மூலம் அழுத்தங்கள் கொடுத்ததால் அன்று கூட்டு சேர முடியவில்லை.
அந்நிலையில் தற்போது சஜித் பிரேமதாசவின் கூட்டணியின் கூட்டத்திற்கு கூட நாம் விருந்தினர்களாகவே சென்றிருந்தோம். ஒப்பந்தங்கள் எதுவுமே செய்யவில்லை. நாம் சுயேட்சையாகவே இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றோம். என தெரிவித்தார். #யாழ் #முற்போக்குதமிழ்தேசியகட்சி #போட்டி #சுதர்சிங்விஜயகாந்த்
Spread the love