151
மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அமுல் படுத்தப்பட்ட காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 6 மணிமுதல் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முந்தியடித்துக் கொண்டனர்.
காலை 6 மணியளவில் மன்னார் சதொச விற்பனை நிலையத்திற்கு முன் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்தனர். மேலும் பல்பொருள் விற்பனை நிலையங்களில் மக்கள் அரசாங்கத்தில் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுகாதார முறைப்படி பொருட்களை கொள்வனவு செய்ய வரிசையில் கத்திருந்தனர்.
குறிப்பாக மன்னார் நகரின் பல பாகங்களிலும் மரக்கறி உட்பட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் இன்றைய தினம் பொருட்களை எவ்வித அசௌகரியங்கள் இன்றி கொள்வனவு செய்துள்ளனர்.
மேலும் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளில் உள்ள வீதிகளில் விசேட அதிரடிப்படையினர் கிருமி நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்துவிசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவு மன்னார் மாவட்டத்தில் கையிருப்பில் உள்ள நிலையில் மக்கள் கொள்வனவு செய்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக அத்தியாவசிய பொருட்கள், மரக்கறி,முட்டை,மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உள்ளிட்ட சோதனை நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் பார்வையிட்டு வருவதோடு, சட்ட திட்டங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற வர்த்தகர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #ஊரடங்குச்சட்டம் #மக்கள்
Spread the love