தமிழர் பண்பாட்டுவெளி வரலாற்று நீட்சியில் பட்டிகள் என்பது மிக முக்கியமானவையாக இற்றைவரை இருந்து வருகிறது. இவை மக்களின் வாழ்வியலோடு இணைந்து சமூக முன்னேற்றத்துக்கு பாரிய பங்காற்றுகின்றன. இதனடியாக தொடர்புறுத்தி உள்ளூர் உணவு, வைத்தியம்,பொருண்மியம், வாழ்வியல் நடைமுறையென பலவற்றை கையிளந்த சூழ்நிலையில் தற்கால உலக நிலவர பட்டறிவு சிந்திப்பதற்கான வெளியை உருவாக்கியதன் நிமிர்த்தம் பட்டிகள் சார்ந்து கவனத்தில் கொள்ளும் பிரதிபலிப்பின் தேவை உணரப்பட்டுள்ளது.
பட்டிகள் எனும்போது மாடு வளர்ப்பினை பிரதான படுத்தலாம். பட்டி என்றால் செல்வம் என்று அடையாளப்படுத்தப்படுகின்றது. பட்டிக்காரர்கள் உள்ளூர் வங்கியாளர்களாக கருதப்பட்டனர். இதன் அடிப்படையில் நவீன மயமாக்கம் மனிதர்களை கல்வி,தொழில், வணிகம் போன்றவற்றினால் இரத்தமும் சதையும் அற்றவர்களாய் ஓய்வின்றி இயந்திரங்களாக ஆக்கிய கால ஓட்டத்தில், கொரொனா சடுப்பொழுதில் இவ்வியங்கியலை நிறுத்தி அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளது. இத்தருணத்தில் நாடு இன்நோயினை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், மனிதர்கள் இயங்கிய வாழ்வு முறைக்கும் இடையில் பிளவு ஏற்படுகின்றது.இவை உணவு, தொழில், கல்வி, சொத்து, உற்பத்திகள், உள் மற்றும் வெளிநாட்டு பயணங்கள், ஏற்றுமதி, இறக்குமதி என பவவற்றை பொருத்திப் பார்க்கலாம்.
நாளாந்தம் நட்சத்திர விடுதிகளில் உணவினை தினமும் வழக்கமாக பெறும் நுகர்வாளர்கள், வீடுகளில் முடங்கப்பட்டு விரும்பியோ, விரும்பாமலோ தாங்களாகவே உணவுகளை தாயரிக்க வேண்டிய சூழல் எழுகின்றது. எனவே மனிதர்கள் வாழ்தலிற்கு வழிதேடும் தருவாயில் பட்டிசார் பரவலாக்கம் முக்கியமாகின்றன.
குறிப்பாக உள்ளூர் பொருளாதார மேம்பாடாகவும், விவசாய நடைமுறையின் முக்கியமான கூறாகவும், ஊட்டச் சத்துள்ள உணவாகவும், ஒளடத பொருளாகவும், பாரம்பரிய போக்குவரத்து சாதனமாகவும் பயன்பெற்றதுடன், மக்களின் நம்பிக்கையின் பொருள்மியமாகவும் சுயசார்பான அடையாளங்களை கட்டமைப்பதில் செல்வாக்கு செலுத்துவதுடன் இயற்கையின் சமநிலையை பேணி அதற்கு ஏற்றால் போல் மனிதர்களுக்குள் வாழும் உயிராகவும், செல்வப் பொருளாகவும் பட்டிகள் கவனிப்பை பெறுகின்றது.
இவ்வாறிருந்தும் தற்காலப் போக்கில் பசும்பாலை உணவாக கொள்வதில் மக்கள் ஏன் பின் நிற்கின்றனர்? வுpவசாய செய்கையில் பட்டிகள் செல்வாக்கிழந்தமைக்கான காரணம்? கலப்பின கால் நடைகளின் இறக்குமதிக்கான தேவை? மேச்சற் தரைகளில் திட்டமிட்டு குடியேற்றங்கள் செய்யப்படுவதன் பின்னணி? என்றெல்லாம் கேள்வி எழுமிடத்து பார்த்தும், பார்க்காமலும் எதையும் சிந்திக்காதவர்களாக அல்லது மிகக்குறைவாக சிந்திக்கின்றவர்களாக காணப்படுகின்றோம்.
இதேவேளை இலங்கை பட்டிவளர்ப்பு முறைக்கு பொருத்தமான நிலம், நீர், காலநிலை போன்ற பௌதீக பண்புகள்காணப்படுகின்ற போதும் உடன்பால் முக்கியத்துவத்தின் மேலோட்டமான புரிதலில் அதன் நன்மை, தீமை அறியாது இறக்குமதியாகும் உலர் பெட்டிப்பாலினை நம்பியவர்களாகவும் உள்ளோம்.
‘பெட்டிப்பால் அதிகமான புற்று நோயாளர்களை உருவாக்குகின்றது’ என அண்மையில் வைத்தியர்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட வைத்திய ஆய்வு அறிக்கையினை இவ்விடத்தில் பொருத்திப் பார்த்தல் அவசியம். இருந்தும் பெட்டிப்பாலினை அத்தியாவசியமான உணவாக கொண்டுள்ளோர் இதிலிருந்து விடுபடமுடியாத நிலையில் உள்ளனர். ஆய்வு அறிக்கையில் கண்டுபிடிப்பு மட்டுமே முன்வைக்க பட்டன ஆனால் மாற்றுத் தீர்வுமுறைகள் சார்ந்து குறிப்பிடப்படாதநிலையில் உள்ளூர் பட்டிகளை வலுப்படுத்தல் சார்ந்தும், உடன்பாலின் முக்கியத்துவத்தினையும் எடுத்துரைத்து அரசுக்கும் அழுத்தம் கொடுத்திருக்கவும் முடியும். அவர்களும் மேற்கு விஞ்ஞான அறிவியலை கற்றதினால் போலும் உள்ளூர் அறிவு உற்பத்திகளை முறையாக அங்கிகரிமைக்கான காரணம். எனவே மேற்கத்தேய விஞ்ஞானத்திற்கு எதிரானதாக அல்லது முரண்பட்டதாக காணப்படும் உள்ளூர் அறிவினை அங்கிகரித்தலுக்கான கொள்கை அவசியமாகின்றது.
உலகமயமாக்கம் முதலாளித்துவத்தின் கைகளை மேலோங்க வைத்தன. பாரம்பரியமாக சமூக இருப்பியலுக்கு பலமாகவும், இறுக்கமாகவும் காணப்பட்ட உள்ளூர் பொருளாதார வள மூலகங்களை அழித்துவிடுவதன் மூலம் மேலைத்தேய முதலாழித்துவ சித்தாந்தம் தமது வர்த்தக நடவடிக்கைகளை பரவலாக்கம் செய்கின்றன. இக்கருத்தாக்கத்தின் வெற்றியே மனிதர்களை நுகர்வோர்களாக ஆக்கியமையாகும்.
பல்தேசிய கம்பனிகளின் கொள்கைகளே பெரும்பாலன அரசுகளின் அபிவிருத்தி பிரகடனமாயுள்ளன. இதற்கு அடிப்படை ஒரு அரசின் இருப்பிற்கும், தெரிவிற்கும் காரண கர்த்தாக்களாக முதலாளி வர்க்கத்தினரே காணப்படுபடுகின்றனர்.
இன்றைய உலகு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இருந்தும் முதலாளி வர்க்கம் உயர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். தற்கால சூழ்நிலையில் அன்றாடம் கூலித் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்தலில் கேள்வி எழுந்துள்ளது. ஊரடங்கு சட்டமுறை அனைவரையும் வீடுகளில் தனிமைப்படுத்தலை உட்படுத்தியுள்ளமையினால்,’அனைத்து வசதிகளும் மக்களிற்காக செய்யப்பட்டுள்ளது பொருட்களை உங்கள் வீடுகளிற்கு முன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தொலைபேசி தொடர்புகள் மூலம் பதிவு செய்யுமிடத்து இருக்குமிடங்களிலே கொண்டு வரப்படும்.’என மாறி மாறி அறிவித்தல்கள் வரும் நிலையில்,அண்மையில் தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் நிமிர்த்தம் ‘அன்றாடம் கூலிவேலைசெய்யும் நாங்கள் சாமான் வாங்குவதற்கு காசுக்கு எங்க போறது’ எனும் கூலித்தொழில் செய்யும் பெண் ஓருத்தரின் கருத்தில் நின்று சிந்திக்க வேண்டியுள்ளது.
இதன் பொருட்டு கொரொனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உலக சந்தை தரகர்களான முதலாளிகளே இலாபம் அடைகின்றனர். சாதரணமாக வீதிகளில் உள்ளூர் காய், கறி, இலை வகை, பழங்களையும், உள்ளூர் உற்பத்திகளையும் விற்பனை செய்யும் எத்தனையோ சுயசார்பான வியாபாரிகள், மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆங்காங்கே காணப்பட்ட பட்டியாளர்கள் தங்களது கறவைப் பாலினை மக்கள் நுகர்வதற்கான சந்தற்பம் இல்லாத நிலையில், சில சலுகைகளிற்கு உடன்பட்டு பல்தேசிய கம்பனிகளின் ஆக்கிரிமிப்பு வலையில் ஆள்மயமாக வேண்டி ஏற்படுகின்றது. இச் சந்தற்பத்தில் மில்கோ நிறுவனங்கள்கொள்வனவாளர்களாக உள்ளூர் பாலினை சேகரிப்பு செய்ய, தற்போதைய நிலையில் கம்பனிகள் இயங்காத சூழலில் கொள்வனவுகளை இடைநிறுத்தி மட்டுப்படுத்தியுள்ளமையினால் பட்டிக்காரர்களின் பால் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியதாய் உள்ளன.ஆதலால் பட்டி பராமரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக சவால்களை எதிர்கொள்கின்றனர். இவ்விடத்தில் பட்டிக்காரர்கள் உடன்பாலினை எவ்வாறு வௌ;வேறு உற்பத்திகளாக மாற்றமுடியும் என சிந்திப்பது அவசியமாகின்றது.
பட்டிகளை பால் உற்பத்தியுடன் மட்டுமின்றி அதன் தேவையிiனை எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து இன்மை, விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கட்டுப்பாடு, கொவிட் நோயெதிர்ப்பு சக்தியுள்ளவர்களுக்கு தொற்றுவது குறைவு என பலவற்றை தற்காலத்துடன்விவசாயம், மருத்துவம், போக்குவரத்து போன்ற பல துறைகளுடன் தொடர்பு படுத்தி பார்க்கவும் முடியும்.
இன்றைய நிலையில் பட்டி வளர்ப்பு விளிம்பு நிலைக்குச் செல்வதற்கு இயந்திரங்களின் வருகை மிக முக்கியமான காரணம் என கூறும் நாம் இயந்திரம் முதலாளித்துவத்தின் பிள்ளை என்பதை மறந்து இயந்திரங்களின் மீது பழி சுமத்தும் நிலையே பரவலாக காணப்படுகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தின் நவீன தொழில் முறைகளை கையாள்வதற்காய் கொணர்ந்தவையே இவையாகும்.
பக்கவிளைவற்ற, தூய்மையான பாலினை பல்தேசிய கம்பனிகளிற்கு விற்பனை செய்து எங்கோ இருந்து வரும் எங்களிற்கு எதிரான நஞ்சூட்டப்பட்ட பெட்டிப்பாலினை நுகர்கின்ற நுகர்வாளர்களாக இருக்கும் தருணத்தில் எங்களிற்குரியதை நாங்களே தீர்மானிக்கும் தன்னிறைவான உற்பத்தியாளர்களாக மாறுதல் வேண்டி ஏற்படுகின்றது. இதற்கு பன்முகப்பட்ட நிலையில் கருத்தியல்ரீதியாக சிந்தித்தல், உணர்தல், நடைமுறைப்படுத்தல் முக்கியமாகின்றன.
உள்ளூர் அறிவு உற்பத்திகளை உலக தரத்தில் கொண்டு வருதல் சார்ந்த யதார்த்தத்தினை புரிதல் அவசியம். மேலைத்தேய அறிவியல் முதன்மையானது என்ற நிர்ணயம் செய்துள்ள கருத்துருவாக்கம் கட்டுடைத்து நிலையான செயல்வாத மீளுருவாக்க புரட்சிக்கான பொது வெளிகள் வெகுஐன படுத்தப்பட்டதாய் ஏற்படுத்தல் முக்கியமாகின்றன.காரணம் உள்ளூர் உற்பத்திகளின் முக்கியத்துவத்தினை சமூகத் தேவையறிந்து பரவலாக்கம் செய்வது தொடர்பாக நாம் அனைவரிடமும் இருக்கும் வேகத்தினைவிட, இதனை இல்லாது செய்வதற்கான உத்வேகம் பல்தேசிய கம்பனிகளிடம் மும்மடங்கு உள்ளது.
இ.குகநாதன்