கருமேகங்காள்! கருமேகங்காள்!
திரண்டு இருண்டு வந்து,
வெள்ளம் கரை புரண்டு,
ஓடவைக்கும் வல்லபங்காள்
மனமிரங்கி,
கோடையிலும் கொஞ்சம்
ஓடைப்போலாயினும்,
ஓடிப்போனால் என்னப்பா?
கருமேகங்காள்! கருமேகங்காள்!
தென்னங் குருத்தும், மஞ்சள் முருக்கும்,
மல்லிகையும், மாவிலங்கும்,
மாதுளையும், மலர்க்கன்றுகளும்,
மா, பலா, வாழைகளும்
வாடி வதங்குவதில் என்னத்தான் சுகங்கண்டாய்?
மனமிரங்கி,
கோடையிலும் கொஞ்சம்
ஓடை போலாயினும்
ஓடிப் போனால் என்னப்பா ?
கருமேகங்காள்! கருமேகங்காள்!
மந்திகளும், புள்ளினமும,;
கன்றுடன், கறவைகளும்
காய்ந்தலைந்து போவதிலே
என்னத்தான் சுகங்கண்டாய் ?
மனமிரங்கி,
கோடையிலும் கொஞ்சம்
ஓடைப்போலாயினும்
ஓடிப்போனால் என்னப்பா ?
காற்றில் நெருப்பெரித்து,
கற்றாழையில் நீர் பதித்து,
வெக்கை தணிவிக்க,
வெள்ளரியும் விளைவித்தாள் பூமித்தாயவள்!
வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!
ஆயினும்,
கருமேகங்காள்! கருமேகங்காள்!
மனமிரங்கி,
கோடையிலும் கொஞ்சம்
ஓடைப்போலாயினும்,
ஓடிப்போனால் என்னப்பா?
சி. ஜெயசங்கர்.
1 comment
சி.ஜெயசங்கர் அவர்களின் கவிதை சிறப்பு…எடுத்துரைப்பு வடிவம் சிறப்பாக உள்ளது…