இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாய் இன்றளவும் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும், மலையக மக்கள் அவர் தம் வாழ்வியல் என்பது இலக்கியங்கள் வழி உலகின்கண் பேசு பொருளாயிற்று. இவ்வாறு இலக்கியங்கள் வழி மலையகமக்கள் அவர்தம் வாழ்வியலை வரைந்திட்ட பலருள், என். எஸ். எம். ராமையாவின் பணியும் பங்கும் அளப்பெரியது. இயல்பான மொழியும், யதார்த்தமான பாத்திர வார்ப்பும், கதை புனையும் திறனும் கைவந்த ராமையாவின் சிறுகதைகள், மலையக சமுக வாழ்வியலின் பிரதிபலிப்புகளாக மிளிர்கின்றன.
ஒருகூடைக் கொழுந்து, நிறைவு, வேட்கை, தீக்குளிப்பு என இன்னோரன்ன சிறுகதைகளை படைத்த ஆசிரியரின் கதைக்களத்தெரிவு எப்போதும் மலையகமக்கள் வாழ்வியலோடு, ஒன்றித்தாகவே தேர்வு செய்யப்பட்டு, படைப்பாக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில், சிக்கித்துயருறும் மக்களின் பிரச்சினைகளை, அவர்களது ஆசாபாசங்களை வெளிக் கொணரும் அவரது சிறுகதைகள், காலமுழுமையுடன், காலத்தின் மறுவாசிப்புக்கு உட்பட்டுக்கொண்டேயிருக்கும் சமுகமொன்றின் வாழ்வியலின் குறிக்காட்டியாக அமைகின்றன.
1961 ஆம் ஆண்டு தினகரன் இதழில் பிரசுரமாகிய ஒரு கூடைக் கொழுந்து, கால மாற்றத்திற்கு ஏற்ப சமுக மாற்றங்கள் நிகழாத, மலையக மக்கள் அவர்தம் வாழ்வியலின் குறியீடாக அமைந்து, இற்றைவரை அவர்தம் வாழ்வியலில் நிலவும் மிடிமை நிலையை, அச்சொட்டாகப் பிரதிபலித்துகாட்டுகிறது. தேயிலை தோட்டத்தை கதைக் களனாகக் கொண்டியங்கும் சிறுகதை, உழைக்கும் கரங்கள் மீது, வீணே திணிக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும், அவற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள பிரயத்தனப்படும் உழைக்கும் கரங்களையும் குறியீடாகக் கொண்டு, லட்சுமி எனும் பாத்திரத்தினூடாக நகர்த்திச் செல்லப்படுகிறது.
ஒருநாள், 57றாத்தல் கொழுந்தை லட்சுமி எடுத்துவிடுவதும், அவளைவிட அனுபவமுடைய பெண்கள் இதுவரை, அத்தனை றாத்தல் கொழுந்து எடுக்காமையின் காரணமாக ஏற்படும் உட்பூசலும், அதுவே அவளது கன்னியத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக அமைய, 61 றாத்தலாக எடுத்து சவாலை முறியடித்து, மற்ற மலைக்கு மாறிப் போவதாகவும் கதை, லட்சுமி, கங்காணி, கணக்குப்பிள்ளை உட்பட இன்னோரன்ன பாத்திரங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை, தோட்ட உத்தியோகத்தர்கள் தரும் நெருக்கடிகளை கதை, பிரதிபலித்துக்காட்டுகிறது.
ஒரு கூடைக் கொழுந்து வழியே சொல்லப்படும் கதை இதுவாக அமைய, கதை வழியே வெளிப்பட்ட, இற்றைவரை மாற்றங் காணாத சமுக வாழ்வியலே, அவர் தம் வாழ்வாகத் தொடர்கிறது என்பதே கசப்பான உண்மை.
காலனிய காலத்தில், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை நிலங்களில் வேலைக்கு அமர்த்தப் படுவதற்காக கொண்டுவரப்பட்டவர், வந்தேறு குடிகளாகவே இற்றைவரை தம் வாழ்வியலை நடத்திச்செல்கின்றனர். கொழுந்து கூடையே அவர்தம் அடையாளமாகவும், குறியீடாகவும் மாறிப்போன வாழ்க்கையில் அவர்தம் உழைக்கும் கரங்களேயன்றி, வேறெதுவும் அவர்களின் வாழ்வாதாரமாக அமையாத வாழ்வே, இற்றைவரை தொடர்கிறது; அதனையே கதையும் பிரதிபலித்து நிற்கின்றது.
கங்காணிக்கும் கணக்குபிள்ளைக்கும் இடையில் குறிப்பாக, தேயிலை பறிக்கும் பெண்கள் சிக்கிப்படும் ஏச்சுகளும் பேச்சுகளும் ஏராளம்; கங்காணி ஆதிக்க சக்தியின் பிரதிநிதியாய் நின்று, தேயிலை தோட்டங்களில் செயற்படும் விதமோ ஆதிக்கத்தின் உச்சம். என ஒடுக்கப்பட்ட மக்கள் குழுமத்தில், ஒடுக்கப்பட்ட பிரிவினருள் ஒரு பகுதியினரால் அவர்கள் மேலும் ஒடுக்கப்படும் அவல நிலையையும் கதை எடுத்துக்காட்டுகிறது.
ஒடுக்கப்படும் வாழ்வியல் சூழலுக்கிடையிலும் அவர்தம் நடைமுறைகள் பேணப்படுவதன் வெளிப்பாடாகவே பொலி போடுதல் நிகழ்வு கதை வழி எடுத்தாளப்படுகிறது. ( பொலி போடுதல் என்பது கொழுந்து நிறையில், முதல் பிடிக் கொழுந்தைக் கூடைக்குள் போடும் போது, கொழுந்து பொலிய வேண்டும் எனும் நோக்கில், இறைவனை வேண்டி, சகுனம் பார்ப்பது போல் சொல்லப்படுவது. )
சின்னதொரு தகரலாம்பும், தேயிலை மிலாறும் அவர்தம் வாழ்வியலில் பிரிக்க முடியாத சொத்துக்களாய், விளங்குமாற்றை கதையில் சித்தரிக்கப்படும் குடும்பச் சூழல் வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வாறு 1961 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கூடைக் கொழுந்து வழியே தெரிய வந்த வாழ்வியல் கோலம்தான், இற்றைவரை அவர்களின் வாழ்வியலாகத் தொடர்கிறது. பெரும்பாலும் இலக்கியங்கள் காலத்திற்கேற்ற மனிதர்களை உருவாக்குவதுடன், சமுக மாற்றத்திற்கான எதிர்வினையாகத் தொழிற்படுதல் இயல்பு. ஆயினும், 1961ஆம் ஆண்டு ஒரு கூடைக் கொழுந்து வழியே, சொல்லப்பட்ட உழைக்கும் அவர்தம் கரங்களன்றி, வேறெதுவும் அவர்தம் வாழ்வாதாரமாக அமையாத சூழலே, இப்பேரிடர் காலத்திலும் தொடர்வது சிந்திக்கப்பட வேண்டியதொன்றே.
பிராஜாவுரிமை பெற்றுக்கொள்ளல் முதல், 1000 ரூபாய் சம்பளம் பெறுவதுவரை அவர்தம் வாழ்வியலில் எதிர்க்கொள்ளும் சவால்களும், அவலங்களும் எண்ணில் அடங்கா. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், முதுகெலும்பாய் விளங்கும் மக்களின் வாழ்வியல் என்பது இற்றைவரை, பல இன்னல்களை சந்தித்தபடியே நகர்ந்து செல்கிறது. ஒருகூடைக் கொழுந்தே, அவர்தம் வாழ்வியலில், வாழ்வாதாரமாகவும், மிடிமையாகவும் தொடர்கிறது.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.