Home இலக்கியம் சீறு திரைப்படம்  : சகோதரத்துவத்தை முன்மொழிதல் – ம.கருணாநிதி…

சீறு திரைப்படம்  : சகோதரத்துவத்தை முன்மொழிதல் – ம.கருணாநிதி…

by admin

றெக்க (2016) திரைப்படத்தின் இயக்குநர் ரத்தினசிவா இயக்கத்தில் வெளிவந்த சீறு படத்தில் ஜீவா கதாநாயகனாகவும் ரியாசுமன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு டீ.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நவ்தீப், வருண், சதீஷ் கதாபாத்திரங்கள் மற்றும் பிற பாத்திரங்கள் கதையில் இணைந்துள்ளது.  கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் திரில்லராக கதை நகர்கிறது. இப்படத்தின் கதைநிகழிடங்களாக கும்பகோணம், மாயவரம், சென்னையை (படத்தின் பிற்பகுதி) மையங்கொண்டுள்ளன. சீறு படம் 2020, பிப்ரவரி முதல்வாரத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வந்தவேகத்தில் இப்படம் திரையரங்குகளில் தூக்கப்பட்டது. ஒருசில திரையரங்குகளில் ஓடிய இப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள்  மூடப்பட்டன.

சீறு படம் : கும்பகோணம் மாயவரம் புறவழிச்சாலையில் இரண்டு பெண்கள் மட்டுமே காரில் செல்வதாகப் படத்தின் தொடக்கக் காட்சி. இக்காட்சிக்குப் பின்னணியாக அவதாரம் படப்பாடல் ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல’ எனும் பாடலில் இடம்பெற்ற ‘எண்ணமெல்லாம் வண்ணம்மம்மா.எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாறுதம்மா’எனும் பாடல்வரி வாகனத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாகனத்தினை ஓட்டிக் கொண்டே இருவரும் இளையராஜா பாடல் என்றும் அழியாது. நம்ம தலைமுறை அடுத்த தலைமுறை இளையராஜா பாடலைக் கேட்டுத்தான் காதலே பண்ணுவாங்க என உரையாடிக்கொண்டே  காரை ஓட்டிச் செல்கின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைப் படத்தின் தொடக்கத்திலேயே காட்டிச்செல்கிறார் இயக்குநர்  ரத்தினசிவா.  பொய்யான காவலர்களால் இவ்விரு  பெண்களுக்கும் பிரச்சினை என்பதை பதட்டத்தில் இவர்கள் செல்போன் குரல்செய்தி அனுப்புகிறார்கள். இச்செய்தி அறிந்து கதாநாயகன் விரைந்து வந்து அதிரடியாகச் சண்டை இட்டு, இப்பெண்களைக் காப்பாற்றுகிறதோடு அப்பெண்களுக்கு, ‘முடிந்தவரைப் பிறருக்கு உதவுகள் அதுவே எனக்கான கைமாறு’ என்றுசொல்லிச்செல்கிறார். மாயவரத்தில் கதாநாயகன் மணிமாறன் கேபிள் தொலைக்காட்சி நடத்தி வருகிறார். இவரின் கொக்கரக்கோ தொலைக்காட்சி  எம்எல்ஏ ஊழலை அம்பலப்படுத்தப்படுகிறது. மாணவிகள் மதுக்கடைக்கு எதிராகப் போராடுவதை கதாநாயகனின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இதை மக்கள் பிரச்சினையாக்கி எம்.எல்.ஏ.வுக்குச்சொந்தமான மதுக்கடையை ஒழித்துக்கட்டியதாலும் எம்.எல்.ஏ.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கதாநாயகனை அழித்து விடவேண்டும் என நினைக்கிறான். அதற்காகச்  சென்னை பிரபல ரவுடி மல்லியை அழைக்கிறான். மணிமாறன் வீட்டிற்கு ரவுடி மல்லி வர, கதாநாயகனின் சகோதரி நிறைமாதக் கர்ப்பிணியைப் பார்க்கிறான். பிரசவ வலியால் துடிப்பதைப் பார்த்து, இரக்கம் கொண்டு மருத்துவமனையில் சேர்த்ததோடு   குருதிதானம் கொடுத்துக் காப்பாற்றுகிறான். கதாநாயகன் தன் தங்கையை யார் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்திருப்பார் என்பதை யோசித்துப்பார்க்க யாரென்று பிடிபடவில்லை. மனதில் அகப்படவுமில்லை. பின்னர் தன்னை சந்திக்க வருவதாகச்சொன்ன ரவுடி மல்லிதான் தன் சகோதரிக்கு உதவி செய்துள்ளான் என்று அறிந்து மல்லிமீது கதாநாயகனுக்கு ஓர் ஈர்ப்பு உருவாகிறது. தன்னைக் கொல்ல வந்தவனைக் கதாநாயகன் தேடிச்செல்கிறான். அங்கு மல்லிக்குப் பிற ரவுடிகளால் தாக்குதல் ஏற்படுகிறது. இதனைச் சமாளித்துக் காப்பாற்றுகிறான். மல்லியைக் கொல்ல நினைத்தவர்களைக் கதாநாயகன் கொல்கிறான்.

இதற்கு இடையில் மற்றுமொரு கதை ஓடுகிறது. மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த பவித்ரா எனும் மாணவியின் கதை படத்தின் பிற்பகுதி அமைந்ததோடு படத்திற்கு வலுசேர்க்கிறது. பவித்ராவிற்கென ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது. “நாடு நாசமா போயிட்டு இருக்க. நான் போய் நாசாவுல என்ன பண்ண போறேன்.” “நான்  கிரிமினல் லாயர் ஆகப் போறேன்.” என பவித்ரா பேசுவது அதிகாரத்தில் இருக்கும் வழக்கறிஞரான வில்லன் ( அசோக் மித்ரன்) கோபம் கொள்கிறான். இவள் பேச்சினால் வில்லனான வக்கீல் கொல்வதற்குப் பல அடியாட்களை அனுப்பிக் கொல்கிறான். வில்லனோ பவித்ராவைத் திட்டமிட்டுக்கொன்று கதையைமுடித்து அவளது  தாத்தா வாயிலாகவே தற்கொலை எனச்சொல்ல முற்படுவது அதிகாரத்தின் செயலாகக் காட்டியுள்ளார் இயக்குநர். இக்காட்சி மட்டுமே படத்தில் அழுத்தம் பெற்றுள்ளது. இக்காட்சி மருத்துவர் ஆகவேண்டும் என்கிற கனவோடு படித்து அதிக மதிப்பெண் எடுத்தும் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அனிதாவை நினைவிற்குள் கொண்டுவருகிறது. அனிதா போன்ற மாணவிகள் நல்ல மதிப்பெண் எடுத்தும் தன் குறிக்கோளை அடையமுடியாத பெண்ணின் கதையைச் சீறு படம் கொண்டிருப்பது படத்தின் கதையோட்டத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. கிராமப்புறம் சார்ந்த நல்ல மதிப்பெண் எடுத்த ஏழை மாணவிகளுக்கு  உதவவேண்டும்  என நினைக்கும் கதாநாயகனின் குணமாகப் பல இடங்களில் இப்படத்தில் சுட்டிக்காட்டுகிறார் இயக்குநர். பவித்ரா இறப்பிற்குப்பின் பவித்ராவின் தோழிகள் ஒன்றிணைந்து அதிகாரத்திற்கு எதிராகப் போராடுதல் என்கிற தன்மையில் படம் பயணமாகிறது. சீறு படத்தின் ஒட்டுமொத்த கதைக்கரு சகோதரி பாசத்திற்கு ஏங்கும் கதாநாயகனின் நடவடிக்கை சார்ந்ததாக அமைகிறது.

ஒரு பெண் தன்னை அண்ணா என்று கூப்பிட்ட உடனே கதாநாயகன் மிகையுணர்ச்சியாகத் தன்னை, பாசத்திற்காக ஒப்படைக்கிறான். இன்றைய சூழலில் அண்ணன் என்று அழைப்பதே ஆணுக்குப் பிடிக்காது எனும் ஆணாதிக்க மனோபாவத்தை இப்படத்தில் மாற்றப்பட்டுள்ளது. உடன்பிறந்த தங்கை காதல் கொண்டால் தன் அண்ணனே தங்கையைக் கழுத்தறுக்கும் சகோதரப்பாசமற்ற     சூழலில் தன் தங்கைக்கு தன் நண்பருக்கே திருமணம் செய்துவைப்பது சகோதரப்பாசத்தைக் காட்டுகிறது.

நாயகனை ஒருபெண்  அண்ணனென்று உச்சரித்தால் அப்பெண்ணுக்கு எவ்வுதவியும் செய்யத்துணிகிறான். இவனுடன்பிறந்த சகோதரியை மட்டும் சகோதரியாக நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும், பெண்குலம் பாதுகாக்க வேண்டும் எனும் தன்மையில் ஓர் அண்ணனாக நின்று பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குக் கதாநாயகன் அதிரடியான சண்டையிடுகிறான். மாயவரத்தில் தொடங்கிய கதை சென்னையை நோக்கி நகர்ந்து, சென்னையிலுள்ள உடன்பிறவாச் சகோதரிகளுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி, தன் உடன்பிறந்த சகோதரிக்கு உதவிசெய்த மல்லியையும் காப்பாற்றி தன் ஊருக்கு அழைத்து, மாயவரத்தில் மகிழ்ச்சியாக  வாழ்வதுபோன்று படத்தின் கதை நிறைவுக்குச்செல்கிறது. மேலும் ரவுடியாக இருந்த மல்லி திருந்தி மனிதனாக வாழ்வதற்கு நட்பே வழிவகை செய்துள்ளதாகப் படத்தில் பார்க்கமுடிகிறது. கதாநாயகனின் தங்கை  கோவிலுக்குச்செல்லும் போதெல்லாம் கருவில் வளரும் குழந்தைக்கு கோவில் மணியோசையால் பாதிப்பு ஏற்படும் என்பதற்காகவே வழிவழியாகத் தன்குடும்பம் செய்துவரும் கோவிலுக்கான மரியாதையை தன் தங்கைக்காகத் தள்ளிப்போடுகிறான் கதாநாயகன். ஆதலால், அக்கோயிலில் மணி கட்டப்படாமல் இருக்கிறது. தன் சகோதரி குழந்தை பெற்றெடுத்த  பின்னர் தஞ்சாவூர் என்ன தமிழ்நாட்டுக்கே கேட்கும் அளவிற்குப் பெரிய மணியைக்கட்டி விடுகிறான்.  பின்னர் கதாநாயகன் மணிமாறன், நண்பர்கள், சகோதரிகள் அனைவரும் சிரித்தவாறே கோவில்மணியை அடிப்பதோடு படம் நிறைவுபெறுகிறது.

மாயவரம் மணிமாறன் ஆகிய ஜீவா எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான பாவனையை இப்படத்திலும் பார்க்கமுடிகிறது. ஜீவாவின் இயல்பான கிண்டல் பேச்சு, அதிரடி சண்டைகள் போன்ற காட்சிகள் இப்படத்திலும் தொடர்ந்திருப்பது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நட்பிற்கும் சகோதரத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை மட்டும் இப்படத்தில் முதன்மை பெறுகிறது. டீ.இமான் இசையில் உருவான மற்ற படங்களில் பாடல்களனைத்தும் படம் வெளிவருவதற்கு முன்பே வெற்றிப்பாடலாக ஆகிவிடும். சீறு படத்தில் பார்வையற்ற பாடகரான திருமூர்த்தி குரலில் பார்வதியின் கவிதை வரிகளான ‘செவ்வந்தியே மதுவந்தி இவளே புவியின் ராணியே’ எனும் பாடல் படம் பார்ப்பதற்கான கூடுதல் ஈர்ப்பை உண்டு செய்திருக்கிறது. இப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் பெருகிவரும் இன்றைய சூழலில் பெண்கள்படும் துன்பத்திற்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதும், தானே முன்னின்று போராடவும், துணிச்சலாகப் பிரச்சினைகளுக்கு எதிராக நீங்களே போராடுங்கள், சுயநம்பிக்கை கொள்ளுங்கள்  எதையும் செய்யலாம் என்கிற தொனி படத்தில் வெளிப்பட்டுள்ளது. மானபங்கத்திற்கு ஆளாகும் பெண்ணினத்தைக் காப்பதற்காக, நட்புடனான சகோதரத்துவத்தை முன்மொழியும் படமாக  சீறு  திரைப்படம் அமைந்துள்ளது.

  • ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்.-625 514.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More