வல்வெட்டித்துறையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குழுவொன்று காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட பணம், நகை, தொலைபேசி என பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது..
வல்வெட்டிதுறை நெடியாகாடு எனும் பிரதேசத்தில் கடந்த தைப்பொங்கல் தினத்தில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது சிறுவனொருவன் புகைப்பிடிப்பதை ஒரு குழுவினர் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பின்னர் அந்த வீடியோவை குறித்த சிறுவனின் தாய் தந்தையரிடம் காட்டப் போவதாக சிறுவனை மிரட்டியுள்ளனர்.
இவ்வாறு மிரட்டி வந்த நிலையில் சில தினங்களின் பின்னர் குறித்த வீடியோவை மீண்டும் பெற்றோரிடம் காட்டப்போவதாகவும் இல்லாவிட்டால் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துவருமாறு சிறுவனிடம் அந்தக் கும்பல் கூறியுள்ளது.
இதனையடுத்து சிறுவனும் வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என நாளாந்தம் கொண்டு வந்து கொடுத்துள்ளார். இதற்கு மேலாக வெளிநாட்டு நாணயத்தாள்களையும் கொண்டு வந்து கொடுத்துள்ளார். இவ்வாறாக தொடர்ந்து சிறுவனை மிரட்டி வந்த அந்தக் கும்பல் வீட்டிலிருந்த ஏனைய பல பொருட்களையும் எடுத்துவருமாறு கூறி அதனையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு சில மாதங்களாக குறித்த சிறுவனை மிரட்டி பணம் மற்றும் நகைகளை பெற்று வந்த கும்பல் நாட்டில் கொரோனோ அச்சத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினைத் தொடர்ந்து இரவு வேளையில் திருட்டிலும் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அப்பகுதியில் வீடொன்றில் கூரைபிரித்து திருட்டில் ஈடுபட்டுள்ளது. அதே போன்று இன்னொரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் அடங்கிய கும்பல் இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இதனையடுத் அவர்கள் ஐந்துபேரையும் கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சிறுவனை மிரட்டி பணம் நகை என்பன பறித்துவந்த விடயம் உள்ளிட்ட ஏனைய பல திருட்டுக்கள் தொடர்பிலும் வெளிவந்துள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து எட்டரை இலட்சம் ருபா பெறுமதியான திருடப்பட்ட நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், தொலைபேசிகள் எனப் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற காவல்துறையினர் குறித்த சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் பருத்திதுறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #கைது #வல்வெட்டித்துறை