இறப்பு இயற்கைத்தான்
இப் பதில் சொல்லிப் பழகிய
உயிர்ப்பு மனிதர்கள்
உமிழ்ந்து விழுங்கிய
இயற்கையின் கொடைகள்
கொஞ்சமா? நெஞ்சமா?
மரம், ஒளி, காற்று
நீர், ஆகாயம்;
இவையன்றி ஓர் தெய்வம்
மூதாதையினர் தான்
எம் மூதாதைச் சனங்களிற்கு.
ஆழ்ந்த புலமையின் பிரதிபலிப்பு
அவர் நம்பிக்கையின் தெய்வம்
அந்த இயற்கைத்தான்.
கற்சிலைகளையும்,
காட்சிப்படாத காட்சியையும்
கடவுளாம் என்று சொல்லி
இயற்கை என்ற கடவுளையும்
பலியிட்ட பாவிகள்
நம் தலைமுறை.
பேராசைப் பயணத்தில்
பச்சைப் பசுமைகளை அழித்துவிட்டு
குறுகிய சிந்தனையில்
சிறு குடில்களாக
தொடர்கின்றது
பச்சை வீட்டு விவசாயம்
புதிய கண்டுபிடிப்பாம்
என்ற பெயரில்…
மரத்தில் காணாத
மகிமையோ கண்டுவிட்டது
மனித மூளை?
மாடிக் கட்டிடங்களில்…
வீழ்ந்தது வெறும்
மரங்களல்ல…
உணவுச்சங்கிலியின் அத்திவாரம்
நிற்கின்ற மரமும்
வெறும் நிழல்ல…
ஓர் உயிர் குழுமத்தின்
உறைவிடம்.
சுவாசம் இன்றி
ஒரு துரும்பையும் அசைக்கும்
ஆற்றல் அற்றவர்கள் நாம்
சுவாசக் காற்றிலும்
பாதி தூசி
மாடி வீட்டில்
குளிருது ஏசி
கனகர வாகன புகையும்
போதையாய் புகைக்கும் புகையும்
கலந்திராத இடம் காண…
தவித்தது உண்மையே
கனவாய் போன அந்த
நினைப்பு
சில நாட்களாய்
நிஜமாய் தொடருது எம்மோடு.
நீர் இன்றி
தாகம் தணிக்க
சோடாக் கொம்பனிகள் குவிந்தது
கழிவு நீர் கால்வாய்கள் மலிந்தது
தொழிற்சாலைக் கழிவையும்
இரசாயன குப்பையையும்
சுமந்துவரும் தெப்பமாகியது
அந்த கடலும், நதியும்
நீர் முதல் அனைத்தம்;
மனிதப் படைப்புக்கள் பல
இயற்கைக்கு இடைஞ்சல் தான்
விதிவிலக்காக ஒரு வைரஸ்
இயற்கைக்கு விடுமுறை கொடுத்துவிட்டது.
காற்றும் மரமும்
கலப்பில்லாத காதல் பழகி
நதியோடு சேர்ந்து இசை மீட்டி
கடலின் மேல்
புது நடனமாடி
நிம்மதியாய் விடுமுறையைக்
கொண்டாடுகிறது.
புகைக்கு இங்கு இடமில்லை
கால்கள் கிழறிய புழுதிக்கு வாய்ப்பில்லை
கழிவு நீர் முதல்கள் ஓய்ந்துவிட்டது.
கடலில் புது நீலம் பாய்ந்துவிட்டது.
காற்றில் நறுமணம் கமழ்கிறது
நாளை இயற்கையோடு பிறக்கிறது.
கெட்டதில் ஓர் நல்லதாம்
நாம் கெடுத்ததெல்லாம்
தூய்மையாய் உள்ளதாம்.
மீண்டெழும் மனித வரலாற்றிற்கு
நல் வழியாக மாற
நிம்மதியாய் ஓய்வெடுக்கிறது
இயற்கை
கேள்விக்குட்படுத்த வேண்டாம்
அதன் இருப்பை
இயற்கையோடு பொருந்தியதே
இனிமையான வாழ்க்கை
இனியும் வேண்டாம்
பொருளாதார வேட்கை.
த.நிறோஜன்.
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.